Published:Updated:

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!

நியூசிலாந்து கிரிக்கெட்
நியூசிலாந்து கிரிக்கெட் ( Rui Vieira )

கேப்டன் கேன் வில்லியம்சன், வாட்லிங், காலின் டி கிரந்தோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் என முதல் டெஸ்ட்டில் விளையாடிய 6 நியூசிலாந்து வீரர்கள் இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை.

22 ஆண்டுகளுக்குப் பின், இங்கிலாந்தில் வென்று ஒரு டெஸ்ட் தொடரை, உலக டெஸ்ட் சாம்பியனாக சகல தகுதியும் உடைய அணியாக தன்னை உலகிற்கு உரக்க அறிவித்துள்ளது நியூசிலாந்து. அதுவும் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் 'பி' டீம், ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததைப்போல, நியூஸிலாந்தின் ‘பி' டீம் இங்கிலாந்தை தோற்கடித்திருக்கிறது.

இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ் இல்லை, பட்லர் இல்லை என சில இல்லைகள் இருந்தாலும் பேட்டிங்கில் மிகவும் சொதப்பலான அணியாக இருப்பதை இந்தத் தோல்வி பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

முதல் டெஸ்ட்டில், இங்கிலாந்து பல நட்சத்திர வீரர்கள் இல்லாது களமிறங்கியதென்றால், இரண்டாவது டெஸ்ட்டில், நியூசிலாந்தும், அதைத்தான் செய்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன், வாட்லிங், காலின் டி கிரந்தோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் என முதல் டெஸ்ட்டில் விளையாடிய 6 வீரர்கள் இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை.

இங்கிலாந்தோ பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இனவெறி சர்ச்சையில் சிக்கிய ஓலி ராபின்சனுக்குப் பதிலாக, ஓலி ஸ்டோனோடு களமிறங்கியது. நியூஸிலாந்து அஜாஸ் பட்டேல் எனும் ஸ்பின்னரோடு களமிறங்க, முதல் டெஸ்ட்டைப்போலவே முழு நேர ஸ்பின்னர் இல்லாமல் ஜோ ரூட்டை நம்பியே களமிறங்கியது இங்கிலாந்து.

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!
Rui Vieira

டாஸை வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. கடந்த போட்டியில், ஆளுக்கொரு இன்னிங்ஸில், சிறப்பாக ஆடியிருந்த பர்ன்ஸும் சிப்லியும் களமிறங்கினர். உணவு இடைவேளை வரை, விக்கெட் இழப்பின்றி நகர்ந்தது போட்டி. 2011-க்குப் பிறகு, விக்கெட் இழப்பின்றி, இங்கிலாந்து முதல் செஷனை முடித்திருந்தது இதுவே முதல்முறை. இவர்களது 72 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், இங்கிலாந்தின், முதல் இன்னிங்ஸ், வலுவாகக் கட்டமைக்கப்பட்டது.

எனினும் இரண்டாவது செஷனில் கம்பேக் கொடுத்தது நியூசிலாந்து. மேட் ஹென்றி, சிப்லியை தனது வலையில் சிக்கவைத்து, விக்கெட் கணக்கைத் தொடங்கினார். இதற்கடுத்த ஓவரிலேயே, க்ராலி ரன் எடுக்காமல், வாக்னரிடம் வீழ, வந்த வேகத்தில், என்ன அவசரமோ, ரூட்டும், மேட் ஹென்றியின் பந்தில், ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளும் இங்கிலாந்தின் தன்னம்பிக்கையை, ஆட்டம் காணச் செய்தது. மேட் ஹென்றியின் பந்துகள், கொஞ்சம் அதிகமாக ஸ்விங் ஆக, திணறினர், இங்கிலாந்து வீரர்கள்.

எனினும், பர்ன்ஸ் அரைசதத்தோடு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார். அவரது ஆட்டம் நிதானமாகத் தொடர்ந்தது. இன்ஸ்விங்களை வழக்கம் போல், அநாயாசமாகச் சமாளித்த அவர், அவுட் ஸ்விங்களில் மட்டுமே கொஞ்சம் திணறினார். குறிப்பாக, புல் ஷாட்டுகளை, மிக நேர்த்தியாக ஆடி, ரன் சேர்த்தார். போல்ட், போப்பை வீழ்த்த, ரவுண்ட் த விக்கெட்டில் பந்து வீசி நெருக்கடி தந்தார். இறுதியாக, போப்பும் 19 ரன்களில் வெளியேற, அதன்பின் லாரன்ஸ் இணைந்தார்.

அடுத்ததாக, 81 ரன்களை எடுத்திருந்த பர்ன்ஸை, அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்தால், போல்ட் ஆட்டமிழக்கச் செய்ய, இனி என் முறை என லாரன்ஸ், பொறுப்பை முழுமையாக தனது கையில் எடுத்துக் கொண்டார். ஜேம்ஸ் பிரேஸி போன போட்டியைப் போலவே, இதிலும் ஏமாற்றமளித்து வெளியேறினார்.

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!
Rui Vieira

பௌலர்களில், மிட்செல் தவிர்த்து மற்ற அனைவருமே, பெரும்பாலான பந்துகளை, நல்ல லைன் அண்ட் லென்த்தில் வீசிக் கொண்டிருந்தாலும், அடுத்துவந்த நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, 40 ஓவர்கள் எடுத்துக் கொண்டது நியூசிலாந்து.

காரணம், மார்க் உட், லாரன்ஸுக்கு இடையேயான கூட்டணியே. ஒரு கட்டத்தில், 175 ரன்களுக்கு, ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, 300-ஐ தாண்டியதற்கு முக்கியக் காரணம், இவர்களது பார்ட்னர்ஷிப்தான். மார்க் உட் 41 ரன்களோடு ஆட்டமிழக்க, லாரன்ஸ், கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று, 81 ரன்களைக் குவிக்க, 303 ரன்களைச் சேர்த்தது, இங்கிலாந்து. நியூசிலாந்தின் பக்கம், போல்ட்டும், மேட் ஹென்றியும் முறையே, நான்கு மற்றும் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை, லாதம் மற்றும் கான்வேயோடு தொடங்கியது நியூசிலாந்து. லாதம் வெகுவிரைவிலேயே பிராடிடம் சிக்கினாலும், கான்வே, லார்ட்ஸ் இன்னிங்ஸின், இரண்டாம் பாகத்தை, எட்ஜ்பாஸ்டனில் காட்டத் தொடங்கினர். பந்துகளும் நன்றாக ஸ்விங் ஆகத் தொடங்கியது. எனினும், எல்லாவற்றையும் சமாளித்தது, கான்வே - வில் யங் கூட்டணி. வில்லியம்சனில்லாத குறையை வில் யங் தீர்த்து வைத்தார்.

பொறுப்பாக ஆடிய இக்கூட்டணி, 122 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்தது. 80 ரன்களோடு கான்வே வெளியேற, வில் யங்கோடு இணைந்தார் ராஸ் டெய்லர். இந்தக் கூட்டணியும், 30 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தது. இறுதியாக, 82 ரன்களோடு, வில் யங் ஆட்டமிழக்க, நிக்கோல்ஸ் வந்து சேர்ந்தார்.

ராஸ் டெய்லரின் விக்கெட்டுகளை, பத்து முறை, பிராட் எடுத்துள்ளார் என்பதால், அவரைக் கொண்டு ராஸ் டெய்லருக்கு பொறி வைத்தார் ரூட். ஆனால், கடைசியில், ஓலி ஸ்டோனிடம், 80 ரன்களோடு வீழ்ந்தார் ராஸ் டெய்லர். யார் விட்ட சாபமோ, இந்த இரண்டு அணிகளின் இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, ஐந்து வீரர்கள், 80-களில் ஆட்டம் இழந்திருந்தனர்.

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!
Rui Vieira

பின்னர், நிக்கோல்ஸ் மற்றும் பிளண்டல் இணை இணைந்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, 90 ஓவர்களை எடுத்துக் கொண்ட இங்கிலாந்து, கடைசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த, 29 ஓவர்களை மட்டுமே எடுத்துக் கொண்டது. நல்ல லென்த்தில் வீசப்பட்ட பந்துகளை, எளிதாக எதிர்கொண்ட நிக்கோல்ஸ், 21 ரன்களும், பிளண்டல், 34 ரன்களும் எடுத்திருந்தனர். 388 ரன்களைச் சேர்த்திருந்தது நியூசிலாந்து.

இங்கிலாந்தின் இன்னிங்ஸுக்கு, தலைகீழாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியும், 450ஐ தாண்டும் என்றெல்லாம் கணிக்கப்பட்ட ஸ்கோர், பின்வரிசை வீரர்களின் சுமாரான ஆட்டத்தால், 400ஐ தொடாமலே முடிவைக் கண்டது. இங்கிலாந்தின் சார்பில், ஸ்டூவர்ட் பிராடு நான்கு விக்கெட்டுகளையும், மார்க் உட் மற்றும் ஓலி ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

85 ரன்கள் பின்னிலை என்பது சற்றே கவலையளிக்கும் விஷயமெனினும், 2010-க்குப் பின், எட்ஜ்பாஸ்டனில் ஆடப்பட்ட, எட்டு போட்டிகளில், ஆறில் இங்கிலாந்தே வென்றிருக்கிறது என்பதால், சற்று தூக்கலான நம்பிக்கையோடே, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடக் களமிறங்கியது, இங்கிலாந்து.

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!
Rui Vieira

அவர்களை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது, முதல் ஓவரின், இரண்டாவது பந்து. மேட் ஹென்றியின் பந்துகள் முதல் இன்னிங்சில் சற்று அதிகமாகவே ஸ்விங்கானதால், புதுப் பந்தை, லாதம் அவரது கையிலேயே கொடுக்க, பர்ன்ஸ் மற்றும் சிப்லியை அடுத்தடுத்து வீழ்த்தி, நியூசிலாந்துக்குத் தேவையான அதகளமான தொடக்கத்தை அவர் கொடுத்தார். அடுத்த பத்து ஓவர்களுக்குள்ளாகவே, க்ராலி மற்றும் போப்பை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தி விட்டது நியூசிலாந்து. ரூட் மட்டும், 61 பந்துகளை சந்தித்து, கொஞ்சமாவது சமாளித்துக் கொண்டிருந்தார்.

முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய லாரன்ஸ்கூட தற்போது கை கொடுக்காமல் போக, பிரேஸியும் எட்டு ரன்களோடு வெளியேற, அவரது பின்னாலேயே, ரூட்டும் செல்ல, 76 ரன்களை எட்டும் போதே, ஏழு விளையாட்டுகளை இழந்து விட்டது இங்கிலாந்து. இன்னிங்ஸ் தோல்வியா இல்லை எஞ்சிய ரன்களை இங்கிலாந்து சேர்த்து, கௌரவமான தோல்வியைத் தழுவுமா?! போட்டி இன்னொரு நாள் நடக்குமா இல்லை, மூன்றாவது நாளிலேயே முடிவைக் காணுமா என்ற கேள்விகள் மட்டுமே, ரசிகர்கள் மனதில் இருந்தது.

எனினும், ஓலி ஸ்டோனும், மார்க் உட்டும் சற்றுநேரம் மூச்சுப்பிடித்து சமாளித்தனர். 44 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்திருந்தனர். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், இக்கூட்டணி மட்டுமே சற்று அதிக ஓவர்கள் தாக்குப் பிடித்தது. இவர்களால் மட்டுமே, இங்கிலாந்து, லீட் எடுத்தது. மற்றவர்களை எல்லோரையும் வந்த வேகத்தில், வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர், மேட் ஹென்றியும், வாக்னரும். கடைசியில், மார்க் உட்டும் ஆட்டமிழக்க, அவர் சென்று, பேடை கழற்றும் கால அவகாசத்துக்குள், பிராடின் விக்கெட்டும் வீழ்ந்து விட்டது.

22 ஆண்டுகால கனவு… 'பி' டீமை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து!
Rui Vieira

மூவிங் டேயான மூன்றாவது நாளே, முடிவான நாளாகி, இன்னிங்ஸ் தோல்வியடைய நேருமோ என்று அச்சத்தில் இங்கிலாந்து மிரண்டிருந்தது. எனினும், ஸ்டோன் - ஆண்டர்சன் கூட்டணி, தோல்வியைத் தள்ளிப்போட்டது. "இன்று போய் நாளை வாருங்கள்!" என நியூசிலாந்து இங்கிலாந்தை வழியனுப்பியது.

37 ரன்கள் முன்னிலையோடு, நான்காவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து துவங்க, மிச்சமிருந்த ஒரு விக்கெட்டை வீழ்த்த, நியூசிலாந்துக்கு ஒரு ஓவர் கூடத் தேவைப்படவில்லை, ஒரு பந்தே போதுமானதாக இருந்தது. போல்ட் வீசிய முதல் பந்திலேயே, ஸ்டோன்ஸ் ஆட்டமிழக்க, கோப்பைக்கும் நியூசிலாந்துக்கும் இடைவெளி, 38 ரன்கள் என தடுக்கி விழும் தூரம்தான். அந்த தூரத்தை தாண்டி, வெகுவிரைவாக போட்டியை முடிக்க, கான்வேயும் லாதமும் களத்தில் இறங்கினர். இறுதிவரை போராடுவோம் என்பது போல், இங்கிலாந்தும் ஆன்டர்சன் மற்றும் பிராடைக் கொண்டு பெளலிங்கைத் துவங்கியது.

இரண்டாவது ஓவரிலேயே, கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தினார் பிராட். எனினும், டிஃபண்ட் செய்யுமளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஸ்கோர் இல்லையே இது?! வில் யங்கின் விக்கெட்டை, ஸ்டோன் எடுத்தாலும், அதற்கடுத்த மார்க் உட்டின் ஓவரில், இரண்டு பவுண்டரிகளை லாதம் அடிக்க, நியூசிலாந்து இலக்கை எட்டியதோடு, 22 வருடக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்து 1/0 என தொடரைக் கைப்பற்றயது. ஆட்ட நாயகனாக, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மேட் ஹென்றியும், தொடர் நாயகனாக, பர்ன்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜுன் 18-ல் தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. பி டீமே இங்கிலாந்தை தோற்கடித்திருப்பதால் இன்னும் கூடுதல் வியூகங்களோடு இந்தியா களமிறங்கவேண்டும்.

நியூசிலாந்தைப் பொறுத்தவரை, முக்கிய வீரர்கள் இல்லாத பட்சத்தில் கை சேர்ந்திருக்கும் இந்த வெற்றி, அவர்களது தன்னம்பிக்கையை பலமடங்கு கூடச் செய்து கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழைய வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு