காட்டுவழிப் பாதையான லெக் ஸ்பின்னர்களின் மாய உலகிலிருந்து `ஃப்ளிப்பர்' என்னும் பிரம்மாஸ்திரம் காணாமல் போயிருக்கிறது.
ஒரு திரைப்படம் முதலில் பார்க்கப்படுவது இயக்குநரின் மனக்கண்ணில்தான். ஒரு பந்தின் பயணமும் பௌலரால் அப்படித்தான் முன்கூட்டியே ஓட்டிப் பார்க்கப்படும். நினைத்தபடி 100 சதவிகிதம் பந்தைச் சரியாக நகரவைப்பது சுலபமில்லை. அதிலும் பிழை சதவிகிதம் லெக் ஸ்பின்னர்களின் விஷயத்தில் சற்றே அதிகம்தான்.
மணிக்கட்டை ஹெலிகாப்டரின் இறக்கைகளாகச் சுழற்றி, பந்தை கைகளின் பின்புறமிருந்து விடுவிக்கும்போது பந்து விடுபடும் கோணம் முக்கியம். லைன், லெந்தில் மாறுபாடுகள் நேர்ந்து, தவறான இடத்தில் பந்து தரையிறங்கலாம். நூலிழை வேறுபாடுகூட விக்கெட் காவு வாங்க வேண்டிய பந்தை சிக்ஸராக்கும்.
இத்தனை சவால்கள் இருந்தாலும் ஸ்டாக் டெவிவரியான லெக்பிரேக்கோடு வேடம் தரித்து அனுப்பப்படும் கூக்ளி உள்ளிட்ட வேரியேஷன்கள் அதிகமாகக் கைகொடுக்கின்றன. பரமபதத்தில், தாயத்தை உருட்டும்போது, "எந்த எண் விழுமோ... ஏணியில் ஏறப் போகிறோமா அல்லது பாம்பு கொத்தப் போகிறதோ?" என்ற ஒருவித அச்சத்தை பேட்ஸ்மேனுக்குள் விதைப்பதுதான் சுழல் பந்துவீச்சாளர்களின் சூழ்ச்சி.

அந்த வகையில் லெக் ஸ்பின்னின் ஒரு குறிப்பிட்ட வேரியேஷன் சற்றே வித்தியாசமானது. மூன்று ஆஸ்திரேலியர்களால் ஆராதிக்கப்பட்டது. ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படத்தில் எல்லா பில்டப்புடனும் அறிமுகமாகும் மாஸ் ஹீரோக்களைப் போன்றதொரு அறிமுகத்திற்கு, முழுத்தகுதியுடையது; ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி கிரிம்மெட்டால் உருவம் தரப்பட்டு, ரிச்சி பெனாட்டால் இன்னமும் மெருகேற்றப்பட்டு, வார்னேயின் நிகரற்ற ஆயுதமாக புத்துயிர் பெற்ற `ஃப்ளிப்பர்'தான் அது.
காரிருளைக் கிழித்து எதிர்பாராத சமயத்தில் அதிவேகமாக நேருக்கு நேராகப் பாய்ந்து தாக்கும் கறுப்புக் குதிரையை ஒத்தது ஃப்ளிப்பர் எனப்படும் பேராபத்து. ஸ்பின்னர்களுக்கே உரித்தான பரவளையப் பாதையில் 'ஃப்ளைட்'டுக்கு நோ சொல்லி, தரைக்கு இணையாக ஃப்ளாட்டாகப் பயணிப்பது ஃப்ளிப்பர். லெக்பிரேக், கூக்ளி, டாப் ஸ்பின் ஆகியவை போலில்லாமல் பேக் ஸ்பின்னை உடையது.
டாப் ஸ்பின்னர் பந்து நகரும் திசைக்கு வலப்புறமிருந்து பார்த்தால் கடிகார முள்சுற்றும் திசையில் சுழலும். 'Magnus Effect' எனப்படும் இயற்பியல் நிகழ்வால் பந்து சுழலுகையில் அதற்கு மேலேயும் கீழேயும் உள்ள காற்றின் வேகங்கள் மாறுபடும். அதனால், கீழ்நோக்கியவிசை செயல்பட்டு பந்து முன்கூட்டியே சட்டென்று கீழிறங்கும். Dip என ஆங்கிலத்தில் சொல்லப்படுவதும் இதைத்தான். சரியாக வீசப்பட்டால் ஷார்ட்டாகத் தரைதொடும் பந்து, இன்னமும் அதிகமாக பவுன்ஸாகி பௌலர் நினைத்ததைச் சாத்தியமாக்கும்.
ஆனால் ஃப்ளிப்பரில் அந்த சுழற்சி இடஞ்சுழியாக இருக்கும். பந்தின் மேல்பகுதி பேட்ஸ்மேனை விட்டு விலகியும், கீழ்ப்பகுதி அவரை நோக்கியும் சுழலும். இதனால் Magnus Effect சமன்பாட்டிலிருந்து நீக்கப்படும். பந்து முன்கூட்டியே தரையிறங்காமல் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் ஏவுகணையாகத் தரையிறங்கும், குறைவாகவே பவுன்ஸாகும், அதுவும் பக்கவாட்டில் அல்ல நேராக! வழக்கமான பந்துகளைவிட இன்னமும் சற்றே வேகத்தோடு வீசப்படக்கூடியது இந்த ஃப்ளிப்பர். பேட்ஸ்மேனுக்கு எதைப் பற்றியும் யோசிப்பதற்கான கால அவகாசம் தரப்படாது. அப்புள்ளியில்தான் ஃப்ளிப்பரின் வெற்றியும் ஒளிந்துள்ளது.
ஃப்ளிப்பருக்கு முழுவடிவமளிக்க கிரிம்மேட்டுக்கு 12 ஆண்டுகளானது. அவரது 11 வயதிலிருந்து அவர் செதுக்க ஆரம்பித்த ஃப்ளிப்பர் பயன்பாட்டிற்குத் தயாரானது அவரது 23 வயதில்தான்.

வீடியோ அனாலிஸ்டுகள் இல்லாத அக்காலத்தில் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத அவரது ஃப்ளிப்பர்கள் அவருக்குக் கூடுதல் பலனளித்தன. அதிலுமொரு சின்ன ட்விஸ்ட் வந்தது. ஃப்ளிப்பரை கிரிம்மேட் வீசும்போது அவரது விரல்களில் இருந்து சொடுக்குப் போடுவதைப் போன்ற ஒலியெழும். இதை வைத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், ஸ்ட்ரைக்கில் இருப்பவர்களுக்கு, "அது ஃப்ளிப்பர் பால்" என்று குறிப்பிடும் வகையில் சிக்னல்தர ஆரம்பித்தனர். இதைக் கவனித்த கிரிம்மெட், இதற்கும் ஒருவழி கண்டுபிடித்தார். மற்ற பந்துகளை வீசும்போதுகூட இன்னொரு கையால் சொடக்கு போடத் தொடங்கினார். பேட்ஸ்மேன்கள் மறுபடியும் செய்வதறியாது சிரமப்பட்டனர்.
அவருக்குப் பின்னதாக ரிச்சி பெனாட், ஃப்ளிப்பரில் தனது வெர்ஷனைக் கொண்டு வந்தார். அவரால் பந்தைப் பெரியளவில் திருப்ப முடியாது. ஆகவே ஃப்ளிப்பரை இன்னும் கூர்மையாக்கினார். அதிலும் அவர் வீசிய கோணம், சற்றே கூடுதல் பவுன்சை பந்துக்கு அளித்து அதனை இன்னமும் கடினமானதாக்கியது. ரன்களை வேண்டுமென்றே கசிய விடுமாறு ஒன்றிரண்டு லெக்பிரேக்கள், பின்னர் குழப்புவது போன்றதொரு கூக்ளி, இடைசொறுகலாக ஒரு டாப் ஸ்பின்னர், பின் புதரின் மறைவிலிருந்து, வேகமாக எக்ஸ்ட்ரா பவுன்சோடு வஞ்சகமாக வெளிப்படும் ஃப்ளிப்பர் என அவரின் ஓவர் இருக்கும். இவற்றுள் முன்னதில் பிழைத்தாலும், பின்னாலே பிரம்மாஸ்திரமாக வரும் ஃப்ளிப்பர் வீழ்த்திவிடும்.
இந்தியாவின் சுபாஷ் குப்தே, சந்திரசேகர், பாகிஸ்தானின் அப்துல் காதிர் ஆகியோர் பேட்ஸ்மேனுக்கு சர்ப்ரைஸ் தந்து வீழ்த்துவதற்கான வியூகமாக இதனைப் பயன்படுத்தினர். ஆனால், ஃப்ளிப்பரைத் தனக்கான ரகசியத் தூதுவனாக மாற்றியது வார்னேதான். அதை அவர் பயன்படுத்திய விதம்தான் வெற்றியளித்தது.
வார்னே பந்தை வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது முப்பரிமாணத்தில் நகர்கிறது (ஆம்! முன்னோக்கி பயணிக்கிறது, உயரம் கடக்கிறது, டர்ன் ஆகியோ, Drift-ன் மூலமாகவோ பக்கவாட்டிலும் நகர்கிறது). அதனைச் சந்திக்கும் பேட்ஸ்மேனின் மனநிலை என்ன?! அவர் எப்படிப்பட்ட பந்தைவீசப் போகிறார் என்ற எண்ணம் தலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

பொதுவாக, அப்பந்தை பற்றிக் கணிக்க பேட்ஸ்மேனுக்கு மூன்று வாய்ப்புகளுண்டு. முதலில், வார்னேயின் கிரிப். சுனில் நரைன் விஷயத்தில் சங்கக்காரா சொன்னதைப்போல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போதே கவனம் அதிலிருந்தால் தப்பிக்கலாம்.
இரண்டாவதாக பந்து காற்றில் இருக்கும்போது, எப்படிச் சுழல்கிறது என்பதைக் கவனிக்கலாம்.
மூன்றாவதாக பந்து தரையில் பட்டபிறகு, எப்படிப் பயணிக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப அதிவேகமாக ரியாக்ட் செய்வது. இதில் கால அவகாசம் மிகக்குறைவு. நிறைய பேட்ஸ்மேன்கள் வார்னேயிடம் சிக்கியதும் இங்கேதான்.
முப்பரிமாணம் தவிர்த்து, வார்னேயின் நான்காவது பரிமாணமும் ஒன்று உண்டு! அது பந்தின் வேகம்...
கும்ப்ளேயும் ஃப்ளிப்பரைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவரைப் போலில்லாமல் வார்னேயின் ஃப்ளிப்பர் தவிர்த்த மற்ற பந்துகள் குறைவான வேகத்துடன்தான் பயணிக்கும். அவரது பயிற்சியாளரான டெர்ரி ஜென்னர் பயிற்றுவித்த பாடமது. "எந்த வேகத்தில் உன்னால் பந்தினை அதிகமாகச் சுழல வைக்க முடிகிறதோ அதுவே உனக்கான சரியான வேகம்" என்று சொன்னதைதான் வார்னே இறுதிவரை பின்பற்றினார்.

ஆக, வார்னேயின் ஃப்ளிப்பர்கள் மற்ற பந்துகளைவிட சற்றே வேகத்துடன் வீசப்படும், குறைவாகவே சுழலும், ஸ்டம்பையோ பேடையோ நலம் விசாரிக்கும். தனது சாவை கண்முன்னால் பார்த்து அதனைத் தடுக்க முடியாது போனால் எப்படியிருக்குமோ அதே உணர்வுதான் பேட்ஸ்மேனுக்கு மிஞ்சும். சச்சின், ரணதுங்கா உள்ளிட்ட சில ஆசிய பேட்ஸ்மேன்கள் இதனைச் சமாளித்தார்களென்றாலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை இது திணறடித்தது. 1994-ல் அலெக் ஸ்டூவர்டின் விக்கெட்டை வீழ்த்த அற்புதமாக செட்அப் செய்திருப்பார் வார்னே. சில லெக்பிரேக் டெலிவரிகளை ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு லெந்தில் அனுப்பி, அவரை ஃப்ரண்ட் ஃபுட்டில் ஆட வைத்திருப்பார்.
அவர் அசந்த நேரம், கத்தியைச் சொருகுவதைப் போல ஒரு ஃப்ளிப்பர் உள்ளே சொருகப்பட, அதை லெக்பிரேக்காக நினைத்து கட்ஷாட் ஆட முயன்று ஸ்டூவர்ட் ஆட்டமிழந்தார். வார்னேவின் நூற்றாண்டு பந்துக்குச் சமமான இன்னொரு பந்து அது.
1992-ல் ரிச்சி ரிச்சர்சனை அப்படியொரு ஃப்ளிப்பர் மூலமாகத்தான் வார்னே ஆட்டமிழக்கச் செய்தார். இந்த இரண்டுமே தன்னுடைய அபிமான ஃப்ளிப்பர்களாக வார்னே குறிப்பிட்டிருந்தார். மற்ற பௌலர்களிடம் வேரியேஷனைக் கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தார்கள் என்றால் வார்னேயின் ஃப்ளிப்பரிடம் ஆரம்பத்தில் என்ன வேரியெஷன் என்றே புரியாமல் அவர்கள் ஆட்டமிழந்தார்கள்.
வார்னேவுக்கு மட்டுமல்ல, துல்லியமாக வீசப்படும் எந்த ஒரு ஃப்ளிப்பரும், லெக்பிரேக்கை விட ஆபத்தானது, கூக்ளியை விடக் குழப்பக் கூடியது, பேட்ஸ்மேனை நிராயுதபாணியாக உணர வைப்பது.
அந்தளவு விக்கெட் உத்தரவாதம் தந்த ஃப்ளிப்பர், இப்போது எங்கே மறைந்தது?
வார்னேவுக்குப் பிறகு பிராட் ஹாக் அதைச் சிறிதுகாலம் பயன்படுத்தினார்தான். ஆனால், அவருக்குப் பிறகு இப்போதெல்லாம் யாருமே ஏன் அதை அதிகமாக பிரயோகிப்பதில்லை?
பெனாட்டே, "ஃப்ளிப்பரைவிட ஸ்லைடரே மேல்" என்று கூறியதேன்?
வார்னே, இளம் லெக் ஸ்பின்னர்களுக்கு "முதலில் ஸ்டாக் பால் மற்றும் மற்ற வேரியேஷன்களில் நிபுணத்துவம் பெற்ற பின்னரே, ஃப்ளிப்பர் பக்கம் திரும்புங்கள்" என்று அறிவுரை சொன்னதன் நோக்கம் என்ன?
இதற்குப் பல காரணங்கள் உண்டு!
மற்ற லெக் ஸ்பின் வேரியேஷன்கள் போலில்லாமல் கட்டை விரலை இதற்குப் பயன்படுத்துவோம். கைகளை சொடுக்குவதைப் போலசெய்து பந்தைக் கைகளின் முன்புறமிருந்து விடுவிக்க வேண்டும். இதற்குத் தோள்களிலிருந்து விரல்கள் வரை அசாத்திய பலம் வேண்டும். அதையும் இன்னமும் வேகமாக அனுப்ப வேண்டுமென்பதால் டென்னிஸ் எல்போ காயம் ஏற்படக்கூட வாய்ப்புகளுண்டு. வார்னேவின் தோள் வலிக்கும் இதுவே காரணமாகச் சொல்லப்பட்டது. இதற்காகவே அவர் ஸ்லைடர் பக்கம் திரும்பினார்.

ஃப்ளைட், ஸ்பின், வேகம் எல்லாவற்றையும் வைத்து பேட்ஸ்மேனைக் குழப்பலாம்தான் என்றாலும் வித்தியாசமான முறையில் பந்து விடுவிக்கப்படுவதால் நினைத்த லைன் அண்ட் லெந்த்தில் பந்தைத் தரையிறக்க முடியாமல் போகும். துல்லியத்தன்மை கேள்விக்குறியாக, ரன்கள் கசியும். வார்னே ஃப்ளிப்பரை முதல்முறையாக முயன்றபோது ஒருவாரம் பந்து டபுள் பவுன்ஸ் ஆகி களத்தில் களேபரம் செய்ததாம்.
அடுத்ததாக தனது ஸ்டாக் டெலிவரியில் நிபுணத்துவம் பெறாமல் வேரியேஷன்கள் பக்கம் ஒரு பௌலர் நகரவே கூடாது. "Googly Syndrome" - லெக்பிரேக்கைக் கற்றுத் தெளிந்தபின் கூக்ளியை பயிற்சி செய்கையில் அதன் தாக்கமாக லெக்பிரேக்கே மறக்கும்நிலை என்பதுதான் அது. ஸ்டூவர்ட் மேக்கில் உள்ளிட்ட பல லெக் ஸ்பின்னர்களும் இதனால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கின்றனர். கூக்ளியே கடினமெனும் போது, ஃப்ளிப்பரை எங்கே முயல்வது?
ஃப்ளிப்பரின் பலன் பெரியதே. எனினும், அது அதீத முயற்சியைக் கேட்குமெனில் அதில் அடையவேண்டிய முழுமைத்துவம் மணிக்கணக்கான பயிற்சியைக் கேட்கும். கிரிம்மேட்டுக்கு 12 ஆண்டுகள், பெனார்டுக்கும், வார்னேவுக்கும் இரு ஆண்டுகள் என்றால் நமக்கு எப்படி இது சுலபமாக இருக்கமுடியும் என்ற அச்சமே அதை அண்டவிடாமல் செய்கிறது.
அதுவும், டி20-ன் நவீன யுகத்தில் தலைக்குமேல் கத்தியும், நாம் கொஞ்சம் சொதப்பினால் நமக்கு மாற்றாக வரப்போகும் இன்னொரு போட்டியாளரும் ரெடியாக அமர்ந்திருக்கும் சமயத்தில் இப்படிப்பட்ட விஷப் பரிட்சையில் ஈடுபட எந்த லெக் ஸ்பின்னரும் தயங்கவே செய்வர். கடினத்தன்மையும் காலமின்மையும் ஃப்ளிப்பர் பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைத்து, அரியவகை உயிரினம் போல மாற்றியுள்ளது.

பண்டைய காலத்தில் பிரமீடுகளில் மாபெரும் மன்னர்கள் புதைக்கப்படும் போது, அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களும் அவர்களுடன் சேர்த்துப் புதைக்கப்படும். அப்படித்தான் லெக் ஸ்பின்னர் உலகின் முடிசூடா சக்ரவர்த்தியான வார்னேவுடனே ஃப்ளிப்பரும் விடைபெற்றுள்ளது.