Published:Updated:

புதிய விதிமுறைகள், புதிய ஆச்சர்யங்கள்... ஐபிஎல்-க்கு சவால்விடும் பிக்பேஷ் லீக் எப்படியிருக்கிறது?!

பிக்பேஷ் லீக்
பிக்பேஷ் லீக்

ஆட்டத்தில் 10 ஓவர் முடிந்த பிறகு, ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றவாறு ப்ளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றிவிட்டு சப்ஸ்டியூட் வீரர் ஒருவரை முழுமையாக உள்ளே கொண்டு விளையாட விடலாம்.

முன்னணி வீரர்களின் விலகல், க்வாரன்டீன் குழப்பங்கள், போட்டி அட்டவணை குளறுபடிகள் என ஆரம்பத்திலேயே தடுமாறிக்கொண்டிருந்த பிக்பேஷ் லீகின் 10 வது சீசன் ஒருவழியாக ஹோபர்டில் நேற்று தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹோபர்ட் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு முன் இந்த சீசன் முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில புதிய விதிமுறைகளை பற்றி சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

பவர்ப்ளே - வழக்கமாக டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளே ஆக இருக்கும். ஆனால் இங்கே முதல் 4 ஓவர்கள் மட்டும்தான் பவர்ப்ளே. மீதமிருக்கும் 2 ஓவர் பவர்ப்ளேவை 11 ஓவர்கள் முடிந்த பிறகே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

X Factor- ஆட்டத்தில் 10 ஓவர் முடிந்த பிறகு, ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றவாறு ப்ளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றிவிட்டு சப்ஸ்டியூட் வீரர் ஒருவரை முழுமையாக உள்ளே கொண்டு விளையாட விடலாம்.

BashBoost- சேஸ் செய்கிற அணி 10 ஓவர்கள் முடிவில் டிஃபண்ட் செய்யும் அணியின் 10 ஓவர் முடிவில் எடுத்த ஸ்கோரை விட அதிக ஸ்கோர் எடுத்தால் ஒரு புள்ளி வழங்கப்பட்டுவிடும். ஒருவேளை சேஸ் செய்யும் அணி அதிக ஸ்கோரை எடுக்காவிடில் டிஃபண்ட் செய்யும் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டுவிடும்.

டி20 கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளோடுதான் நேற்றைய போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹோபர்ட் அணியின் ஓப்பனர்களாக டார்சி ஷாட்டும், வில் ஜாக்ஸும் களமிறங்கினர். இரண்டு பேரும் எந்த பங்களிப்பையும் அளிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். மனேந்தி வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் வில் ஜாக்ஸ். வார்சூய்ஸ் வீசிய அடுத்த ஓவரில் எட்ஜ்ஜாகி ஸ்லிப் ஃபீல்டரான எட்வர்ட்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டார்சி ஷார்ட். இதன் பிறகு கூட்டணி போட்ட கேப்டன் ஹேண்ட்ஸ்கோம்பும் காலின் இங்கிராமும் பொறுமையாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கத் தொடங்கினர்.

பிக்பேஷ் லீக்
பிக்பேஷ் லீக்

முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் 18 ரன்கள் மட்டுமே கிடைத்திருந்தது. இதேப்போல பொறுமையாக ஆடி கடைசியில் இந்த கூட்டணி கியரை மாற்றியிருக்கலாம். இங்கேதான் இந்த புதிய விதிமுறையான BashBoost வேலையை காட்டியது. 10 ஓவர்களில் ரிஸ்க் எடுக்காமல் ஒரு 50-60 ரன்னை எடுத்தால், சிட்னி சிக்ஸர்ஸ் சேஸ் செய்யும் போது மிக எளிதாக 10 ஓவர்களில் கூடுதல் ரன்கள் அடித்து 1 பாயின்ட்டை எடுத்துவிடும். அதனால் 5 வது ஓவரிலிருந்தே கியரை மாற்றத் தொடங்கினார் இங்கிராம். ஆஃப் சைடில் கவர்ஸ் தலைக்கு மேல் பவுண்டரியாக அடித்து மிரட்டினார். இங்கிராமின் அதிரடியால் அடுத்த 4 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் வந்தது. சூட்டோடு சூடாக நானும் கியரை மாற்றுகிறேன் என ஓகீஃப் வீசிய ஸ்பின்னில் இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆனார் கேப்டன் ஹேண்ட்ஸ்கோம்ப்.

இதன்பிறகு ரன்ரேட் கொஞ்சம் குறைய 10 ஓவர்களில் 73 ரன்களை எடுத்திருந்தது ஹோபர்ட்ஸ். 3 விக்கெட்டுகளை இழந்திருந்ததால் X factor விதியைப் பயன்படுத்தி ஒரு பௌலரை இழந்து பேட்ஸ்மேனை உள்ளே கொண்டு வருவார்களா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஒரு ஐடியா ஹோபர்ட்ஸ்க்கு வரவில்லை.

இங்கிராம் - ரைட் கூட்டணி கொஞ்சம் செட்டில் ஆகி கொண்டிருக்க, 12-வது ஓவரை வீச வந்தார் டேன் கிறிஸ்டியன். இந்த ஓவரின் முதல் பந்தையே அவர் ஷாட் பாலாக வீச, ரைட் புல் ஷாட் ஆடி பவுண்டரி லைனில் சில்க்கிடம் கேட்ச் ஆனார். நம்பர் 6-ல் டிம் டேவிட் எனும் சிங்கப்பூர் பேட்ஸ்மேன் உள்ளே வந்தார். இங்கிராம்-டேவிட் கூட்டணி அடுத்த இரண்டு ஓவர்களுக்கு கொஞ்சம் அடக்கி வாசித்தது. 14 ஓவர்களுக்கு 97 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது ஹோபர்ட். பெரிய ஸ்கோருக்கு செல்ல வேண்டுமெனில் கியரை மாற்ற வேண்டும் என முடிவெடுத்த இந்த கூட்டணி 2 ஓவர் பவர்ப்ளேவை எடுத்தது. இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியே நின்றனர் ஓகீஃப் வீசிய 15-வது ஓவரில் டிம் டேவிட் ஹேட்ரிக் பவுண்ட்ரிகள் விளாசினார். இங்கிராம் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு, இன்னொரு சிக்சருக்கு முயல, அதை பவுண்டரி லைனில் செமயாக தடுத்தார் சில்க். ஐபிஎல் நிக்கோலஸ் பூரான் செய்ததை போன்ற சேவ் அது.

அடுத்த பவர்ப்ளே ஓவரை டேன் கிறிஸ்டியன் வீசினார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து டேவிட்டுக்கு ரூம் கொடுக்காமக் காலிலேயே வீசி கட்டுப்படுத்தினார் கிறிஸ்டியன். இந்த ஓவரிலேயே இங்கிராமும் 55 ரன்னில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்த ஓவரிலேயே ஜேம்ஸ் ஃபாக்னரும் வெளியேறிவிட்டார். முக்கியமான பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் ஸ்கோர் எப்படியும் 150-க்குள் அடங்கிவிடும் என எதிர்பார்க்கையில், கடைசி 3 ஓவர்களில் டிம் டேவிட் வெளுத்தெடுத்தார். அந்த 3 ஓவர்களில் மட்டும் 47 ரன்கள் வந்தது. வார்சூயிஸ் வீசிய ஒரே ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் டிம் டேவிட் 58 ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 178 ஆக உயர்ந்தது.

பிக்பேஷ் லீக்
பிக்பேஷ் லீக்

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிட்னி சிக்சர்ஸ் அணி சேஸிங்கைத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஜோஸ் ஃபிலிப்பே 1 ரன்னில் ஃபாக்னர் வீசிய ஒரு இன்ஸ்விங்கரில் எல்பிபிள்யூ ஆகி வெளியேறினார். ஆனால், நம்பர் 3-ல் வந்த வின்ஸி, எட்வர்ட்ஸுடன் கூட்டணி போட்டு நிலைத்து நின்றார். முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் 30 ரன்களை எடுத்தது சிட்னி சிக்சர்ஸ். எல்லா பௌலர்களையும் பயன்படுத்தியப்பிறகும் இந்த கூட்டணியை பிரிக்கவே முடியவில்லை. ரொம்பவே சுலபமாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை நல்ல நிலைமைக்கு அழைத்து சென்றனர்.

ஹோபர்ட் 10 ஓவர்கள் முடிவில் எடுத்திருந்த 73 ரன்னை 8.4 ஓவர்களிலே சிட்னி சிக்சர்ஸ் எடுத்துவிட அந்த அணிக்கு Bash Boost படி ஒரு பாயின்ட் கிடைத்தது. தொடர்ந்து இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டதால் சிட்னி அணி எளிதில் வென்றுவிடும் என நினைக்கையில், 12-வது ஓவரில் பவர்ப்ளேவை எடுத்தது சிட்னி. இதன்பிறகுதான் ஆட்டமே மாறத் தொடங்கியது. இந்த இரண்டு ஓவர்களில் பெரிதாக ரன்கள் அடித்து ஆட்டத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என இந்த கூட்டணி தங்களுக்குத் தாங்களே ப்ரஷரை போட்டுக்கொண்டது. ஆனால், இந்த இரண்டு ஓவர்களில் இவர்களால் பெரிதாக எதிர்பார்த்தப்படி பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. எலிஸும் போலண்ட்டும் இந்த ஓவர்களை சிறப்பாக வீச 18 ரன்கள் மட்டுமே சென்றிருந்தது. வின்ஸியும் எட்வர்ட்ஸும் தங்களுக்கு தாங்களே பவுண்டரி ப்ரஷரை உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். ஃபாக்னர் வீசிய 14-வது ஓவரில் வின்ஸி 67 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து மெரிடித் வீசிய 15-வது ஓவரிலேயே எட்வர்ட்ஸும் 47 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.

இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து வெளியேற, ஹுக்ஸும் சில்க்கும் புதிய பேட்ஸ்மேன்களாக உள்ளே வந்தனர். கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இவர்களால் உடனே பெரிய ஷாட்டுகள் ஆட முடியாததால் பவுண்டரி ப்ரஷர் உண்டானது. ப்ரஷரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது. அதிரடி பேட்ஸ்மேன்களான கிறிஸ்டியனும் பிராத்வெயிட்டும் களத்தில் நின்றும் கடைசியில் ஆட்டம் சிட்னி சிக்சர்ஸின் கையை விட்டுப்போனது. ஹோபர்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அதிரடியாக ஆடி 58 ரன்களை எடுத்த ஹோபர்ட்ஸின் டிம் டேவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

`பிக்பேஷ் லீகின் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட போதே பலத்த சர்ச்சைகள் எழுந்தது. முதல் போட்டியிலேயே புதிய விதிமுறைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொல்லப்போனால், ஆட்டத்தை மாற்றியதே சிட்னி சிக்சர்ஸ் தவறான நேரத்தில் எடுத்த அந்த பவர்ப்ளே ஓவர்கள்தான். ஏற்கெனவே சுலபமாக பவுண்டரிகள் வந்துக்கொண்டிருந்த நிலையில் பவர்ப்ளேவை எடுத்து பவுண்டரி அடித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தை தங்களுக்கு தாங்களே வின்ஸியும் எட்வர்ட்ஸும் போட்டுக்கொண்டதன் விளைவுதான் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து ஆட்டம் கையை மீறிப்போனது.

வெற்றிபெற்ற ஹோபர்ட்ஸ் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்கும் நிலையில், தோல்வியடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் ஒரு புள்ளி கிடைத்திருக்கிறது. காரணம், சிட்னி சிக்சர்ஸ் 10 ஓவர்களில் ஹோபர்ட்ஸை விட அதிக ரன்கள் எடுத்து Bash Boost ஐ வென்றிருந்தது.

முதல் போட்டியிலேயே இந்த விதிமுறைகள் மிகப்பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னமும் இந்த தொடர் முழுவதும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!? பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு