Published:Updated:

`சச்சினை அவுட்டாக்க என் மனம் விரும்பியதில்லை!' -பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்

சச்சின்
சச்சின்

பிரெய்ன் லாரா, ரிக்கிங் பாண்டிங்.. காலிஸ் எல்லாம் பேட்டிங் செய்ய வந்தால் அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என மனம் நினைக்கும். ஆனால், சச்சினை அவுட்டாக்க நான் விரும்பியதில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

சச்சின் 100 கோடி மக்களின் நம்பிக்கை நாயகன். இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சச்சின் டெண்டுல்கரின் கவர் ட்ரைவுக்குப் பலர் அடிமை. சச்சின் அவுட்டாகும் வரைதான் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பார்கள். இதை இந்திய வீரர் முகமது கைஃப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2002-ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் சீரீஸ் போது கங்குலி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்ஸியை கழற்றி சுழற்றியது எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்தத்தொடரின் இறுதிப்போட்டியில் கங்குலி – சேவாக் அட்டகாசமான ஓப்பனிங் கொடுத்தும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

யுவராஜ், கங்குலி முகமது கைஃப்!
யுவராஜ், கங்குலி முகமது கைஃப்!

இளம்வீரர்களான யுவராஜ் – கைஃப் இருவரும் அட்டகாசமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்தப்போட்டியில் சச்சின் 14 ரன்களில் அவுட்டாகி வெளியேறியதும் கைஃப் குடும்பத்தினர் டிவியை ஆஃப் செய்துவிட்டு படம் பார்க்கச் சென்றுவிட்டார்களாம். பக்கத்துவீட்டினர் சொல்லித்தான் இந்தியா வெற்றி பெற்றது தெரியும் என கைஃப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சச்சின் அவுட்டாவதை நான் எப்போது விரும்பியதில்லை என பாகிஸ்தான் வீரர் அதுவும் சச்சின் காலத்தில் அவருக்கு எதிராக விளையாடிய ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். ``நிறைய வீரர்கள் பேட்டிங் செய்ய வருவார்கள். நான் கீப்பிங் செய்துகொண்டிருப்பேன். ஆனால், சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய வரும்போது மட்டும் அவர் அவுட்டாகி விடக் கூடாது என நினைப்பேன்.

சச்சின்
சச்சின்

நான் கீப்பிங் செய்துகொண்டே சச்சினுடைய பேட்டிங்கை ரசிப்பேன். டிவி-க்களில் பார்க்க விரும்பமாட்டேன். ஸ்டெம்புகளுக்குப் பின்னால் நின்று சச்சின் பேட்டிங்கை ரசிப்பேன். பிரெய்ன் லாரா, ரிக்கிங் பாண்டிங்.. காலிஸ் எல்லாம் பேட்டிங் செய்ய வந்தால் அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என மனம் நினைக்கும்.

டெண்டுல்கரின் பண்பு தனித்துவமானது. நான் ஸ்டெம்புகளுக்கு பின்னால் நின்றுகொண்டு எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பேன். டெண்டுல்கர் எப்போதும் எதுவும் சொன்னதில்லை. புன்னகையை மட்டுமே பதிலாக சிந்திவிட்டுச் செல்வார். ஆனால், மற்றவர்கள் எல்லாம் உடனே எதிர்வினையாற்றுவார்கள்.

சச்சின்
சச்சின்

சச்சின் மற்றும் முகமது அசாருதீன் இருவரும் புன்னகைத்து விட்டுச் செல்வார்கள். இவர்கள் எதிரணி வீரர்களை தங்களது ஆளுமையால் சொந்தமாக்கிக் கொள்வார்கள். இதனால்தான் அனைவரும் சச்சினைப் போற்றுகிறார்கள். குறிப்பாக விக்கெட் கீப்பர்கள் போற்றுகின்றனர். சச்சின் சதங்களை விளாசுவார். பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வார். ஆனால், ஒருபோதும் வார்த்தைகளால் தாக்கமாட்டார்.

ஒரு விக்கெட் கீப்பராக நீங்கள் அவரை வெளியேற்ற தூண்ட முயன்றால் அப்போதும் எதிர்வினையாற்ற மாட்டார். நீங்கள் ஒரு இன்னிங்ஸ் ஆடுவீர்கள்.. வெளியேறுவீர்கள். ஆனால், உங்கள் நடத்தையைதான் எல்லோரும் நினைவில் வைத்திருப்பர். களத்தில் சிறந்த நடத்தையைக் கொண்ட வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது என்னுடைய கருத்து. இதுபோன்ற வீரர்கள் எப்போது உங்கள் நினைவில் இருப்பார்கள்” என ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு