Published:Updated:

HBD Nehra: அசாரூதின் டு கோலி... எல்லா காலத்திலும் கம்பேக் - விழுந்தவன் எழுவதற்கான உந்துசக்தி நெஹ்ரா!

Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா

அசாரூதின் காலத்தில் அறிமுகமான நெஹ்ரா, கங்குலி காலத்தில் தீவிரமாக கிரிக்கெட் ஆடி ஓய்ந்துவிட்டார் என்றே பேசப்பட்டது. ஆனால், நெஹ்ரா மீண்டும் வந்தார். தோனி காலத்திலும் கம்பேக் கொடுத்தார். அது மட்டுமா, கோலியின் காலத்திலும் திரும்பி வந்தார். அதுதான் நெஹ்ரா!

HBD Nehra: அசாரூதின் டு கோலி... எல்லா காலத்திலும் கம்பேக் - விழுந்தவன் எழுவதற்கான உந்துசக்தி நெஹ்ரா!

அசாரூதின் காலத்தில் அறிமுகமான நெஹ்ரா, கங்குலி காலத்தில் தீவிரமாக கிரிக்கெட் ஆடி ஓய்ந்துவிட்டார் என்றே பேசப்பட்டது. ஆனால், நெஹ்ரா மீண்டும் வந்தார். தோனி காலத்திலும் கம்பேக் கொடுத்தார். அது மட்டுமா, கோலியின் காலத்திலும் திரும்பி வந்தார். அதுதான் நெஹ்ரா!

Published:Updated:
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா

`நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' பவர்ஃபுல்லான இந்த வசனத்தை சமகால இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரிடம் கொடுத்து ரீல்ஸ் செய்ய சொன்னால், அட்டகாசமாக செய்து அதகளப்படுத்திவிடுவார். அது பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும். லைக்ஸ் அள்ளும். வைரல் ஆகும். ஆனால், இந்த வசனத்தின் கணத்தை பார்வையாளர்களுக்கு முழுவதுமாக அவர்களால் கடத்திவிட முடியுமா? இந்த வசனத்திற்கு பின் உள்ள ரணத்தை அவர்களால் உணர்த்திவிட முடியுமா? சந்தேகம்தான்.

Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
அதெல்லாம் நிகழ வேண்டுமெனில் ஓய்வுபெற்ற ஆஷிஷ் நெஹ்ராவை அழைத்து வந்துதான் இந்த வசனத்தை பேச வைக்க வேண்டும். `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என நெஹ்ரா பேசினால் அது வெறும் வாயசைப்பாக மட்டும் இருக்காது. பதினெட்டு ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் அடிபட்டு விழுந்து விழுந்து இனி எழவே மாட்டார் என நினைத்தபோதெல்லாம் மீண்டெழுந்து காட்டினாரே, அந்த வலியை அந்தப் போராட்டத்தை அந்தத் தீரத்தை அந்த வசனத்தில் நம்மால் உணர முடியும்.

1999 இலங்கையில் இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார் நெஹ்ரா. அந்தப் போட்டியில் மொத்தமாக 28 ஓவர்களை வீசினார். 94 ரன்களை வாரிக்கொடுத்தார். ஆனால், பதிலுக்குக் கிடைத்ததென்னவோ வெறும் ஒரே ஒரு விக்கெட்டுதான். நெஹ்ரா எங்கிருந்து கிளம்பினாரோ அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டார். கனவுகளோடு கிளம்பியவர் முதல் போட்டியுடனே ஓரங்கட்டப்பட்டார். கிரிக்கெட் கரியர் ஆரம்பிப்பதற்குள்ளேயே முடிந்ததை போன்ற உணர்வு. ஆனாலும் தளர்ந்துவிடவில்லை. அதே வேகத்தில் தடதடத்தார். தடைகளைத் தாண்டி ஓடினார். இலக்குகளைக் குறிவைத்து பந்துகளை இறக்கினார். இரண்டாண்டுகள் உள்ளூர் போட்டிகளில் நல்ல ஆட்டம். வருடங்கள் ஓடி இந்திய அணி கங்குலியின் கட்டுக்குள் வருகிறது. சல்லடையில் சலித்து திமிறி எழும் இளம் வீரர்களை அள்ளி வந்தார் கங்குலி. நெஹ்ராவுக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. 2001, சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் நெஹ்ரா. டெஸ்ட் மட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார்.

Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா

2003 உலகக்கோப்பையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அட்டாக்கே வெறித்தனமாக இருக்கும். ஜாகீர்கான், ஜவஹல் ஸ்ரீநாத் இவர்கள் இருவரோடு நெஹ்ராவும் கங்குலியின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்தார். ஆஸ்திரேலியாவின் கில்லிஸ்பீ, ப்ரெட் லீ, மெக்ராத் கூட்டணிக்கு இணையான எதிர்பார்ப்பு இவர்களிடமும் இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் இவர்களும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தனர். குறிப்பாக, நெஹ்ரா சில மறக்க முடியாத சம்பவங்களை செய்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 260 ஸ்கோரை டிஃபண்ட் செய்த சமயத்தில் 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மைக்கேல் வாஹன், நாஸீர் ஹூசைன் உட்பட இங்கிலாந்தின் முக்கியமான அத்தனை விக்கெட்டுகளையும் சாய்த்திருப்பார்.

இன்றைய தேதி வரைக்கும் உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய பௌலர் ஒருவரின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான்.

அந்தத் தொடரில் இன்னும் சில சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்களையும் நெஹ்ரா கொடுத்திருப்பார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இறுதிப்போட்டியில் கூட மற்ற பௌலர்களெல்லாம் ரன்களை வாரி வழங்க நெஹ்ராவின் எக்கானமி மட்டும் 6 க்கு கீழ்தான் இருந்தது.

அந்த 2001-2005 காலகட்டத்தில் நெஹ்ரா மிகத்தீவிரமாக கிரிக்கெட் ஆடியிருந்தார். 2005க்கு பிறகு நெஹ்ராவின் கரியரில் பெரிய இடைவெளி விழுந்தது. ஏகப்பட்ட காயங்கள். கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் நெஹ்ராவின் கிரிக்கெட் காலண்டரிலிருந்து காணாமலே போயின. அசாரூதின் காலத்தில் அறிமுகமான நெஹ்ரா, கங்குலி காலத்தில் தீவிரமாக கிரிக்கெட் ஆடி ஓய்ந்துவிட்டார் என்றே பேசப்பட்டது. ஆனால், நெஹ்ரா மீண்டும் வந்தார். தோனி காலத்திலும் கம்பேக் கொடுத்தார். காயங்களினால் டெஸ்ட் போட்டிகளைக் காவு கொடுத்து 2009-ல் மீண்டும் ஓடிஐ அணிக்குள் வந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக இந்திய அணியில் தோனியின் முக்கியமான துருப்புச்சீட்டாக இருந்தார்.

Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
2011 உலகக்கோப்பையின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த 260 ரன்களை டிஃபண்ட் செய்த போது 10 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.

வெறித்தனமான அந்த ஸ்பெல்லுக்கு பிறகு இறுதிப்போட்டியிலும் நெஹ்ரா மேட்ச் வின்னிங் ஸ்பெல்லை வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கையை உடைத்துக் கொண்டு ஒரு கட்டோடு நெஹ்ரா பெவிலியனில் உட்காந்திருந்தார். அவருடைய கரியர் மொத்தமும் இப்படியான காயங்களால்தான் நிறைந்திருந்தது. அணிக்காக மாங்கு மாங்கென உழைப்பார். அடிபடுவார். காயமடைவார். ஓரங்கட்டப்படுவார். ஆனால், அப்படியே ஒதுங்கிவிடமாட்டார். மீண்டும் வருவார். கங்குலி காலத்தில்...தோனி காலத்தில் திரும்பி வந்ததை போலவே கோலியின் காலத்திலும் திரும்பி வந்தார். அதுதான் நெஹ்ரா!

2011 அந்த உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணியே ஒரு டிரான்சிஸன் பீரியடுக்குள் நுழைந்தது. நெஹ்ரா ஒதுக்கப்பட்டார். வழக்கத்தை போன்று இந்த முறை அவருக்கு கம்பேக் அவ்வளவு சுலபமாக அமையவில்லை. வயது அதிகமாகியிருந்தது. நெஹ்ராவைத் தவிர அவரை சுற்றி யாருக்குமே கம்பேக் மீதெல்லாம் நம்பிக்கையில்லை.

2014-ல் அந்த அதிசயம் நடந்தது. சென்னை அணிக்காக தோனி நெஹ்ராவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். அந்த ஒரே சீசனில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா
Ashish Nehra | ஆஷிஷ் நெஹ்ரா

ஒளிக்கீற்றுக்கள் நுழையவே முடியாத அடர் இருளிலிருந்து நெஹ்ரா மீண்டும் கம்பேக் கொடுத்தார். 2016 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை என முக்கியமான தொடர்களிலெல்லாம் ஆடி கடைசியில் தானே ஓய்வு முடிவை அறிவித்தார். டெல்லியில் தனது சொந்த மைதானத்தில் கடைசி போட்டியில் ஆடிவிட்டு ஓய்வு பெற்றிருந்தார்.

ஒரு பௌலர் ஒரு முறை கம்பேக் கொடுப்பதே அதிசயத்திலும் அதிசயமான விஷயம். ஆனால், நெஹ்ராவோ ஒரு நான்கைந்து முறை வாய்ப்பே இல்லாத இடங்களிலிருந்து கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' இந்த வசனத்திற்கு ரீல்ஸ் செய்ய நெஹ்ராவை விட தகுதியான வீரர் வேறு யார் இருக்கிறார்? ஆனால், ஒரே ஒரு பிரச்னைதான். நெஹ்ராவிடம் ஸ்மார்ட் ஃபோன்கூட கிடையாது. பரவாயில்லை, `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என நெஹ்ரா வசனம் பேசுவது போல நீங்களே மனதுக்குள் ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். அத்தனையும் இழந்து சரிந்து விழுந்தாலும் மீண்டு எழுவதற்கான ஒரு பெரும்நம்பிக்கை கிடைக்கும்!