Published:Updated:

`நோ ஹேண்ட் ஷேக்; பயணத் திட்டம்!' - கொரோனா எச்சரிக்கையால் தென்னாப்பிரிக்கா அலர்ட் #INDvSA

கோலி - டிகாக்
கோலி - டிகாக்

கொரோனா வைரஸின் எதிரொலியால் விளையாட்டுத்துறையிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன பல்வேறு விளையாட்டு அமைப்புகள்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் பாதிப்பு இன்று மொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க உலகநாடுகள் அனைத்தும் தங்களின் மக்களுக்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. இதனால், பயணம் உள்ளிட்டவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் விமானப் போக்குவரத்து, சுற்றுலா எனப் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், வைரஸ் பாதிப்பால் பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கின்றன ஆய்வுகள் பல.

கோலி - டிகாக்
கோலி - டிகாக்

கொரோனா வைரஸின் எதிரொலியால் விளையாட்டுத் துறையிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன பல்வேறு விளையாட்டு அமைப்புகள். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்க இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கிக்கொள்வது தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் மேற்கொள்ளப்படும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் வீரர்கள் கைகுலுக்குவதற்கு பதில் தங்கள் மணிக்கட்டை மடக்கி `Fist Bump' செய்து தங்கள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், 11 நாள்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி அங்கிருந்து எந்த நாடுகள் வழியாக இந்தியா வரலாம் என்பதையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு ஆய்வு செய்திருக்கிறது. முடிவில், புது துபாய் வழியாக டெல்லி வந்து அங்கிருந்து போட்டி நடைபெறும் தரம்சாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குப் பயணப்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

மேலும், இந்திய அணிக்கெதிரான தொடருக்கு முன்பாக வீரர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு, கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் தலைவர் சொயப் மஞ்ச்ரா (Shuaib Manjra) அறிவுரை வழங்கியிருக்கிறார். அதேபோல், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது தென்னாப்பிரிக்க அணியுடன் அவரும் இந்தியா வர இருக்கிறார்.

கை குலுக்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக வேறு எந்தவிதமான தடையோ கட்டுப்பாடுகளோ வீரர்களுக்கு விதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அவர்கள் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடி, செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இங்கிலாந்து அணி ஏற்கெனவே கைகுலுக்குவதற்குப் பதில் இந்த Fist Bump டெக்னிக்கை பின்பற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு