Published:Updated:

லார்ட்ஸில் இங்கிலாந்து Vs நியூஸிலாந்து டெஸ்ட் : யார் யார் விளையாடுகிறார்கள், என்ன எதிர்பார்க்கலாம்?

#ENGvNZ
#ENGvNZ

இதுவரை இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் ஒட்டுமொத்தமாக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 46 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது. எஞ்சிய போட்டிகளில், 48-ல் இங்கிலாந்தும், 11-ல் நியூஸிலாந்தும் வென்றுள்ளன. இங்கிலாந்தின் கையே ஓங்கி இருப்பதுபோல் இருந்தாலும்

2019-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின், ஒன்றரை ஆண்டுகள் இடைவேளைக்குப்பிறகு, ஒரு டெஸ்ட் போட்டிக்குத் தயாராகிறது, கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானம். ஜுன் 2 முதல் 14 வரை நடக்கயிருக்கும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும், இரண்டு போட்டிகளையுடைய டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட், இன்னும் சற்று நேரத்தில் இங்கே தொடங்கயிருக்கிறது.

இழப்பை ஈடுகட்டுவதற்கான போட்டி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணைக்குள் அடங்காத இத்தொடர், கடந்தாண்டு கொரோனா காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற போட்டிகளால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்ட, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே, எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இரண்டாவது போட்டிக்கு, 70 சதவிகிதம் பார்வையாளர்கள் வருகைதர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை டு உலகக்கோப்பை!

இதே மைதானத்தில், கடந்த 2019-ல் ஒரு உலகக்கோப்பையை இங்கிலாந்துக்குத் தாரைவார்த்த வலியோடு கிளம்பிப் போன நியூஸிலாந்து, இந்த ஆண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஒத்திகையாக, இந்தத் தொடரை சந்திக்க இருக்கிறது. இங்கிலாந்து பொறுத்தவரை, இது இன்னொரு இருதரப்புப் போட்டி, அவ்வளவே. ஆனால், நியூஸிலாந்தைப் பொறுத்தவரை, இங்கிலாந்திலுள்ள பேட்டிங், பௌலிங் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளுதல், தகுந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தல், அதற்கேற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொண்டு, காத்திருக்கும் பெரிய சவாலுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல் என குறுகிய காலத்திற்குள், நிறையவே வேலைகள் மீதமிருக்கின்றன அவர்களுக்கு.

இங்கிலாந்தின் ஆதிக்கம்!

இங்கிலாந்துக்கு, தங்களது நாட்டில் விளையாட இருப்பது, கூடுதல் பலமாக இருக்கப் போகிறது. இதுவரை இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் ஒட்டுமொத்தமாக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 46 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது. எஞ்சிய போட்டிகளில், 48-ல் இங்கிலாந்தும், 11-ல் நியூஸிலாந்தும் வென்றுள்ளன. இங்கிலாந்தின் கையே ஓங்கி இருப்பதுபோல் இருந்தாலும் இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி இரண்டு டெஸ்ட் தொடரையும், நியூஸிலாந்தே வென்றிருக்கிறது‌.

#ENGvNZ
#ENGvNZ

வீரர்களுக்கு ஓய்வு!

ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் ஃபோக்ஸ் ஆகியோர், காயத்தால் இதில் விளையாட மாட்டார்கள் என்பது ஒருபுறம் எனில், மொயின் அலி, பேர்ஸ்டோ, சாம் கரண் என ஒரு பெரிய பட்டாளத்திற்கே ஓய்வுகொடுத்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட். ஐபிஎல் வீரர்களை, இதில் பயன்படுத்த முடியாதென்ற ஒப்பந்த அடிப்படையிலும், சுழற்சிமுறை வீரர்கள் பயன்பாட்டுக்காகவும், ஓய்வு கொடுத்து, இங்கிலாந்து 'ஏ' அணியோடு இறங்குவது போலவேதான் இறங்குகிறது. இது நியூஸிலாந்துக்கு பெரிய வாய்ப்பாகிறது. இங்கிலாந்தின் பயிற்சியாளர், கிறிஸ் சில்வர்வுட், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரை மனதில் வைத்தே, வீரர்கள் தேர்வினையும், பல புதிய பரிசோதனைகளையும் முன்னெடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இந்தியத் தொடரில், சிறப்பான பங்காற்றிய, விக்கெட் கீப்பரான ஃபோக்ஸ் விளையாடாததால், அந்த வாய்ப்பு சாம் பில்லிங்ஸுக்கோ அல்லது ஜேம்ஸ் பிரேஸிக்கோ கிடைக்கலாம். நியூஸிலாந்தின் பக்கமோ, டிரென்ட் போல்ட், இரண்டாவது போட்டியில்தான் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளதுடன் பல புதிய முகங்களும் களமிறக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

வில்லியம்சனும் ரூட்டும்!

'ஃபாபுலஸ் 4'-ல் இருவரான இவ்விருவருமே, இரு அணி கேப்டன்களாக, தத்தம் அணிக்கு பெரிய பலமாக அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 11 டெஸ்ட் போட்டிகளில், நியூஸிலாந்துக்கு எதிராக ஆடியுள்ள ரூட், அதில், 44.75 என்ற சராசரியோடு, 895 ரன்களையும் கொடுத்து, நம்பிக்கையளிக்கிறார். இதில், இரண்டு சதங்களும், ஐந்து அரைசதங்களும் அடக்கம். முத்தாய்ப்பாக, 2019-ல் அவர்களுக்கு எதிராக, இரட்டைச் சதத்தையும் (226 ரன்கள்) அடித்திருந்தார் அவர். காயத்தால் விலகாமல், ரூட் விளையாடினால், இவரால், பெரிய தலைவலி காத்திருக்கிறது, நியூஸிலாந்துக்கு. இன்னொரு பக்கம், கேன் வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிராக, 11 போட்டிகளில், 43.71 சராசரியோடு, 741 ரன்களை, நான்கு அரைசதங்கள், மூன்று சதங்களோடு எட்டியுள்ளார். அதோடு, கடைசியாக, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தானுடனான போட்டிகளில், அவரது அபார ஆட்டம், இங்கிலாந்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என உணர்த்துகிறது.

STUART BROAD
STUART BROAD

பௌலிங் பலவான்கள்!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, ஆன்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. மார்க் உட்டும் இணையும்போது வேகத்தால் மிரட்டுவார்கள். அதே நேரத்தில், நியூஸிலாந்தும் சளைக்காது, இங்கிலாந்து களநிலவரங்களை வேகமாய்க் அறிந்துகொள்ளும் கட்டத்தில், டிம் சவுத்தி, நீல் வாக்னர், மேட் ஹென்ரி மற்றும் கைல் ஜாமீசனைக் கொண்டு திருப்பி அடிக்கலாம்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து, ஏற்கெனவே சொன்னதைப் போல, இளம் வீரர்களுக்கான பயிற்சியாக இத்தொடரைப் பார்க்கிறது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகிய முக்கிய ஆல்ரவுண்டர்கள் இல்லாதது, மற்ற வீரர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக இருந்தாலும், பர்ன்ஸ், ஓலி போப், க்ராவ்லி போன்ற வீரர்கள், தங்களது திறமையை மேலும் நிரூபிக்க, இது வாய்ப்பாக அமையும். அதேபோல், ஸ்பின்னராக, மொயின் அலியின் இடத்தை, ஜாக் லீச் முழுமையாக நிரப்புவார் என நம்பலாம். நியூஸிலாந்தில், கான்வே மீதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ராச்சின் ரவீந்திரா மீதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

வாட்லிங் ஓய்வு!

நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பல ஆண்டுகளாக ஆடி வரும் வாட்லிங், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியோடு, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.அவரது கிரிக்கெட் வாழ்வின் இறுதித் தொடர்கள் என்பதாலும், இங்கிலாந்துக்கு எதிராக, அவரது சராசரி, 55.57 என அரள வைப்பதாலும், இத்தொடரில் அவருடைய முழுப் பங்களிப்பையும், அவர் அளிக்கலாம்.

மழையும் விளையாடலாம்!

பேட்டிங்கிற்கும் பௌலிங்கிற்கும் சமமாக மைதானம் ஆதரவளிக்கும் என்று கணிக்கப்பட்டாலும், முதல் மூன்று நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கும், இறுதி இரு நாட்கள், சுழலுக்கு ஆதரவளிக்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் சொல்லப்படுவது போலவே, முதல் போட்டியில், கடைசி இரண்டு நாட்கள், மழை தன் பங்குக்கு விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், போட்டி முழுமையாக, ஐந்து நாட்கள் நடைபெறுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#ENGvNZ
#ENGvNZ

மூன்று அணிகள் சங்கமம்!

மற்ற ஃபார்மேட்களில் கெத்து கட்டும் இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நிலவின் மேற்பரப்பாக, மேடு பள்ளங்களைச் சந்தித்தே வருகிறது. எனவே, நியூஸிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றி சாதிக்கவே முயலும். அதேபோல், நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் அடுத்தடுத்த தொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைய இருக்கின்றன என்பதால், இம்மூன்று நாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைக்க கூடியதாக, இந்தத் தொடர்கள் அமைய இருக்கின்றன.

வெற்றி வசப்படுமா?!

லார்ட்ஸில், இதுவரை விளையாடியுள்ள, 17 டெஸ்ட்களில், ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது நியூஸிலாந்து. அதேநேரத்தில், இரண்டாவது டெஸ்ட் நடைபெற உள்ள எட்ஜ்பாஸ்டனிலும், ஒரு வெற்றியைக்கூட இதுவரை, நியூஸிலாந்து பெற்றதில்லை. எனினும், கடந்த 15 மாதங்களில், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் என எல்லா அணியையும் வீழ்த்தி, தோல்விமுகத்தையே காணாத நியூஸிலாந்து, இம்முறை, 22 ஆண்டுகள் கால இடைவெளிக்குப்பின், தனது வெற்றியை, லார்ட்ஸில் பதிவேற்றி, எட்ஜ்பாஸ்டனில் சாதனை நிகழ்த்தும் என நம்பலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்ட நிலையில், ஒரு தோல்வி கூட, தங்களது நம்பிக்கையின் அஸ்திவாரத்தை ஆட்டங்காண வைக்குமென்பதால், முழுத் திறமையையும் காட்டி, நியூசிலாந்து விளையாடும். இங்கிலாந்தோ, கடந்தாண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இறங்கியதைப்போன்ற ஒரு ஸ்டார் பிளேயர்களற்ற அணியோடு களத்தைச் சந்திக்கிறது. யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு