ஐ.பி.எல் இன் இந்த வார போட்டிகளை மனதில் வைத்து 'Rivalry Week' என ஒரு தனியார் தொலைக்காட்சி விளம்பரம் செய்திருந்தது. அந்தத் தொலைக்காட்சியின் எண்ணத்திற்கேற்ப முதல் போட்டியிலேயே பகை பற்றி எரிந்திருக்கிறது.
விராட் கோலி - கம்பீர் + நவீன் உல் ஹக் இடையேயான அந்த சண்டைதான் இப்போது இணையத்தில் பயங்கர வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சில ரசிகர்கள் இந்த சண்டைக்கு மாஸாக பின்னணி இசையை போட்டு நெருப்பு உருண்டைகளை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ யார் பக்கம் நியாயம் இருக்கிறது என பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சண்டை இந்த விதத்திலெல்லாம் விவாதிக்கப்படுவேதே ஒரு கொடூரமான விஷயம்தான். இப்படி ஒரு சண்டை அவசியம்தானா எனும் இடத்திலிருந்துதான் விவாதங்கள் தொடங்கியிருக்க வேண்டும்.

போட்டி முடிந்த பிறகு அங்கே நடந்த அந்த உரசல் சமாச்சாரங்களை பார்க்கையில் அது ஒரு போர்க்களம் போன்றுதான் தோன்றியது. போட்டிக்கு இடையே கோலியும் நவீன் உல் ஹக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நவீன் எதோ சொல்ல கோலி தனது ஷூவை காண்பித்து நவீனை எதோ வசைபாடுகிறார். போட்டி முடிந்து கை குலுக்குகையில் கோலியும் கம்பீரும் அத்தனை விரோதத்துடன் கை குலுக்கிக் கொள்கிறார்கள். தன்னிடம் பேச நினைத்து முன் வரும் கோலியை இடதுகையால் புறந்தள்ளுவதை போல நவீன் நடந்து கொள்கிறார். எல்லாம் முடிந்ததென நினைத்த போது கம்பீரும் கோலியும் அத்தனை வெறியோடு நேருக்கு நேராக மோதுவது போல வந்து வெறி தீர வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
விளையாட்டின் ஆன்மாவையும் அதன் அடிப்படையையுமே குலைக்கக்கூடிய சமாச்சாரங்கள் இவை. இப்படியான மோதல்கள் நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் ராபின் உத்தப்பாவும், அனில் கும்ப்ளேவும் நேரலையில் பகிர்ந்து கொண்ட விஷயங்களுக்கு நாம் கூடுதல் கவனத்தை கொடுத்தாக வேண்டும். ராபின் உத்தப்பா பேசுகையில், 'நான் விராட் கோலியின் ஆட்டத்திற்கு பெரிய ரசிகன். ஆனால், அவரின் கொண்டாட்டங்களுக்கு ரசிகன் கிடையாது.
ஒரு 21 வயது பையன் இதே போன்று ஆத்திரமாக ரியாக்ட் செய்கிறான். சண்டைக்கு செல்கிறான் எனில் அதிலிருக்கும் நியாயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். தவறு செய்து கற்றுக்கொள்ளும் காலக்கட்டத்தில் அந்த பையன் இருக்கிறான். ஆனால், கோலி மாதிரியான ஒரு வீரர் இத்தனை வருட அனுபவத்திற்கு பிறகும் இப்படியான செயல்களில் ஈடுபவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதேதான் கம்பீருக்கும். இவர்கள் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருக்கவே கூடாது' என்றார்.

ராபின் உத்தப்பாவின் கூற்று 100% சரியானது. இந்த சண்டையை வைத்துக் கொண்டு இதற்கு முன்பு கோலியும் கம்பீரும் போட்ட சண்டையையும் எடுத்து வந்து எதோ இரண்டு மாஸ் ஹீரோக்கள் இருவர் சண்டை செய்வதை போல சிலர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான கொண்டாட்டங்களெல்லாம் உண்மையில் கொண்டாட்டங்கள் அல்ல. கோலி மற்றும் கம்பீரின் போதாமைகளை வெளிக்காட்டுவதற்கான சாட்சிகளாகத்தான் அவை எஞ்சி நிற்கின்றன. ஒரு காலத்தில் கம்பீர் கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த போது கோலி பெங்களூருவில் இளம் வீரராக இருந்த போது அந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. அது நடந்து 10-12 வருடங்கள் இருக்கும். நாம் அந்த சண்டையையும் இந்த சண்டையையும் ஒப்பிட்டால் அதைவிட கேவலமான விஷயம் எதுவும் இருக்காது.

எனில், 10-12 வருடங்களுக்கு முன்பு கோலியும் கம்பீரும் எந்தளவுக்கு முதிர்ச்சியோடு இருந்தார்களோ அதே அளவுக்கான முதிர்ச்சியோடுதான் இப்போதும் இருக்கிறார்கள். மனரீதியாக இந்த 10-12 ஆண்டுகளின் எந்த வளர்ச்சியையும் பக்குவத்தையும் அடையவே இல்லையா? இந்த 10 ஆண்டுகளில் கம்பீர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றுவிட்டார். அரசியலுக்கு வந்து எம்.பி யே ஆகிவிட்டார். இப்போது ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இப்படிப்பட்டவர் எப்படியான முதிர்ச்சியை அந்த சூழலில் வெளிக்காட்டியிருக்க வேண்டும். சண்டையை விலக்கி விடும் இடத்தில்தான் அவர் இருந்திருக்க வேண்டுமே ஒழிய எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் இடத்தில் அவர் இருந்திருக்கக்கூடாது. விராட் கோலி தாமாக பேச முன் வந்தும் நவீன் உல் ஹக் முறுக்கிக் கொண்டு செல்கிறார். ஒரு பயிற்சியாளரே சண்டைக்கு தயாராக இருக்கும் போது அவருடைய சகா இப்படியான செயலில் ஈடுபட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
இதே விஷயம்தான் கோலிக்கும். கோலி 2015 இல் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனான சமயத்தில் ஸ்டீவ் வாஹ் இப்படி பேசியிருந்தார்.
'கோலி இன்னும் பக்குவப்பட வேண்டும். அவர் சில சூழல்களில் கொஞ்சம் அதிகமாகவே ரியாக்ட் செய்கிறார். களத்தில் நடக்கும் சில விஷயங்களை ரொம்பவே தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார். சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு பெரிதாக காது கொடுக்காமல் பக்குவமாக கடந்து செல்ல வேண்டும்.

இந்த விஷயத்தில் அவர் தோனியை முன் மாதிரியாக கொள்ள வேண்டும். தோனி யாருக்கும் எதுக்கும் பதில் சொல்லமாட்டார். தன்னுடைய பணியின் மூலமே பதிலடியை கொடுப்பார்.'
ஸ்டீவ் வாஹின் இந்த அறிவுரையை எந்த மாற்றமும் இன்றி இப்போதும் அப்படியே விராட் கோலிக்கு வழங்கலாம். தன்னுடைய 20 களில் ரசிகர் கூட்டத்தை நோக்கி நடுவிரலை உயர்த்திய கோலியாகத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். இடையில் இந்திய அணிக்கு கேப்டனாகி, யாரும் முறியடிக்க முடியாத எக்கச்சக்க சாதனைகளை செய்து தனக்கென தனியொரு அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார். சமீபத்தில் அவரது கரியரிலும் எக்கச்சக்க சறுக்கல்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார். கிரிக்கெட்டில் அவர் பார்க்காத விஷயமே கிடையாது. கோலியை கோடிக்கணக்கான இளைஞர்கள் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக நினைத்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த சண்டையின் மூலம் அந்த இளைஞர்களுக்கு என்ன செய்தியைத்தான் சொல்ல வருகிறார்?
நிதானமோ பொறுமையோவெல்லாம் வேண்டவே வேண்டாம். எடுத்தவுடனேயே யாராக இருந்தாலும் சட்டையை கிழித்துக் கொண்டு சண்டைக்கு செல்லுங்கள் என்கிறாரா?
இவர் இந்த குணாதிசயத்தோடு இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதேநேரத்தில், கொஞ்சம் துடிப்பான ஆள். கோபக்கார ஆள் என்பதற்காக ஒரு நற் சூழலையே கெடுக்கும் வகையில் நடந்துக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கம்பீருக்கு சொன்னதுதான், கோலிக்கும். கோலியால் அந்த இடத்தில் அந்த சண்டையை ஆரம்பத்திலேயே வளரவிடாமல் தடுத்திருக்க முடியும். அவர் அப்படி செய்யாமல் போனது வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பக்குவத்தை அவர் எட்டாததையே காட்டுகிறது.
இங்கே இந்த சண்டையை பற்றி அனில் கும்ப்ளே பேசியதையும் கவனிக்க வேண்டும். 'களத்தில் நமக்குள் எக்கச்சக்க உணர்வுகள் ஏற்படும். அவற்றையெல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. அப்படியே வெளிக்காட்டினாலும் அதை அந்தத் தருணத்தில் களத்திற்குள்ளேயே முடித்துவிட வேண்டும். ஆட்டம் முடிந்ததோடு எல்லாம் முடிந்தது.

ஆட்டத்தை முடித்து எதிரணியுடன் கை குலுக்குவது எதிரணிக்கு கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல. அது இந்த கிரிக்கெட்டுக்கே கொடுக்கும் மரியாதை. துரதிஷ்டவசமாக இவர்கள் அதை செய்யத் தவறிவிட்டனர்.' என்றார்.
கை குலுக்கும் போது எல்லா பிரச்சினையையும் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் கை குலுக்கும் போதுதான் உக்கிரமாக வார்த்தை மோதலிலேயே ஈடுபட தொடங்கினார்கள். கிரிக்கெட்டின் ஆன்மாவை குலைக்கும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை பாரபட்சமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்.
வீரர்களான நீங்கள் எப்படியான செயல்களில் ஈடுபட்டாலும் பொம்மை போல தலையாட்டி ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என்பதை இந்த ஆங்க்ரி பேர்டுகளுக்கு உணர்த்தியாக வேண்டும்.