Published:Updated:

கப்ஷிலின் ஓப்பனிங்... நீஷமின் ஃபினிஷிங்... ஆஸ்திரேலியாவை ஓரங்கட்டிய நியூஸிலாந்து! #NZvAUS

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ( Andrew Cornaga )

220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கடந்த போட்டியில் 185 ரன்களை எடுக்க முடியாமல் 131 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட் ஆகியிருந்தது. 200+ ஸ்கோர் என்பதால் ஆஸி எப்படியும் இந்தப் போட்டியிலும் திணறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் நியூஸிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்ஷில் அதிரடியாக ஆடி 97 ரன்களை விளாசியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்கள்தான்.

நியூஸிலாந்து அணியின் சார்பில் சீஃபெர்ட்டும் கப்ஷிலும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். முதல் போட்டியில் இவர்கள் இருவருமே பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக, கப்ஷில் சாம்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். ஆனால், இன்று சாம்ஸ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே நச்சென ஒரு கவர் டிரைவ் பவுண்டரியுடனே கப்ஷில் தொடங்கினார். தொடக்கம் முதலே ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அடித்து ஸ்கோரை உயர்த்திக் கொண்டே இருந்தார். முதல் போட்டியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தட்டிவிட்டு பாயின்ட் ஃபீல்டரிடம் கப்ஷில் கேட்ச் ஆகியிருந்தார்.

இந்த முறை அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக பவர்ப்ளேயில் நேராக பெளலரின் தலைக்கு மேலும் லாங் ஆன்/ஆஃபிலுமே தொடர்ந்து ஷாட் ஆடினார். வேகத்தில் மிரட்டும் ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் என எல்லாரின் ஓவர்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து துவம்சம் செய்தார். சீஃப்பெர்ட் சீக்கிரமே கேன் ரிச்சர்ட்சனின் ஒரு ஷாட் பாலுக்கு இரையாகி வெளியேறியிருந்தாலும் நம்பர் 3-யில் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் கப்ஷிலுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஆடினார். பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ஆடம் ஸாம்பாவின் பந்தில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை இறங்கி வந்து அடித்து கப்ஷில் அரைசதத்தை கடந்தார்.

மார்ட்டின் கப்ஷில்
மார்ட்டின் கப்ஷில்
Andrew Cornaga

11, 12, 13 இந்த மூன்று ஓவர்களிலும் தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார் கப்ஷில். இந்த மூன்று ஓவர்களில் 36 ரன்கள் கிடைத்ததன் மூலம் சதத்தை நெருங்கத் தொடங்கினார். 97 ரன்களில் இருக்கும்போது டேனியல் சாம்ஸின் ஓவரில் லாங் ஆஃபில் பெரிய சிக்சர் அடித்து சதத்தை கடக்க கப்ஷில் முயன்றார். ஆனால், துரதிஷ்டவசமாக லாங் ஆஃபில் நின்ற ஸ்டாய்னிஸிடம் கேட்ச் ஆகிப்போனார். சதத்தை தவறவிட்டிருந்தாலும் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடிய திருப்தியோடு கப்ஷில் வெளியேறினார். இடையே நன்றாக ஆடி அரைசதம் கடந்திருந்த வில்லியம்சனும் ஸாம்பாவின் பந்தில் போல்டானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசி 5 ஓவர்கள் முழுவதிலும் ஜேம்ஸ் நீஷம் அதிரடியில் வெளுத்து வாங்கினார். க்ரீஸுக்குள் வந்து நீஷம் சந்தித்த முதல் மூன்று பந்துகளுமே சிக்சர்தான். 19-வது ஓவரை கேன் ரிச்சர்ட்சன் சிறப்பாக வீசிவிட, டேனியல் சாம்ஸ் வீசிய 20-வது ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அட்டகாசப்படுத்தினார். இதன் மூலம் நியூஸிலாந்து அணியின் ஸ்கோர் 219 ஆனது.

ஜோஷ் ஃபிலிப்பே
ஜோஷ் ஃபிலிப்பே
Andrew Cornaga

220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கடந்த போட்டியில் 185 ரன்களை எடுக்க முடியாமல் 131 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட் ஆகியிருந்தது. 200+ ஸ்கோர் என்பதால் ஆஸி எப்படியும் இந்த போட்டியிலும் திணறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடுமையாக போராடி டார்கெட்டுக்கு நெருக்கமாக வந்துவிட்டது ஆஸி!

ஓப்பனரான மேத்யூ வேட் கொஞ்சம் அதிரடியாக ஆடிவிட்டு ஆட்டமிழக்க, ஃபின்ச், மேக்ஸ்வெல் எல்லாம் பெரிதாக ஒன்றும் செய்யாமல் ஆட்டமிழந்தனர். ஜோஷ் ஃபிலிப்பேவும் ஸ்டாய்னிஸுமே ஆஸியை டார்கெட்டை நோக்கி முன்நகர்த்தி சென்றனர்.

இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போதே 13-வது ஓவரில் சான்ட்னர் ஆஸிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். ஃபிலிப்பே, அகர், மிட்ச்செல் மார்ஷ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு ஆஸியின் சேஸிங் அவ்வளவுதான் என நினைக்கும்போது டேனியல் சாம்ஸ் உள்ளே வந்து ஸ்டாய்னிஸுடன் அதிரடியில் இறங்கினார்.

ட்ரென்ட் போல்ட்
ட்ரென்ட் போல்ட்
Andrew Cornaga

கடைசி 5 ஓவர்களில் ஆஸியின் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சவுத்தி வீசிய 16-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை அடித்து மிரட்டினார் சாம்ஸ். ஸ்டாய்னிஸ் மற்றும் சாம்ஸின் அதிரடியால் அசாத்தியமான டார்கெட் எளிமையாகத் தொடங்கியது. கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை நீஷம் கையில் கொடுத்தார் வில்லியம்சன். நீஷமின் முதல் ஓவரே இதுதான். முதல் பந்தையே ஃபுல் டாஸாக வீச அதை தூக்கியடித்து கேட்ச் ஆனார் டேனியல் சாம்ஸ். 15 பந்துகளில் 41 ரன்கள் அடித்து சாம்ஸ் வெளியேற கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

ஸ்டாய்னிஸ் ஒரு பந்தை சிக்ஸராக்கிவிட்டு அடுத்த சிக்ஸருக்கு முயல, லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசிப் பந்தில் ஜை ரிச்சர்ட்சன் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. பேட்டிங்கிலும் கடைசியில் இறங்கி சிறப்பாக ஃபினிஷ் செய்து கொடுத்த நீஷம் பௌலிங்கிலும் கடைசி ஓவரை சிறப்பாக வீசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஸ்டாய்னிஸ் 37 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆஸியின் வெற்றிக்காக முயன்றார்.

ஸ்டாய்னிஸ் மற்றும் சாம்ஸின் அதிரடியே ஆஸியை டார்கெட்டுக்கு நெருக்கமாக கொண்டு வந்தது. 97 ரன்கள் அடித்து நியூஸிலாந்தின் வெற்றிக்கு உதவிய கப்ஷிலுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு