கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

இனியும் இவர்கள் அண்டர்டாக்ஸ் இல்லை!

Cricket Newzealand
பிரீமியம் ஸ்டோரி
News
Cricket Newzealand ( AP )

ஒரு துடுப்பை மட்டும் நம்பி கரையில் செலுத்தப்படும் படகு அதிக தூரம் செல்லாது என்பார்கள். நியூசிலாந்து கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த உலகக் கோப்பையை எதிர்கொண்டது

``இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்லத் தகுதியான அணி. நாங்கள் அண்டர்டாக்ஸ் தான். ஆனால், இந்த நாளில் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்வோம்" - உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இவ்வாறாகச் சொன்னார். கிட்டத்தட்ட அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாகி ஃபெர்ஸகுன் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போதும் சொன்னது இது தான். ``உலகக் கோப்பைக் கனவு எங்களைப் போன்று யாருக்கும் கை நழுவி போயிருக்காது . அது வெற்றியோ, தோல்வியோ எங்களைப் போல் யாரும் சொதப்பவில்லை’’ என்றார் போல்ட்.

ஒரு துடுப்பை மட்டும் நம்பி கரையில் செலுத்தப்படும் படகு அதிக தூரம் செல்லாது என்பார்கள். நியூசிலாந்து கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இறுதிப்போட்டி வரை கன்சிஸ்டன்ட்டாக சொதப்பினர் நியூசிலாந்தின் ஓப்பனர்கள். காலின் மன்ரோ, கப்டில், நிக்கோலஸ் என அவர்களும் எப்படி எப்படியோ காம்பினேஷனை மாற்றிப் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் முதல் பத்து ஓவர்களுக்குள் ஓப்பனர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தார்கள். இந்தத் தொடரில் கப்டில் அடித்த ரன்கள் 188. அவரின் சராசரி 20. கடந்த 2015 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் 237 ரன்கள் எடுத்த கப்டில், இந்த முறை பத்து இன்னிங்ஸில் எடுத்திருப்பது 188.

கப்டில் பெர்பாமன்ஸ்

Guptill
Guptill
AP
வெர்சஸ் இலங்கை 73* (51)
வெர்சஸ் பங்களாதேஷ் 25 (14)
வெர்சஸ் அஃப்கானிஸ்தான் 0 (1)
வெர்சஸ் தென் ஆப்பிரிக்கா 35 (59) ~ ஹிட் விக்கெட்
வெர்சஸ் மேற்கு இந்திய தீவுகள் 0 (1)
வெர்சஸ் பாகிஸ்தான் 5 (4)
வெர்சஸ் ஆஸ்திரேலியா 20 ( 43)
வெர்சஸ் இங்கிலாந்து 8 (16)
வெர்சஸ் இந்தியா 1 (14)
வெர்சஸ் இங்கிலாந்து 19 (18)

கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் தவிர்த்து அந்த அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாகவே இறுதிவரை தொடர்ந்தது. கேன் வில்லியம்சன் அடித்த ஒவ்வொரு ரன்னும், நெருக்கடியான கட்டத்தில் அடிக்கப்பட்ட ரன்கள். சொதப்பும், டாப் ஆர்டரை மீட்பார் வில்லியம்சன். ஆனால், அவர் அந்தப் பந்துகளை எதிர்கொண்ட விதம், ஏனோ நெட் செஷசனில் ஆடுவது போல் இருக்கும். அவ்வளவு நேர்த்தியான ஒரு பேட்ஸ்மேன் வில்லியம்சன். அதீத முதிர்ச்சி கொண்ட ஒரு கேப்டன். இந்த அணி, இவ்வளவு தூரம் வந்ததற்கு, கேன்தான் மிகப்பெரிய காரணம். ஃபைனலில் காலின் கிராந்த்தோமை, பந்துவீச அழைத்தது எல்லாம் வேற லெவல் ஸ்ட்ரோக்.

இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கு வங்கம் என நியூசி தொடர்ச்சியாக வென்று கொண்டிருந்தபோது, இதுவொரு பிரச்னையாகவே இல்லை. உலகக் கோப்பைக்கு முன்னர் பலரது ஃபேவரிட்ஸில் இடம்பெற்ற அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று. நியூசி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என்பதுதான் பலரது சாய்ஸ். ஆனால், நியூசிலாந்தின் பேட்டிங் தகிடுதத்தோம் ஆட ஆரம்பித்தது.

பாகிஸ்தானுடனான போட்டியில் அது இன்னும் பிரகாசமானது. கப்டில் (5), முன்ரோ (12). டெய்லரும் சொதப்ப, இந்தத் தொடரின் முதல் தோல்வியைச் சந்தித்தது நியூசிலாந்து. பேட்டிங் தடுமாற்றத்தைக் கடந்து, சொதப்பினால் தோற்போம் என்னும் பயத்தை இந்தப் போட்டி நியூசிக்கு விதைத்தது. அடுத்தப்போட்டி ஆஸ்திரேலியாவுடன் , வேறென்ன தோல்விதான். ஓப்பனிங் ஜோடியில் இந்த முறை முதலில் அவுட்டானது நிக்கோலஸ். கப்டில் அடித்துவிட்டாரா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. 20 ரன்கள் எடுத்தார். அதற்கே, கேன் வில்லியம்சன் கப்டிலுக்கு நன்றி சொல்லியிருப்பார். 243 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இனியும் இவர்கள் அண்டர்டாக்ஸ் இல்லை!

செமி ஃபைனலுக்குச் சென்ற அணிகளில், மிகவும் பரிதாபகரமாக இருந்த அணி, நியூசிலாந்துதான். ஆம், இந்தியாவுடனான போட்டியில் முடிவு இல்லை. ஆஸ்திரேலியாவிடம் தோற்றுவிட்டது. நியூசிலாந்தின் கடைசிப் போட்டி , லீக் சுற்றில் இங்கிலாந்துடன்., வென்றால், அரையிறுதியில் ஃபார்முக்கு திரும்பலாம் என்கிற நிலை. ஆனால் நம்பிக்கையற்ற நியூசிலாந்து அதில் தோல்வியைத் தழுவியது. நிக்கோலஸ் முதல் ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கப்டில் பத்து ஓவர்களுக்குள் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 305 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய அணி, 200 ரன்கள் கூட அடிக்க முடியாமல் ஆல் அவுட்டானது. ஹேட்ரிக் தோல்விகள்.ஆனால், லீக் சுற்றின் ஆரம்பத்தில் செய்த புண்ணியம், அந்த அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது.

இந்தியாவுடனான அரையிறுதியில் முழுக்க அண்டர்டாக்ஸாகப் பார்க்கப்பட்டது நியூசி. ``நாங்கள் எப்போதும் அண்டர்டாக்ஸ்தான். செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக விளையாடும் அணி வெல்லட்டும்’’ என்றார் நியூஸி அணியின் ஃபெர்குஸன். காரணம், அவர்களின் நிலையை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பது ஒன்று. மற்றொன்று, அவர்கள் அடக்கியே வாசித்தார்கள் என்பதுதான். ஆனால், இந்தியா அன்று சற்று ஜாலியாகவே நியூசிலாந்தை எதிர்கொண்டது. சச்சின் மட்டும் தான் ``ஃபைனலைப் பற்றித் தற்போது பேசிக்கொண்டிருப்பவர்கள் கிரிக்கெட்டை புரிந்து கொள்ளாதவர்கள். செமி ஃபைனலில் இருக்கும் போது, ஃபைனல் பற்றிப் பேசாதீர்கள். நியூசிலாந்து அண்டர் ரேட்டட் என்றாலும், அது மிகச்சிறந்த அணி. அவ்வளவு எளிதாக இந்தியாவால் வெல்ல முடியாது" என்றார்.

இனியும் இவர்கள் அண்டர்டாக்ஸ் இல்லை!

Indians play the same Old song in a knockout game என்பது சச்சினுக்குத் தெரியாததல்ல. அதனால்தான் அப்படிச் சொன்னார். ஒட்டுமொத்த தொடரிலும் மெத்தனமாய் இருந்ததற்கு சேர்த்து, கப்டில் அன்று செய்த ரன் அவுட் அவர்களை ஃபைனல் நோக்கி அழைத்துச் சென்றது. நியூசி இந்தியாவை வென்றது என்பதைவிட, இந்தியா நியூசியிடம் தோற்றது என்பதுதான் சாலப் பொருந்தும்.

ஃபைனலில் நியூசிலாந்து. ``பந்து எங்கு சென்றது என்றெல்லாம் நான் பார்க்க வில்லை. ஓட ஆரம்பித்துவிட்டேன். சிறு இன்ச் இடைவெளியில் க்ரீசை தொட முடியவில்லை’’ என்றார் சூப்பர் ஓவரின் முடிவில் கப்டில். சில இன்ச்தான் நியூசியை ஃபைனலுக்கு அழைத்து வந்தது. அதே சில இன்ச்தான், உலகக் கோப்பையை அவர்களிடம் இருந்து பிரித்தது. இரண்டிலும் கப்டில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதுதான் சுவாரஸ்ய முரண்.

பவுண்டரிகள் தான் ஆட்டத்தில் வலிமையான அணியை தேர்ந்தெடுக்கும் உத்தியா... அதற்கு எப்படி ஆறு ரன்கள்... இந்த விதியே தவறு என ஆயிரம் கட்டுரைகள் வெளிவந்துவிட்டன. ஆறு ரன்கள் வழங்கிய இலங்கையின் தர்மசேனாவே அது தவறு தான் என ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால், அதற்காக அதைப் பற்றி வருந்த ஒன்றும் இல்லை என்றும் சொல்லிவிட்டார். காரணம், நாம் அனைவரும், அந்தப் பந்து முடிந்ததும், அதன் ரீப்ளேக்கள், அதற்குப் பின் வரும் கட்டுரைகள், அது சார்ந்து பேசும் அனுபவ வீரர்கள் எனப் பலரது பேச்சுக்களை கேட்கிறோம். அது நமது எண்ணத்தை மேலும் அங்கீகரிக்கும் அல்லது மாற்ற முயற்சிக்கும். அது அந்த நொடியில் எடுக்கப்பட்ட முடிவு. அது நியூசிலாந்துக்கு எதிராய் அமைந்துவிட்டது என்பதுதான் சோகமான விஷயம். ஆனால், அவர்கள் அதற்காக அதிகம் வருந்தத்தேவையில்லை. சூப்பர் ஓவர் வரைச்சென்று, அதுவும் டை ஆகி, பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளர் நியமிக்கப்பட்டிருக்கும் இந்தப் போட்டி, 175 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்தப் போட்டியை சூப்பர் ஓவரும், பவுண்டரிகளும் மட்டும் தீர்மானிக்கவில்லை. ஒரு அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பும் சில ரன் அவுட்களும் இந்தப் போட்டியின் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த உலகக் கோப்பை முழுக்கவே ரன் அவுட்கள் செய்த திருப்புமுனைகள் ஏராளம். அது, சூப்பர் ஓவர் வரை தொடர்ந்தது தான் ஆச்சர்யத்தின் உச்சம். காரணம், இங்கிலாந்து இந்த முறை அவர்களைவிடச் சிறப்பாகவே ஒவ்வொரு போட்டியிலும் வென்று இருக்கிறது.