''உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய அணியின் தேர்வாளர்கள், கேப்டன்ஷிப் குறித்து கூடிப் பேசியிருக்க வேண்டும். கோலிதான் கேப்டன் என அந்த மீட்டிங்கில் ஒன்றுகூடி முடிவெடுத்திருந்தால், அடுத்து அவரை கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு அணியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் நடக்கவில்லை.
எந்தக் கூட்டமும் விவாதங்களும் இல்லாமல், கோலி கேப்டனாக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதன்மூலம், தேர்வாளர்கள் சொல்லவருவது என்ன? உலகக் கோப்பை தோல்விக்கு கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றவர்களை பலி கொடுத்துவிட்டு, இறுதிப் போட்டிக்குள்கூட நுழையாமல் வெளியேறியதில் கேப்டனுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?'' - 'டெலிகிராஃப்' பத்திரிகையில் இப்படி தன் 'மும்பை' குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.
''கவாஸ்கர் சார் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை மிக மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா, உலகக் கோப்பையில் சுமாராக விளையாடவில்லை. 7 போட்டிகளில் வென்று இரண்டில் மட்டுமே தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியடைந்தது. நேர்மைதான் எல்லாவற்றுக்கும் மேலான தகுதி'' - என ட்வீட் தட்டியிருக்கிறார் மற்றொரு மும்பை 'லெஜண்ட்' சஞ்சய் மஞ்ரேக்கர்.
இந்திய அணிக்குள் பிளவு... ரோஹித் ஷர்மாவுக்கும் கோலிக்கும் இடையேப் பனிப்போர்... ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை முழுவதும் தன் மனைவியுடன் தங்கியிருந்தது கோலிக்குப் பிடிக்கவில்லை... பும்ரா, ஹர்திக் உள்ளிட்ட மும்பை பெளலர்களை கோலி மரியாதையுடன் நடத்தாதது ரோஹித்துக்குப் பிடிக்கவில்லை என யூகங்களைக் கிளப்பிவிட்டு, கோலி VS ரோஹித் என முட்டச்செய்வதும் இதே மும்பை வட்டாரம்தான்.

இவர்கள் அனைவரும் சொல்லவருவது ஒன்றுதான். ''கோலி, கேப்டன் பொறுப்புக்குத் தகுதியானவர் இல்லை. ரோஹித் ஷர்மா, மும்பைக்காக நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்திருக்கிறார். அவரிடம் இந்தியாவின் கேப்டன் பொறுப்பைக் கொடுத்துவிடுங்கள்!'' – இதைத்தான் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகச் சொல்லிவருகிறார்கள்.
ஆனால், இதே மும்பை வட்டாரம், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் இருப்பு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. பயிற்சியாளராக ரவி சாஸ்திரி எடுத்த முடிவுகளை இதுவரை விமர்ச்சித்து கட்டுரைகள் எழுதவில்லை. ஆனால், கேப்டனை காவு கேட்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய அணியின் பல்வேறு சொதப்பல் முடிவுகளில் மிக முக்கியக் காரணியாக இருந்தவர், ரவி சாஸ்திரி. ஆனால், தோல்விகளுக்கு முகமாக கோலியைக் காட்டிவிட்டு சாஸ்திரியை மறைக்கப்பார்க்கிறது மும்பை லாபி. ''கேப்டனுக்கும்-துணை கேப்டனுக்கும் சண்டை, டிரெஸ்ஸிங் ரூமில் ஒற்றுமை இல்லை, கோச் என்ன செய்யமுடியும்?'' என்று இறுதியாக கோச்சைக் காப்பாற்றிவிட்டு, கேப்டனைத் தெருவில் கொண்டுவந்து நிறுத்தும் அரசியல் இது.

வரும் ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி, இந்தியாவுக்கான புதிய பயிற்சியாளர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறது கிரிக்கெட் வாரியம். இந்த 14 நாள்களுக்குள், இந்தியா-வெஸ்ட் இண்டீஸுடன் டி20, ஒருநாள் தொடர்களை விளையாடி முடித்திருக்கும். இதன் முடிவில், கோலியின் கேப்டன்ஸி குறித்த விவாதங்கள் மீண்டும் எழும். ஆனால், பயிற்சியாளர் பற்றி எதுவும் வராது. ரவி சாஸ்திரிதான் இந்தியாவின் பயிற்சியாளராகத் தொடரப்போகிறார் என உறுதியாகச் சொல்கிறது கிரிக்கெட் வட்டாரம். அப்படியானால் மாற்றப்படப்போகிறவர் யார்?
உலகக் கோப்பைத் தோல்விக்கு கோலி காரணமா?!
உலகக் கோப்பைக்கு முன்பாக கோலியின் கேப்டன்சி குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தது உண்மைதான். சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் கோலி திணறினார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், 2019 உலகக் கோப்பையில் அவர் காட்டிய முதிர்ச்சி பிரமிக்கவைத்தது. இங்கிலாந்து போய் இறங்கியதுமே, `நாங்கள் 400 ரன்கள் அடிப்போம், நாங்கள்தான் இந்த உலகக் கோப்பையின் வின்னர்’ என ஒவ்வொரு கேப்டனும் கோதாவில் இறங்கித் தங்கள் பராக்கிரமங்களை வாய் வார்த்தைகளால் விவரித்துக்கொண்டிருந்தபோது, ''உலகக் கோப்பையின் இரண்டாம் கட்டத்தில் 250 ரன்கள் என்பதே பெரிய டார்கெட்டாக இருக்கும். உலகக் கோப்பை என்கிற உணர்வு தரும் அழுத்தத்தில் 250 ரன்களை டிஃபண்ட் செய்வதே சவாலாக இருக்கும்'' எனச் சரியாகச் சொல்லியிருந்தார், கோலி.
அரை இறுதி, இறுதிப்போட்டிகளில் கோலி சொன்னதுதான் நடந்தது. 250 ரன்களுக்கும் குறைவான டார்கெட்டையே பேட்டிங்கில் அசுரபலம் பொருந்திய இந்தியாவும், இங்கிலாந்தும் அடிக்கத் திணறின.
''விமானநிலையம், ஹோட்டல் என எல்லா இடங்களிலும் திரும்பத் திரும்ப கோப்பையோடு வாருங்கள் என்றுதான் எல்லோரும் எங்களிடம் சொல்கிறார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் அளவில்லா எதிர்பார்ப்பைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை நடப்பது எங்களுக்கு கூடுதல் பிரஷர்தான். ஆனால், இதைச் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்களுக்கு இருக்கிறது.''தோனி
உலகக் கோப்பையின் நிதர்சனங்கள், இங்கிலாந்தின் சூழல், அந்நாட்டின் ஆடுகளங்கள், உலகக் கோப்பையின் அழுத்தங்கள் என்று எல்லாவற்றையும் சரியாகப் புரிந்துவைத்திருந்ததோடு, அதைத் தன் அணியினருக்கும் சரியாகக் கடத்தினார் கோலி. 2011 உலகக் கோப்பையின்போது, கேப்டன் தோனியிடம் மிகப்பெரிய பாசிட்டிவ் எனர்ஜியைப் பார்க்க முடிந்தது.
அப்போது, அதை பாசிட்டிவாக எடுத்துச்சொன்னார் தோனி.
2019-லும் நிலைமை அதேதான். உலகக் கோப்பை நடந்தது இங்கிலாந்தில்தான் என்றாலும் இந்திய ரசிகர்களால் கூட்டம் நிரம்பிவழிந்தது. ஹோட்டல், மைதானம் என இந்திய வீரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பின்தொடர்ந்தார்கள். முதன்முறையாக உலகக் கோப்பைக்குத் தலைமைத்தாங்கும் கேப்டனுக்கு இதெல்லாமே கூடுதல் பிரஷர்தான். ஆனால், பாசிட்டிவாக இருந்தார் கோலி. 2011-ல் தோனியிடம் இருந்த எனர்ஜியை கோலியிடம் பார்க்க முடிந்தது.
பத்திரிகையாளர் சந்திப்புகளில் மிகவெளிப்படையாகப் பேசினார். சரியான விமர்சனங்களை எடுத்துக்கொண்டு மாற்றங்கள் செய்தார். ப்ளேயிங் லெவனை சொதப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அணிக்குள் ஒரு பாசிட்டிவ் அதிர்வுகள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
ரோஹித் ஷர்மா, பும்ரா, தவான் என மேட்ச் வின்னர்களைக் கொண்டாடினார். ''ரோஹித் ஷர்மாதான் ஒரு நாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர். ரோஹித் ஷர்மா அடிக்க ஆரம்பித்தால், அது இந்தியாவை மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி அழைத்துச்செல்கிறது. அவர் விளையாடும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன்'' என ஓப்பனாகச் சொன்னவர் கோலி. ஆனால், அப்படிப்பட்டவரைத்தான் ரோஹித்துடன் சண்டை என கிளப்பிவிடுகிறார்கள்.
''எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அது என் முகத்தில் வெளிப்பட்டுவிடும். இந்தச் செய்திகள் திகைப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அணிக்குள் உண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்படிச் செய்திகளை உருவாக்குபவர்கள், இதன்மூலம் என்ன பயனடைய விரும்புகிறார்கள் என்று புரியவில்லை''கோலி
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டையும், இந்திய கிரிக்கெட் அணியின் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில், என்னால் பல மாற்றங்களை உணரமுடிகிறது. உண்மையில், பிசிசிஐ பத்திரிகையாளர் சந்திப்புகளில் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை இருக்காது. சர்ச்சைகள் குறித்து கேள்விகள் கேட்டால், பதில் தராமல் அடுத்த கேள்விக்குத் தாவுவார்கள். கங்குலி, டிராவிட், கும்ப்ளே, தோனி வரை இதுதொடர்ந்து நடந்தது. கூல் கேப்டனான தோனியே பல நேரங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்படும்போது எந்த பதிலும் தராமல் செய்தியாளைரையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பார். அடுத்த கேள்விக்குத் தாவுவார்கள்.

ஆனால், கோலியின் கேப்டன்ஸியில் அப்படியில்லை. வெளிப்படையாக இருக்கிறார் கோலி. தவறுகளை ஒப்புக்கொள்கிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்குப் பதில் தருகிறார். அவர் என்ன மூடில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எதையும் அவர் மறைக்க முற்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட கோலியைத்தான் வில்லனைப் போல இப்போது சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு அணியாக இணைந்து விளையாடும்போது, சின்னச்சின்ன ஈகோ மோதல்கள் இருக்கத்தான் செய்யும். கபில்தேவ்- கவாஸ்கர், சித்து-அசாருதின், டிராவிட் - சச்சின், தோனி - ஷேவாக், தோனி - கம்பீர் எனப் பல ஈகோ மோதல்களை இந்திய கிரிக்கெட் சந்தித்திருக்கிறது. ஆனால், ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ரன் மெஷின் கோலியை மட்டம்தட்டுவது என்பது புது ரகமாக இருக்கிறது.

ரோஹித்தான் கேப்டனுக்குத் தகுதியானவர் என்றால், அதை ஏன் உலகக் கோப்பைக்கு முன்பாகவே இந்த மும்பை லாபி அழுத்தமாகச் சொல்லவில்லை? ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்கிவிட்டு, 20/20 உலகக் கோப்பையில் தோல்வியடைந்தால், மீண்டும் கோலியிடம் கேப்டன்சியைத் தரச்சொல்வார்களா? தோல்வியென்று வந்துவிட்டால் கேப்டனை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு மற்றவர்கள் ஒளிந்துகொள்வது என்ன அணுகுமுறை?
இப்போது, இந்திய அணிக்குத் தேவை தொடர் வெற்றிகள். மேற்கு இந்தியத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என அடுத்தடுத்து இந்தியா டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடயிருக்கிறது. கோலி தன் வெற்றியால் பதில் சொல்லவேண்டிய தொடர்கள் இவை. 2020 டி20 உலகக் கோப்பை வரை கோலி கேப்டனாகத் தொடர வேண்டும். டி20 உலகக் கோப்பைக்குத் தலைமையேற்று வழிநடத்தவேண்டியவர் கோலிதான். கோலியை கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விடுவோம்!