Published:Updated:

`நான் இப்படி விளையாடவில்லை என்றால் என்னென்னமோ நடந்திருக்கும்'- ராஞ்சியில் மனம் திறந்த ரோஹித்!

பேட்டிங் திறமையை நிருபிக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நான் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா ( Twitter )

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் பேட்ஸ்மனாக களமிறங்கப்பட்டார். இந்த தொடரில் ரோஹித் ஷர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த அவர், ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில இரட்டை சதம் விளாசினார். நான்கு இன்னிங்சில் 529 ரன்கள் குவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

தொடர்ந்து ராஞ்சியில் செய்தியாளர்களைசந்தித்த ரோஹித் சர்மா`இந்த வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்டேன். அப்படி நான் பயன்படுத்தாமல் தவறவிட்டிருந்தால், என்னுடைய டெஸ்ட் கேரியர் குறித்து பல்வேறு வகையில் பேசவும் எழுதவும் செய்திருப்பர். நீங்கள் எல்லோரும் என்னைப்பற்றி நிறைய எழுதுகிறீர்கள். இப்போது, என்னைப்பற்றி நல்லவிதமாக எழுதவீர்கள் என நம்புகிறேன். பேட்டிங் திறமையை நிருபிக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நான் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும். இல்லையெனில் மீடியாக்கள் எனக்கு எதிராக எழுதியிருக்கும்.

வைசாக் டெஸ்ட் போட்டியின்போது, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் எனக்கும் என்னுடைய அணி நிர்வாகத்துக்கும் இடையே நீண்ட உரையாடல் நடந்தது. எனவே நான் அதற்கு மனதளவில் தயாராக இருந்தேன். எனக்குத்தெரியும் அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று. இது எனக்கு சவாலாக இருந்தது. காரணம் நான் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் விளையாடியதில்லை.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

வெறும் 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விளையாடியுள்ளேன். உண்மையில் இது மிகவும் சவலாகத்தான் இருந்தது. புனேவிலும் சரி, ராஞ்சியிலும் சரி, காலை நேரத்தில் புதிய பந்துகளை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. ரபாடாவுடைய பந்துவீச்சு கடினமாக இருந்தது. வெளிநாடுகளில் மைதானத்தில் பிட்ச்களில் நிலை வேறு மாதிரியாக இருக்கும். ஆனாலும், வெளிநாடுகளில் ஓபனராக களமிறங்கி விளையாடுவதற்கான நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றார்.