Election bannerElection banner
Published:Updated:

நடராஜன் Vs ஷர்துல் தாகூர்... யாருக்கு வாய்ப்புக் கொடுக்கப்போகிறார் ரஹானே!? #AUSvIND #SydneyTest

நடராஜன்
நடராஜன்

ஷர்துல் தாகூருக்கும் நடராஜனுக்கும்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. ஷர்துல் தாகூரை பொருத்தவரை அவர் ரஞ்சி போட்டிகளில் பெரிய அனுபவம் கொண்ட வீரராக, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்திருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக தமிழக வீரரான நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜனுக்கு டெஸ்ட் அணிக்குள் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சஸ்பென்ஸ்தான்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர் உள்பட நான்கு பௌலர்களோடு களமிறங்கியது. பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஸ்லாட்டில் இடம் கிடைத்திருந்தது. அந்தப் போட்டியில் கம்மின்ஸ் வீசிய ஷாட் பிட்ச் டெலிவரியில் முழங்கையில் அடிபட்டு காயமடைந்தார் ஷமி. இதனால் தொடரிலிருந்தே வெளியேறிய அவருக்குப் பதிலாக முகமது சிராஜுக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அறிமுக வீரராக களமிறங்கிய சிராஜ் முதல் போட்டியில் 5 விக்கெட் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும் போது உமேஷ் யாதவ் காயமடைய அவரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் அவருக்கான மாற்று வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட இந்திய அணிக்கு நெட் பௌலராக இருந்த தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர் ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் வீரர் நடராஜன்

பும்ராதான் அணியின் மெயின் பௌலர். அதனால் அவர் ப்ளேயிங் லெவனில் உறுதியாக இருப்பார். கடந்த போட்டியில் அறிமுகமான சிராஜும் 5 விக்கெட் எடுத்திருப்பதால் சிராஜும் தனக்கான இடத்தை சிட்னி டெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்திவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். மீதமிருப்பது மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான ஒரே ஒரு ஸ்லாட்தான். அந்த ஒரு ஸ்லாட்டிற்கு மொத்தம் 3 வீரர்கள் போட்டியில் இருக்கின்றனர். நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் என ரஹானே முன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. ரஹானே யாரைத் தேர்ந்தெடுப்பார்?

நவ்தீப் சைனியைப் பொருத்தவரை லாக்டெளனுக்கு பிறகு அவர் வேகத்தில் மிரட்டிக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக அவரால் 145+ கிமீ வேகத்தில் வீச முடிகிறது. பிட்ச்சில் கொஞ்சம் புற்கள் இருந்தால் இவருடைய வேகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆஸிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலியின் முதல் சாய்ஸாக சைனிதான் இருந்தார். ஆனால், அவரால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. அவருக்குப் பதிலாக நடராஜன் உள்ளே வந்த மூன்றாவது போட்டியில்தான் இந்தியா வென்றது. அடுத்து நடந்த டி20 தொடரிலும் சைனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ஒரு இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியவர், இன்னொரு இன்னிங்ஸில் 16 ஓவர்கள் வீசி 87 ரன்களை கொடுத்தார். எனவே, சைனியை பொருத்தவரை அவர் ஒரு சீரற்ற பெளலராகவே பார்க்கப்படுகிறார். மேலும், அவர் 100% உடல்தகுதியுடனும் இருப்பது போல் தெரியவில்லை என்பதால் ரஹானே சைனியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு குறைவுதான்.

Navdeep Saini
Navdeep Saini
AP

ஷர்துல் தாகூருக்கும் நடராஜனுக்கும்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. ஷர்துல் தாகூரை பொருத்தவரை அவர் ரஞ்சி போட்டிகளில் பெரிய அனுபவம் கொண்ட வீரராக, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் கைதேர்ந்தவராக இருக்கிறார். 60 போட்டிகளில் விளையாடி 200+ விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலேயே ஷர்துல் தாகூர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிவிட்டார். ஆனால், முதல் போட்டியிலேயே 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்துவிட அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த முறைதான் ப்ளேயிங் லெவனுக்குள் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. ஆனால், கடுமையான போட்டியாளராக நடராஜன் இருக்கிறார்.

நடராஜனைப் பொருத்தவரை அவரின் பௌலிங் ஸ்டைல் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆகுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அவர் அதிகம் யார்க்கர்களையும், ஸ்லோயர் பந்துகளையும்தான் வீசுவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு பந்தை ஸ்விங் செய்ய வேண்டும். நீண்ட ஸ்பெல்களை வீச வேண்டும். நடராஜன் ஒயிட் பாலில் கில்லியாக இருந்தாலும் ரெட் பாலில் அவர் அவ்வளவாக ஆடியதில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் அவரது பௌலிங் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற சந்தேகம் ரஹானேவுக்கு இருக்கலாம்.

பும்ரா, சிராஜ், நடராஜன் என்கிற லைன் அப்பை ரஹானே தேர்வு செய்வாரா என்பதும் சந்தேகமே! சிராஜ் இப்போதுதான் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவரை முழுமையாக நம்பிவிட முடியாது. நடராஜன் ரெட் பாலில் என்ன செய்வார் என்பது பெரிதாக தெரியாது. இப்படி ஒரு சூழ்நிலையில் பும்ரா மீது மட்டுமே அத்தனை அழுத்தமும் குவிந்துவிட வாய்ப்பிருக்கிறது. இதை ரஹானேவும் யோசித்திருப்பார். அதேநேரத்தில் ஷர்துல் தாகூரை ப்ளேயிங் லெவனில் எடுத்தால் அவர் ஒரு ஸ்ட்ரைக் பௌலராக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஷர்துல் தாகூர்
ஷர்துல் தாகூர்
twitter

பும்ரா+சிராஜ்+ஷர்துல் என்கிற லைன் அப் ரஹானேவுக்கு விக்கெட்டுக்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை கொடுக்கக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பும்ரா+சிராஜ்+நடராஜன் என்கிற லைன் அப்பை தேர்ந்தெடுத்து நடராஜன் ஒருநாள், டி20-க்களில் மிரட்டியது போல இங்கேயும் மிரட்டிவிட்டால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம். நடராஜன் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலையில் இருப்பதால் நடராஜனை முயற்சி செய்து பார்க்கலாம்.

"நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக வீசுவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அணிக்குள் இடம் கிடைத்து ஒரு சௌகரியமான சூழல் அவருக்கு ஏற்பட்டுவிட்டால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார்'' என்று சொல்லியிருக்கிறார் டேவிட் வார்னர். நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்து தனது பாசிட்டிவ் கேப்டன்சியால் ரஹானே அவருக்கு ஊக்கம் அளிக்கும்பட்சத்தில் மேட்ச் வின்னிங் ஸ்பெல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் ஷர்துல் தாகூரும் வாய்ப்பை பெறக்கூடிய அளவுக்குத் தகுதியான வீரர்தான்.

ரசிகர்களைப் பொருத்தவரை, சிட்னியில் ஷர்துல் தாகூர் இறக்கப்பட்டால் சந்தோஷம். நடராஜன் இறக்கப்பட்டால் இரட்டை சந்தோஷம். மொத்தத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2-1 என லீட் எடுக்கவேண்டும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு