Published:Updated:

`நாங்கள் அனுபவிக்கும் வலிகளை யாரும் அனுபவிக்க கூடாது!’- சிறைக்கு செல்லும் பாக் வீரரின் மனைவி வேதனை

சமரா அஃப்சல்
சமரா அஃப்சல்

``நாங்கள் அனுபவித்த வேதனைகளையும் அவமானங்களையும் வேறு எந்த குடும்பமும் அனுபவிக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் அவருடைய மனைவி சமரா அஃப்சல் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட், கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவருடன் யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஏற்கெனவே சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், நசீரின் மீதுள்ள வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.

நசீர் ஜாம்ஷெட்
நசீர் ஜாம்ஷெட்

குற்றவாளிகள் லண்டனைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்நாட்டு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக லண்டனிலுள்ள மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தனது குற்றத்தை நசீர் ஜாம்ஷெட் ஒப்புக்கொண்டார். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, நசீரின் மனைவி டாக்டர் சமரா அஃப்சல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

``பும்ரா பேபி பவுலர்; கோலியிடம் உலகத்தரம் இல்லை!"- பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசாக்

சமரா அஃப்சல் எழுதிய பதிவில், ``என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான நாள் இது. நசீரின் தவறுகளில் இருந்து மற்ற வீரர்கள் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அவருக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்த விளையாட்டிற்கு உண்மையாகவும் கடினமான உழைப்பையும் கொடுத்திருந்தால் நசீருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும். ஒரு குறுக்குவழியை தேர்வு செய்ததன் மூலம் தன்னுடைய விளையாட்டு, அந்தஸ்து, மரியாதை மற்றும் சுதந்திரம் என எல்லாவற்றையும் இழந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அதில், ``இங்கிலாந்தின் குடியுரிமைப் பெற்று கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு வந்தது. அதையும் அவர் நிராகரித்தார். எதையும் இழக்கக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தை மாற்றவும் தயாராக இருந்தார். குறிப்பாக அவரது மகளை இழக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால், இப்போது அதற்கான நேரம் முடிந்துவிட்டது. இவருக்கு நேர்ந்ததைப் பார்த்து அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஊழலை தடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நசீர் ஜாம்ஷெட்
நசீர் ஜாம்ஷெட்

மேலும், ``உங்கள் நாட்டிற்காக விளையாடுவது ஒரு பாக்கியம். அதேநேரம் எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளக்கூடிய உரிமை அல்ல அது. பணத்திற்காக இதுமாதிரியான செயல்களில் வேறு எந்த வீரரும் ஈடுபடமாட்டார்கள் என நினைக்கிறேன். நாங்கள் அனுபவித்த வேதனைகளையும் அவமானங்களையும் வேறு எந்த குடும்பமும் அனுபவிக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பத்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள நசீருக்கு தடை விதித்தது. இவர், பாகிஸ்தான் அணிக்காக 48 ஒரு நாள் போட்டிகள், 18 டி 20 போட்டிகள், 2 டெஸ்ட் ஆகியவற்றை விளையாடியுள்ளார்.

`டி20 போன்றதொரு புரட்சி நடக்கும்!’ - யுவராஜ் நம்பும்`The Hundred' கிரிக்கெட் தெரியுமா?
பின் செல்ல