Published:Updated:

கிங் கோலியின் 254*... உமேஷின் சூப்பர் 6... ஜட்டுவின் Licence to go... வாவ் இந்தியா! #INDVsSA

கோலி
கோலி

ஒருவர் பங்களிப்பில் மட்டுமே பலகாலம் ஒப்பேற்றிய இந்தியக் கிரிக்கெட்டுக்கு அணியில் உள்ள 11 பேருமே பங்களிக்கிறார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் செம புதுசு.

ஒவ்வொரு மேட்சுக்கும் வெவ்வேறுவிதமான மேட்ச் வின்னர்ஸ் என்பது இந்தியாவுக்குப் புதுசு. முதல் டெஸ்ட்டில் ரோஹித், மயாங்க், அஷ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோரின் மிரட்டல் என்றால், இரண்டாவது டெஸ்ட்டில் மயாங்க், கோலி, உமேஷ், சாஹா, ரஹானே இன்னொரு செட் இறங்கி அடித்திருக்கிறது. ஒருவர் பங்களிப்பில் மட்டுமே பலகாலம் ஒப்பேற்றிய இந்தியக் கிரிக்கெட்டுக்கு அணியில் உள்ள 11 பேருமே பங்களிக்கிறார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் செம புதுசு.

2017-ல் இதே புனேவில் நடைபெற்ற டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவிடம் மிகமோசமாகத் தோல்வியடைந்திருந்தது இந்தியா. அதனால் இந்த இரண்டாவது டெஸ்ட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. தென்னாப்பிரிக்கா மீண்டெழும் என்பதுதான் அனைவரது கணிப்புமாக இருந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி. கேப்டனாக 50-வது டெஸ்ட்டில் 250+ ரன்களோடு வெற்றியைத் தொடர்கிறார் கேப்டன் கோலி.

முதல் நாளில் என்ன நடந்தது?

புனே பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளுமே முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தன. இந்திய அணியில் ஹனுமந்த் விஹாரிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணிக்குள் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் ஸ்பின்னர் பீட் நீக்கப்பட்டு நார்ட்ஜ் சேர்க்கப்பட்டார்.

Mayank
Mayank

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளும் மயாங்க் அகர்வாலின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ரோஹித் ஆரம்பத்திலேயே அவுட் ஆகிவிட, புஜாராவுடன் கூட்டணிபோட்டு ரன் வேட்டையை நிகழ்த்திக்கொண்டிருந்தார் மயாங்க். 87 ரன்களில் களத்தில் நின்றபோது மகராஜ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து 99 ரன்களில் போய் நின்றார் மயாங்க். செஞ்சுரியை நெருங்குகிறோம் என்கிற பதற்றம் துளிகூட அவரிடம் இல்லை. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட்டிலும் சதம் அடித்தார்.

ரஹானே & புஜாரா

முதல் டெஸ்ட்டில் 81 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த புஜாரா மீண்டும் ஒருமுறை அணிக்கு தூண் மாதிரி நின்று தடுப்பாட்டம் ஆடி 58 ரன்கள் அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸில் சதம் அடித்து தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் ரஹானே இந்தப் போட்டியில் அரைசதம் அடித்தார். அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக இந்தமுறை மிகவும் பொறுமையாக ஆடி கோலிக்கு ப்ரஷர் இல்லாமல் பார்த்துக்கொண்டார் ரஹானே.

kohli
kohli

ஜடேஜா

கிரிக்கெட் விளையாட்டில் Licence to go என்ற வார்த்தை உபயோகப்படுத்துவது உண்டு. Licence to go என்றால் இறங்கியவுடன் அடித்து ஆடும் சுதந்திரம். ஜடேஜா அந்த சுதந்திரத்தோடுதான் பேட்டிங் ஆடவந்தார். டீம் மேனேஜ்மென்ட் சொன்ன வார்த்தையைக் கற்பூரம் மாதிரி பிடித்துக்கொண்ட ஜடேஜா தென்னாப்பிரிக்காவை பந்தாடிவிட்டார். 104 பந்துகளில் 91 ரன்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்). இந்தியா 500 ரன்கள் அடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா கோலியுடன் சேர்ந்து ,601 ரன்கள் அடிக்கக் காரணமாக இருந்தார். பெளலிங்கில் 2 இன்னிங்ஸிலும் மொத்தம் 4 விக்கெட்கள் எடுத்து தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஜடேஜா.

கோலி

தொடர்ந்து 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் அடிக்கவில்லை கோலி. அதற்குள் 'கோலி ஃபார்ம் அவுட். முன்பிருந்த வேகம் இல்லை... பழைய பாய்ச்சல் இல்லை' என விமர்சனங்கள். ஆனால், இரண்டாவது டெஸ்ட்டில் கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மேட்டிலுமே தான்தான் கிங் என்பதை நிரூபித்தார் கோலி. முதல் நாள் பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தவர் இரண்டாம் நாள் தனது trademark ஷாட்ஸ்களான ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ்களால் ரன்களை உயர்த்த ஆரம்பித்தார். எந்த பெளலர் ஃபுல் லென்த்தில் பந்தை வீசினாலும், கோலியின் கை ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடிக்கொண்டே இருந்தது. தனது 26-வது சதத்தையும் ஃபிலாண்டர் பந்தில் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியே எடுத்தார் விராட்.

143 ரன்களில் இருக்கும்போது, கேஷவ் மகராஜ் பந்தில் ஸ்லிப் திசை நோக்கி ஆடுவார். ஆனால், அதை டுப்ளெஸ்ஸி பிடிக்கத் தவற, அடுத்த 3 பவுண்டரிகளும் அந்த ஸ்லிப் திசை நோக்கியே செல்லும். டுப்ளெஸ்ஸி இடது பக்கம் ரெடியாக இருக்கும்போது பந்தை வலது பக்கம் அடிப்பார். டுப்ளெஸ்ஸி வலது பக்கம் ரெடியாக இருக்கும்போது இடது பக்கம் அடித்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினார் கோலி.

kohli
kohli
`களத்தில் 6 மணிநேரம்!' - ஒரே இன்னிங்ஸில் விராட் கோலி குவித்த சாதனைகள் #ViratKohli

முத்துசாமி பந்தில் ஃபைன் லெக் திசையில் 2 ரன்கள் அடித்து 7-வது முறையாக 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். கூடவே 7,000 ரன்களையும் கடந்தார் இந்தச் சாதனை மன்னன். அதோடு தன் ரன் வேட்டையை விடவில்லை. வண்டியை டாப் கியரில் ஏற்றி மின்னல் வேகத்தில் ஆட ஆரம்பித்து 254 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார்.

உமேஷ் யாதவ்

`ஓர் அருமையான டெஸ்ட் மேட்ச் பெளலர் இப்படிப் பலநாள் வெளியே உட்காரவைக்கப்பட்டு இருக்கிறாரே?' என்ற கேள்வியை அனைவரையும் கேட்க வைத்துவிட்டார் உமேஷ். தான் வீசிய 2-வது பந்தில் மார்க்ரம் விக்கெட்டை எடுத்து தன் தேர்வை நியாயப்படுத்தினார். அதோடு அடுத்த ஓவரிலேயே டீன் எல்கர் விக்கெட்டையும் எடுத்து தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் 6 விக்கெட்கள் எடுத்து அடுத்தப் போட்டியில் வெளியே உட்காரவைக்க முடியாத அளவுக்கு கோலிக்கு செக் வைத்துவிட்டார் உமேஷ்.

உமேஷ் யாதவ் மற்றும் கோலி
உமேஷ் யாதவ் மற்றும் கோலி
அதிகரித்த ஸ்ட்ரெயிட் டிரைவ்... எஸ்கேப் ஸ்லிப்... கோலியின் புதிய மாஸ்டர் கிளாஸ்!

மகராஜ் - ஃபிலாண்டர் கூட்டணி

பேட்ஸ்மேன்கள் செய்யவேண்டிய வேலையை பெளலர்கள் செய்தார்கள். இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா சார்பில் பெரும்பான்மையான நேரங்களில் பெளலர்கள்தாம் பேட்டிங் வேலையையும் சேர்த்து செய்கிறார்கள். முதல் டெஸ்ட்டில் செகண்ட் இன்னிங்ஸில் 9-வது விக்கெட்க்கு டேன் பீய்ட்டும் சீனுரான் முத்துசாமியும் 91 ரன்கள் அடித்தனர். இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 9-வது விக்கெட்டுக்கு மகராஜும் ஃபிலாண்டரும் இணைந்து 40 ஓவர்கள் தாக்குப்பிடித்து 109 ரன்கள் அடித்தனர். மகராஜ் மட்டும் 72 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்கா 275 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார். இதே ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் திரும்பவும் சேர்ந்தபோது இந்திய ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்தனர். ஆனால், 55 ரன்கள் சேர்த்த இருவரையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

சாஹா

பன்ட் மேல் இருந்த அலையை மொத்தமாகத் தன் பக்கம் திருப்பியுள்ளார் சாஹா. 3-வது, 4-வது நாள் சூப்பர்ஸ்டார் பர்ஃபாமர் சாஹாதான். முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்தில் முதல் ஸ்லிப்புக்குச் சென்ற பந்தை தாவிப் பிடித்து அனைவரின் பார்வையும் உயரச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மறுபடியும் உமேஷ் யாதவ் பந்தில் லெக் சைடு செல்லும் பந்தை, தவளைத் தனது இரையைத் தாவிப் பிடிப்பதுபோல பிடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அதோடு கேப்டன் கோலி தன்னை முத்தம் இடும் அளவுக்கு அவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் சாஹா. ஃபாஸ்ட் பெளலிங்கில்தான் தாவிப்பிடிக்கிறார் என நினைத்துக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் டுப்ளெஸ்ஸிக்கு அதிர்ச்சி கொடுத்தார் சாஹா. அஷ்வின் வீசிய பந்து டுப்ளெஸ்ஸியின் பேட்டில் பட்டு சாஹா கைக்குச் சென்றது. ஆனால், பந்தின் வேகம் காரணமாக சாஹா கைகளில் இருந்து நழுவப் பார்த்தது. ஒரு முறை அல்ல 4 முறை பந்தை தட்டிப் பிடித்துவிட்டு டுப்ளெஸ்ஸியின் இன்னிங்ஸை முடித்தார் சாஹா. மேட்ச் முடிந்தவுடன் ''அந்த 2 கேட்ச்களும் என்னுடைய விக்கெட்டுகள் அல்ல. சாஹாவினுடையது'' என்றார் உமேஷ் யாதவ்.

Saha
Saha

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரை அனைத்துப் போட்டிகளும் முக்கியம். தொடரை வென்றுவிட்டோம் என்று எளிதாக இருந்துவிட முடியாது. அக்டோபர் 19-ல் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட்டையும் வெற்றியில் முடிக்கவே வெறிகொண்டு காத்திருக்கிறார் கிங் கோலி!

அடுத்த கட்டுரைக்கு