டிஎன்பிஎல் டி-20 தொடர் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், திருச்சி வாரியர்ஸ் - தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணிகள் மோதின. முரளி விஜய்யின் அசத்தல் சதத்தால் திருச்சி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

டாஸ் வென்ற திருச்சி பேட்டிங் தேர்வு செய்ய, முரளி விஜய் - முகுந்த் கூட்டணி ஓப்பனிங் களமிறங்கியது. அதிசயராஜ் டேவிட்சன் வீசிய நான்காவது ஓவரிலேயே முகுந்த் வெளியேற, அதே ஓவரில் ஒன் டவுன் களமிறங்கிய ஆதித்யாவும் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய ஆதித்யா கணேஷுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய், 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
முரளி விஜய் - 101 (57) - 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்
இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய், நான்கு முறை 50+ ஸ்கோர் செய்து ஃபார்மில் உள்ளார். இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய விஜய், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசினார். 57 பந்துகளில் சதம் அடித்த அவர், 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த ஆதித்யா கணேஷ் அரை சதம் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு திருச்சி வாரியர்ஸ் அணி 177 ரன்கள் எடுத்தது.
வெற்றி இலக்கை சேஸ் செய்த தூத்துக்குடி அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சுப்ரமணிய சிவா, அக்ஷய் ஶ்ரீனிவாசன் இணை 41 ரன்கள் சேர்த்தது. 63 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஷய் ஶ்ரீனிவாசன் அவுட்டாக, தூத்துக்குடி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். ஓவர்கள் குறைந்துகொண்டே வர, சேஸிங் கடினமானது. திருச்சி வாரியர்ஸ் பெளலர்கள் சந்திரசேகர், பொய்யாமொழி தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு தூத்துக்குடி அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
2019 டிஎன்பிஎல் லீக் சுற்றின் ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்திந்த திருச்சி வாரியர்ஸ், தூத்துக்குடியை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட திருச்சி வாரியர்ஸ், கடைசி லீக் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால், ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும் தூத்துக்குடி பேட்ரியட்ஸ், கடைசி லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸை எதிர்கொள்கிறது.