சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு, தோல்வியடையாத அணியை சமாளிக்குமா பாகிஸ்தான் என்று நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டியின் பிரிவ்யூ எழுதியிருந்தோம். பெரும்பாலான ஊடகங்கள் அதைத்தான் தலைப்பாக வைத்திருந்தன. இந்த உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத இரு அணிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருந்தது நியூசிலாந்து. இந்த ஏழு நாள் இடைவெளியில் எல்லாம் மாறியிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் நியூஸிலாந்துக்கு நேராக பூஜ்யம் என்றிருந்த தோல்விகளின் எண்ணிக்கை 1, 2 என அதிகரித்து இப்போது மூன்றில் வந்து நிற்கிறது.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் அடிவாங்கிய பிளாக் கேப்ஸ், இங்கிலாந்திடம் பேரடி வாங்கியிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக பட்டையைக் கிளப்பிய ராய் - பேர்ஸ்டோ கூட்டணி, அந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தது. சேவாக் மோடில், 'எங்கவேணா போடு, எப்டிவேணா போடு' என முதல் ஓவரில் இருந்தே வெளுத்துக்கொண்டிருந்தார் ஜேசன் ராய். பேர்ஸ்டோ அவரைக் காட்டிலும் கொஞ்சம் வேகமாகப் பயணித்தார். நியூசிலாந்து பௌலர்கள் வீசிய half volley பந்துகளை கவர் ஃபீல்டருக்கு மேலே தொடர்ந்து பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் ஆடிய விதமே, இங்கிலாந்து அனைத்துக்கும் தயாராக வந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியில் ஆடும் டிம் சௌத்தி, லைன் & லென்த் செட் ஆகாமல் தடுமாறினார். ஓவருக்குக் குறைந்தபட்சம் ஒரு மோசமான பந்தாவது வீசினார். நல்ல பந்துகளையே பந்தம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, சௌத்தியின் பந்து செம விருந்து. போல்ட், சௌத்தி, ஹென்றி, சேன்ட்னர், கிராந்தோம் என அனைவரையும் பறக்கவிட, கடைசியாக அந்த ஜோடியைப் பிரித்தார் ஜேம்ஸ் நீஷம். 60 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய், எட்ஜாகி சேன்ட்னரிடம் கேட்ச் ஆனார்.
அவர் வெளியேறினாலும் பேர்ஸ்டோ அடங்குவதாக இல்லை. இந்தியாவுக்கு எதிராக ஆடியதைப்போலவே ஆடினார். நேற்றும் சில ஸ்வீப்கள், ரிவர்ஸ் ஸ்வீப்களைக் காண முடிந்தது. ரூட் வெளியேறியதும், ரன் ரேட்டை மேலும் அதிகப்படுத்த பட்லரைக் களமிறக்கினார் மோர்கன். ஆனால், அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. 106 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ வெளியேற, 11 ரன்களில் நடையைக் கட்டினார் பட்லர். அப்போதே ரன்ரேட் ஆறுக்குக் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆனால், அதை மேலும் குறைத்தது ஸ்டோக்ஸ் - மோர்கன் ஜோடி.

நியூசிலாந்தின் நிலையை அப்படியே பிரதிபலித்தது ஸ்டோக்ஸின் ஆட்டம். நல்ல ஃபார்மில் அரைசதங்களாக அடித்துக் குவித்தவர், நேற்று அநியாயத்துக்கும் தடுமாறினார். சிங்கிள் எடுக்கவே சிரமப்பட்டார். ஒரு ஓவரை மெய்டனாக்கினார். ஒருகட்டத்தில் 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று நினைக்கப்பட்ட ஒரு அணி, 37-வது ஓவரை மெய்டனாக்கினால்?! ரன்ரேட் மொத்தமாகக் குறையத் தொடங்கியது. நீஷம் ஓவர்களில் 5 ரன்கள் எடுப்பதே பெரும்பாடாகிப்போனது. ஒன்று, மூன்று என்றுதான் விட்டுக்கொடுத்தார் நீஷம். ரன்ரேட் குறைந்துகொண்டிருந்த வேலையில், விக்கெட்டுகளும் விழத்தொடங்க, 300 என்பதே குதிரைக்கொம்பானது. ஒருவழியாக அடில் ரஷீத் - பிளங்கட் கூட்டணி ஓரளவு தாக்குப்பிடித்தது. இங்கிலாந்து 305 ரன்கள் எடுத்தது.
306 ரன்கள் இலக்கு. இன்னிங்ஸை எப்படி தொடங்கவேண்டும்? நிச்சயமாக நியூசிலாந்தைப்போல் அல்ல. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் பந்திலேயே விக்கெட். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட், பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது ஓவரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஓவரில்... இலங்கைக்கு எதிரான ஒன்றுக்கும் இல்லாத போட்டியைத் தவிர்த்து ஒரு போட்டியில்கூட அவர்களால் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியவில்லை. மன்றோ திணறுகிறார் என்று நிகோல்ஸை இறக்கினால் இவர் அதற்கு மேல்!

வோக்ஸ் விசிய பந்து pad-ல் படுகிறது. இங்கிலாந்து வீரர்களின் அப்பீலை ஏற்கிறார் நடுவர். அவுட் கொடுக்கிறார். உண்மையில், அந்த இடத்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் இருந்திருந்தால் ரிவ்யூ பாழானாலும் பரவாயில்லை என்று உடனடியாக கையை உயர்த்தியிருப்பார். ஆனால், நிகோல்ஸ் ரிவ்யூ கேட்கவில்லை. பால் டிராக்கிங்கில், பந்து ஸ்டம்புகளுக்கு மேலே பயணித்தது. சரி, அவர்தான் அப்படிச் சென்றார் என்று பார்த்தால், குப்தில் அதற்கு மேல்! கடந்த உலகக் கோப்பையில் இரட்டைச் சதமெல்லாம் அடித்தவர், இந்த உலகக் கோப்பையில் மொத்தமாகவே இன்னும் 200 ரன்களைக் கடக்கவில்லை. பந்தின் லைன், லென்த்தைக் கணிக்கத் தவறுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் மோசமான ஷாட் மூலம் வெளியேறிக்கொண்டிருக்கிறார். அது நேற்றும் தொடர்ந்தது. ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பாலின் லைனை கணிக்க முடியாமல், மோசமான ஷாட் ஆடி வெளியேறினார்.
வழக்கம்போல் அனைத்து பொறுப்புகளும் வில்லியம்சன் தோள்களில் இறங்கியது. இந்த உலகக் கோப்பையில், நியூசிலாந்து அணியின் 30 சதவிகித ரன்களை அவர்தான் அடித்திருக்கிறார். தொடக்க ஜோடியின் ஒட்டுமொத்த சொதப்பலையும் எத்தனை முறைதான் இவரே சரிசெய்வாரோ தெரியவில்லை. ஆனால், நேற்று அவருக்கும் போதாத காலம். பிராத்வெயிட் இலங்கைக்கு எதிராக அவுட்டானதுபோல், மார்க் வுட் விரல்களின் தயவால் பெவிலியன் திரும்பினார் வில்லி. ஸ்கோர் 61 -3! அதன்பிறகு அந்தப் போட்டி சம்பிரதாயமாகவே ஆடப்பட்டது.

ஸ்வீப் மன்னன் ராஸ் டெய்லர் ரன் அவுட்டாக, அவரது ஆட்டத்தைக் கையில் எடுத்தார் டாம் லாதம். பந்து எங்கு பிட்சானாலும் ஸ்வீப்தான்! இவர் ஒருபக்கம் மெதுவாக உருட்டிக்கொண்டிருக்க, அதிரடிக்குப் பெயர் போன ஜேம்ஸ் நீஷம், கிராந்தோம் இருவரும் வேற லெவலில் ஆடினார்கள். தோல்வியைத் தவிர்ப்பதைக் காட்டிலும், ரன்ரேட்டை தக்கவைப்பது முக்கியம் என்பதால் அவர்களும்கூட உருட்டிக்கொண்டே இருந்தனர். ஆனால், இங்கிலாந்து பௌலர்கள் விக்கெட் வேட்டை தொடர்ந்துகொண்டே இருந்தது. டெய்ல் எண்டர்களை மார்க் வுட் போட்டுப் பொளக்க, 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து. ஆனால், ஒருவகையில், பாகிஸ்தானால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு ரன்ரேட்டைத் தக்கவைத்துக்கொண்டது.
அரையிறுதிப் போட்டி நெருங்கிய நிலையில், இரண்டு அணிகளின் ஃபார்மும் அப்படியே தலைகீழாக மாறியிருக்கின்றன!
அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த இங்கிலாந்து, இப்போது அனைத்து ஏரியாவிலும் கெத்தாக நிற்கிறது. நியூசிலாந்தோ, ஓப்பனிங் சொதப்பல், பேட்ஸ்மேன்களின் திணறல், முன்னணி பௌலரின் காயம் எனத் திண்டாடுகிறது. இப்படியே தொடர்ந்தால், அரையிறுதியில் கங்காருகளிடமோ, புலிகளிடமோ பேரடி வாங்கும் இந்தக் கிவிகள்!