Published:Updated:

`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்!' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி

பும்ரா, விராட் கோலி
பும்ரா, விராட் கோலி ( Ross Setford/AP )

இந்திய அணிக்கெதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 165 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஒருவர் கூட அரைசதமடிக்கவில்லை. அதிகபட்சமாக துணைக்கேப்டன் ரஹானே 46 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌத்தி மற்றும் ஜேமீசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணி
இந்திய அணி
Ross Setford/AP

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்ஸன் மற்றும் டெயிலென்டர்கள் உதவியுடன் 348 ரன்கள் குவித்தது. வில்லியம்ஸன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி, கடைசி 3 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சில் கலக்கிய ஜேமீசன், 44 ரன்கள் எடுத்து பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 183 ரன்கள் பின்தங்கியநிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் கைகொடுக்கவில்லை.

`கோலியின் முடிவால் இந்தப் போட்டியை இழக்க நேரிடலாம்!'- முதல் டெஸ்ட் குறித்து வி.வி.எஸ் லக்ஷ்மன்

4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி, 81 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 9 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்து 78 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 58 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌத்தி 5 விக்கெட்டுகளும் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி
Ross Setford/AP

வெற்றி இலக்கை 1.4 ஓவர்களில் எட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``இந்தப் போட்டியில் டாஸ் முக்கியமானதாக மாறிப்போனது. 220-230 ரன்கள் கூட எடுக்க முடியாதது வருத்தமளிக்கிறது. முதல் இன்னிங்ஸ் எங்களுக்கு மோசமாக அமைந்தது. எதிரணியின் முன்னிலை எங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுப்பதுவரை நல்ல நிலையிலேயே நாங்கள் இருந்தோம். ஆனால், அந்த 3 விக்கெட்டுகள் மற்றும் 120 ரன்கள் எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

விராட் கோலி
விராட் கோலி
Ross Setford/AP

இதுபோன்ற சூழல்களில் டெயிலெண்டர் பேட்ஸ்மேன்கள் எடுக்கும் ரன்கள் முக்கியமானவை. எங்கள் அணியின் பலமே, பெரிய அளவில் ரன் குவித்துவிட்டு, பௌலர்களுக்கு வாய்ப்புத் தருவது. ஆனால், அது இந்தப் போட்டியில் மிஸ்ஸாகிவிட்டது'' என்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சௌத்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு