வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில், இந்திய அணி தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தத் தொடரில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளுக்கான அணியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ராணுவ வீரர்களுடன் 2 மாதம் முகாமிட இருப்பதாகக் கூறி ஓய்வு கேட்ட தோனியின் பெயர், தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்படவில்லை. அதேபோல், பும்ராவுக்கு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர், டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு தொடர்பான தேர்வுக்குழு கூட்டத்துக்குப் பின்னர், அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம் தோனியின் ஓய்வு, அம்பாதி ராயுடு உலகக் கோப்பை தொடருக்குத் தேர்வு செய்யப்படாதது மற்றும் அதற்கு ராயுடுவின் ரியாக்ஷ்ன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
தோனியின் ஓய்வுகுறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், ``ஓய்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. எம்.எஸ்.தோனி போன்ற லெஜண்டரி வீரர்களுக்கு, அவர்கள் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது தெரியும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குத் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று தோனி கேட்டுக்கொண்டார்.

அடுத்த உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு, அதற்காக சில முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை இருக்கிறது. சமீபத்திய உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், சில திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். ரிஷப் பன்ட்-டுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்க முடிவு செய்திருக்கிறோம். இதுதான் எங்களது தற்போதைய திட்டம்'' என்றார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பாதி ராயுடு இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அப்போது பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், `பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimension) விஜய் சங்கர் கைகொடுப்பார். அதற்காகவே அவரைத் தேர்வு செய்தோம்'' என்று பேசியிருந்தார். இதுகுறித்து தனது அதிருப்தியை சூசகமாக வெளிப்படுத்திய ராயுடு, `உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்காக 3டி கிளாஸ் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறேன்' என்று ட்வீட்டியிருந்தார்.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ``அணியில் ஒரு சில காம்பினேஷன்களைக் கருத்தில்கொண்டு ராயுடுவைத் தேர்வுசெய்யவில்லை. அந்த ஒரு காரணத்துக்காக நாங்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டோம் என்பது கூறுவது சரியல்ல. ராயுடுவின் ட்வீட்டை எடுத்துக்கொண்டால், சரியான நேரத்தில் அவர் அதைப் பதிவிட்டிருந்தார். உண்மையில் அது மகிழ்ச்சியே அளித்தது. அது அவருக்கு எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. ஆனால், அதை நாங்கள் மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டோம்'' என்றார்.

உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பாதியில் விலகவே, அவர்களுக்குப் பதிலாக ரிஷப் பன்ட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியான நாளில், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ராயுடு திடீர் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.