Published:Updated:

மன்கட் இனி ரன் அவுட்; டெட்பால், வைடில் மாற்றங்கள்; நோ எச்சில்... கிரிக்கெட்ல இனிமே இதெல்லாம் மாறுது!

கிரிக்கெட்

இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

மன்கட் இனி ரன் அவுட்; டெட்பால், வைடில் மாற்றங்கள்; நோ எச்சில்... கிரிக்கெட்ல இனிமே இதெல்லாம் மாறுது!

இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

Published:Updated:
கிரிக்கெட்

கிரிக்கெட் ஆட்டமுறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான புதிய விதிகளை அறிவித்திருக்கிறது மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப். இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

MCC
MCC

கேட்சிங்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், மன்கட் முறையை அங்கீகரித்துள்ளது, வைடு அறிவிப்பதில் மாற்றம், எச்சிலுக்குத் தடை எனப் பல்வேறு புதிய விதிகளின் தொகுப்பு இதோ...

ரன்-அவுட்டாகும் மன்கட் முறை:
Mankad
Mankad

நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்டரை மன்கட் (Mankad) செய்வது இனி ரன் அவுட் எனக் கருதப்படும் என அறிவித்திருக்கிறது MCC. இதை விதி 41-இல் (நியாயமற்ற ஆட்டம்) இருந்து விதி 38-க்கு (ரன் அவுட்) மாற்றி உறுதிப்படுத்தியுள்ளது. “இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்யும் பௌலரை வில்லன்போல கருதும் வழக்கம் உண்டு. ஆனால் இதுவும் ஒரு நியாயமான முறையே” என்று இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் MCC கிளப்பின் விதிகளை நிர்வகிக்கும் குழுவில் உள்ள ஃப்ராசேர் ஸ்டீவார்ட்.

க்ரீஸ் சேஞ்சிற்கு இனி வழியில்லை:
Catch
Catch

முன்பு கேட்ச் முறையில் ஒரு பேட்டர் ஆட்டமிழக்கும்போது அந்த இரு பேட்டர்களும் பாதி பிட்சைக் கடந்திருந்தால் புதிய பேட்டர் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டிற்குச் சென்றுவிடுவார். ஆனால் அதற்கு இப்போது வழியில்லாமல் செய்துவிட்டது புதிய விதி. அதாவது விக்கெட் விழுந்த பந்தில், கேட்ச் பிடிக்கும் முன்னரே அந்த இரு பேட்டர்களும் பாதி பிட்சைக் கடந்து இருந்தாலும் அடுத்த பந்தைச் சந்திப்பது புதிய பேட்டரே! வழக்கமான விதிமுறைப்படி, ஓவரின் கடைசிப் பந்துக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.

இவையெல்லாம் இனி டெட் பால்:

ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு களத்தின் வெளியில் இருந்து ஒரு நபராலோ, விலங்கு அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளாலோ இடையூறு ஏற்பட்டால் அந்தப் பந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதேபோல டெலிவர் ஸ்ட்ரைடிற்கு வருவதற்கு முன்பே பௌலர் பேட்டரை (ஸ்ட்ரைக்கர்) ரன்-அவுட் செய்ய முயன்றால் அதுவும் டெட் பாலாகவே கருதப்படும். இது மிக அரிதாகவே நடக்கும் ஒன்று. மேலும் ஒரு பந்தைச் சந்திக்க பிட்சை விட்டு பேட்டர் முழுமையாக வெளியே சென்றுவிட்டால் அதுவும் டெட் பால் என நடுவரால் அறிவிக்கப்படும்.

டெட் பால்
டெட் பால்
டெட் பால் + 5 ரன்கள்:

ஒரு பேட்டர் பந்தைச் சந்திக்கும் போது ஃபீல்டிங் அணி நியாயமற்ற முறையில் நகர்ந்து இடையூறு செய்தால் அப்பந்து டெட் பாலாக மட்டும் இதுவரையில் கருதப்பட்டது. ஆனால் அது பேட்டர் ஆடும் நல்ல ஷாட்டையும் வீணாக்குவதால் பெனால்டியாக 5 ரன்கள் பேட்டிங் அணிக்கு அளிக்கப்படும் எனப் புதிய விதி கூறுகிறது.

மாற்று வீரருக்குப் பங்குண்டு:

இதுவரையில் ஃபீல்டிங் அணியில் காயப்பட்டும் வீரர்களுக்கு மாற்றாகக் களமிறங்கும் சப்ஸ்டியூட் வீரர்கள் கேட்ச்சோ அல்லது ரன்-அவுட்டோ செய்தால் அது அவரின் கணக்கில் (கரியர் நம்பர்ஸ்) எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது. இனி அவர்கள் பங்களிப்பது அவர்களையே சேரும்.

வைடு கொடுப்பதில் மாற்றம்:
Wide signal
Wide signal

தற்போதைய டி20 யுகத்தில் பெரும்பாலான பேட்டர்கள் பொறுமையாக தங்களது ஸ்டான்சில் நின்று ஆடுவதில்லை. பௌலர்களைக் குழப்புவதற்காகவும், கடினமான பந்தைச் சுலபமாகக் கையாள்வதற்காகவும், பேட்டர்கள் தங்களின் பொசிஷனை மாற்றிவாறே நகர்ந்து செல்கின்றனர். அதாவது, ஸ்டம்பை விட்டு விலகுவது, முன் செல்வது எனப் பல சாகசங்களைச் செய்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பௌலர் ரன்-அப் தொடங்கிய பிறகு பேட்ஸ்மேன் நின்ற இடத்தைக் கணக்கு வைத்து, அதிலிருந்து விலகிச் செல்லும் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எச்சிலுக்குத் தடை:
Shining the ball
Shining the ball

கொரோனா லாக்டௌனுக்குப் பிறகிருந்தே பந்தை ஷைன் செய்வதற்கு எச்சில் பயன்படுத்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது MCC-யின் ஆய்வில் எச்சில் பயன்படுத்துவது பந்தின் ஸ்விங்கிற்கு எந்த வகையிலும் உதவாது என்றும் வியர்வை கொண்டு பாலிஷ் செய்வதே நல்ல பலனைக் கொடுக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. எனவே எச்சில் பயன்படுத்துவது பந்தைச் சேதமாக்கும் செயல் என இனி கருதப்படும்.

இந்தப் புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே கமென்ட்டில் சொல்லுங்கள்.