விளையாட்டு வீரர்களுக்கு ஃபிட்னஸ் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைத் தொடரின்போது பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னஸ் விஷயங்கள் கேள்விக்குள்ளானது. பாகிஸ்தான் இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் என முன்னாள் வீரர்கள் கூறி வந்த நிலையில் களத்தில் நடந்ததோ வேறு. சில காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதனால் உலகக்கோப்பையில் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இருநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

மேட்ச் ஆரம்பம் முதலே ஒன் சைடாகப் போனது. இந்தியா வெற்றிபெற்றது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. போட்டிக்கு முதல்நாள் வீரர்கள் அனைவரும் பார்ட்டிக்கு சென்றதாகவும் இரவெல்லாம் உறங்காமல் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மைதானத்திலே கேப்டன் சர்ப்ராஸ் அகமது கொட்டாவி விட்டுக்கொண்டு நிற்கும் புகைப்படம் வைராலனது. இங்கிலாந்தில் உள்ள ஒரு மாலில் சக நாட்டு ரசிகரால் சர்ப்ராஸ் உருவ கேலிக்கு ஆளானார். இது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இறுதியில் பாகிஸ்தான் அணி வெறும் கையோடு தாயகம் திரும்பியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா - உல் - ஹக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக வாக்கர் யூனிஸ் மீண்டும் களமிறங்கியுள்ளார். மிஸ்பா - உல் - ஹக் பாகிஸ்தான் அணியில் விளையாடிய காலகட்டத்தில் வாக்கர் யூனிஸ் பயிற்சியாளராக இருந்தார்.
``சவாலான பணி என்றாலும் அதற்குத் தயாராக உள்ளேன். வாக்கர் யூனிஸ் உடன் சேர்ந்த திறமையான வீரர்கள் நன்றாக விளையாட உதவிடுவேன்" எனக் கூறி மிஸ்பா-உல்-ஹக் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

பயிற்சியாளராக மிஸ்பா எடுத்துள்ள முதல்முடிவு இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. வீரர்களின் ஃபிட்னஸ் விஷயத்தை முதல் பிரச்னையாகக் கையில் எடுத்துள்ள மிஸ்பா, தேசிய அணி வீரர்களுக்கும் உள்ளூர் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும் புதிய ஃபிட்னஸ் விஷயங்களைப் பரிந்துரைத்துள்ளவர் சில அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதன்படி இனி வீரர்கள் பிரியாணி, எண்ணெய்யில் பொரித்த உணவுவகைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை உண்ணக் கூடாது என்றும், அதேநேரம் பார்பிகியூ உணவுவகைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவே இந்த உத்தரவு எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.