Published:Updated:

முடியாததைச் செய்பவனே ஹீரோ... தோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ... ஏன்? #DhoniRetires

MS Dhoni

ரசிகர்களாகிய நமக்கு வெற்றி தோல்வி கணக்கு ஒன்றுதான். 'எதிரணியைவிட அதிக ரன் அடிக்க வேண்டும்.' ஆனால், தோனி வெற்றியை இப்படிப் பார்க்கவில்லை.

முடியாததைச் செய்பவனே ஹீரோ... தோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ... ஏன்? #DhoniRetires

ரசிகர்களாகிய நமக்கு வெற்றி தோல்வி கணக்கு ஒன்றுதான். 'எதிரணியைவிட அதிக ரன் அடிக்க வேண்டும்.' ஆனால், தோனி வெற்றியை இப்படிப் பார்க்கவில்லை.

Published:Updated:
MS Dhoni
ஸ்டம்பிங்கும் செஞ்சுரியும் கப்புகளும் கெடக்கட்டும் கேப்டன். நான் உனக்குள்ள இருக்கும் மனுஷன பார்த்தவன். அவனுக்கு என்னுடைய ஹேட்ஸ் ஆஃப்!
கோலியின் நேற்றைய ட்வீட் சொல்ல விரும்பியது இதைத்தான்

காரணம், இந்திய கிரிக்கெட்டின் இந்த நூற்றாண்டின் ஈடில்லா, இணையில்லா வீரன் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அப்படி என்ன செய்துவிட்டார் ராஞ்சியின் ரகளையான இந்த வீரன்..? கோலி போல தோனி என்னும் சகாப்தத்திற்குப் பின்னிருக்கும் மனிதனைப் பார்க்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.

ராஞ்சியில் பிறந்தார், கால்பந்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என வரலாறு சொல்லிப் போர் அடிக்க விரும்பவில்லை. அதை சுவாரஸ்யமான படமாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் அதையெல்லாம் ஸ்கிப் அடித்து நேராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் களம் கண்ட படலத்துக்கு வருவோம். அதிரடி சிக்ஸ் ஹிட்டராகவே இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானார் தோனி. அவரது பேட்டிங் ஸ்டைலும் சரி அவரது ஆட்டமும் சரி இந்திய கிரிக்கெட்டுக்கு புதுசு. அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி சச்சின், டிராவிட், லக்ஷ்மன் என கிளாசிக் பேட்ஸ்மேன்களால் நிறைந்திருந்தது. அதிரடி காட்ட சேவாக், கங்குலி, யுவராஜ் எனச் சிலர் மட்டுமே இருந்தனர். ஆனால், 'யார்க்கர் போட்டாலும் சிக்ஸ் அடிப்பேன்டா' ஆட்டிடியூட் தோனியின் டிரேட் மார்க். நீளமான முடி, ஹெலிகாப்டர் ஷாட் என அதிரடி ஆட்டக்காரராக அணியிலிருந்த தோனியைப் பற்றி அப்போது மக்கள் மனதில் வரைந்து வைத்திருந்தது வேறு மாதிரியான பிம்பம். கிரிக்கெட் பற்றி இவ்வளவு தெளிவான புரிதல் தோனிக்கு உண்டு என அப்போது சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

Dhoni
Dhoni
AP

ஆனால், அதை அனைவரும் உணரும் நேரம் சீக்கிரமே வந்தது. 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியே வந்தது இந்தியா. சச்சின் போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா எனக் கொதித்துப் போனது இந்திய ரசிகர் கூட்டம். அப்போதுதான் தோனி தலைமையில் தென்னாப்பிரிக்கா கிளம்பியது ஒரு இளம்படை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டைம் மெஷின் ஒன்றைக் கொடுத்து '2000-க்குப் பிறகு விளையாட்டு உலகில் நடந்த ஒரு நிகழ்வை மட்டும் மாற்றி அந்த விளையாட்டின் அடையாளத்தையே மாற்றிக் காட்டு' என என்னிடம் யாராவது சவால் விட்டால் 2007-ம் ஆண்டைத் தேர்வு செய்து இந்திய அணியின் டி20 கேப்டனாகத் தோனியைத் தேர்வு செய்ய விடாமல் தடுத்திருப்பேன். அதை மட்டும் செய்தால் போதும் இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டே இப்போது இருப்பது போல் இருக்காது. 2007-ல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு. அங்குதான் ஐபிஎல்லுக்கு விதை போடப்பட்டது. உலகமெங்கும் கிரிக்கெட்டின் முகமாக டி20 மாறியது. அந்த வருடம் இந்தியா ஜெயிக்கவில்லை என்றால் இதெல்லாம் இவ்வளவு வேகமாக நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் கிரிக்கெட் உலகையே தலைகீழாகத் திருப்பிப்போட்டது தோனியின் வருகை எனத் தாராளமாகச் சொல்லலாம்.

T20 World Cup 2007 Dhoni
T20 World Cup 2007 Dhoni
Hamish Blair | AP

2007 டி20 உலகக் கோப்பையை வென்ற பின் தோனி பேசியது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. "ஒன்று மட்டும் உறுதி. இந்தப் பரபரப்பிற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் இந்தியாவில் இந்த ஃபார்மட் தீயெனப் பற்றிக்கொள்ளும். நிச்சயம் அங்கு டி20 பெரிய ஹிட்டாகும்" என்று அவர் சொல்லியிருப்பார். 13-வது ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் டி20 கிரிக்கெட் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2007-லேயே அந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டை இந்தப் பாதையில்தான் கூட்டிவரும் எனத் தெளிவாக அறிந்திருந்தார் தோனி. ஒவ்வொரு வெற்றியும் தோல்வியும் இந்திய கிரிக்கெட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்போதே தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். எப்போதும் ஒரு போட்டியைத் தாண்டியதாகவே இருந்தது தோனியின் விஷன். அதனால்தான் மிகச்சிறந்த கேப்டன் என்று தோனியை உலகமே கொண்டாடுகிறது.

தோனி கணக்கு

அதே போஸ்ட் மேட்ச் ப்ரசன்டேஷனில் அவர் பேசிய இன்னொரு விஷயம்; வெற்றி, தோல்வி பற்றிய தோனியின் புரிதலே வேறு என்பதை எடுத்துக்காட்டியது. 'கடைசி ஓவரை ஹர்பஜன் சிங் வீசாமல் ஜோகிந்தர் ஷர்மா வீசியது ஏன்?' என ரவி சாஸ்திரி கேட்பார். அதற்கு தோனி, "குழப்பமான மனநிலையிலிருந்த ஹர்பஜனை விட சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு வீரரிடம் அந்த ஓவரை கொடுப்பதே சரியெனப்பட்டது. இந்த முடிவால் போட்டியைத் தோற்றிருந்தாலும்கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்" என்று பதிலளித்திருப்பார்.

தோனி
தோனி
ICC/Twitter

ரசிகர்களாகிய நமக்கு வெற்றி தோல்வி கணக்கு ஒன்றுதான். 'எதிரணியைவிட அதிக ரன் அடிக்க வேண்டும்.'

ஆனால், வெற்றியை தோனி இப்படிப் பார்க்கவில்லை. களத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும், எதிர்காலத்திற்கான அணியை உருவாக்க வேண்டும். அதுவே வெற்றி என்பதுதான் தோனி கணக்கு.

இதைச் செய்தாலே முக்கிய வெற்றிகள் தானாக வரும் என அவர் நம்பினார். அவர் நம்பிக்கை பொய்யாகவில்லை.

இதற்கு இன்னொரு உதாரணமும் சொல்ல முடியும். 2010 சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டி அது. அரையிறுதிக்குத் தகுதி பெற கிங்ஸ் XI பஞ்சாப்பிற்கு எதிரான அந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும். இதுவரை வேறு எந்த ஆட்டத்திலும் தோனியை அவ்வளவு ஆக்ரோஷமாக நான் பார்த்ததில்லை. கண்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி. நான்கு பந்துகளில் ஆட்டத்தை முடிக்கிறார். பள்ளி மாணவனாக இருந்த எனக்கு எழுந்து ஆட்டம் போட வேண்டும் என இருந்தது. அப்படியான ஒரு 'மரண மாஸ்' வெற்றி அது. அதே நேரத்தில் மிஸ்டர் கூல் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் என்னைச் சுற்றிவந்தது. எப்போதும்போல அதற்கும் போஸ்ட் மேட்ச் ப்ரசன்டேஷனில் நச் பதில் ஒன்றை வைத்திருந்தார் தோனி. "இப்படியான ஒரு நல்ல ஃபிரான்சைஸில் இருந்துகொண்டு, சிறந்த வீரர்களைக் கொண்ட இந்த அணியை வைத்துக்கொண்டு இந்தப் போட்டிக்கு முன்பே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதனால், இந்த வெற்றி பர்சனலாக எனக்கு நெகிழ்ச்சியான தருணம்" என்று கூறியிருப்பார். நாக்-அவுட் சென்ற பின் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இந்த அணியை வைத்துக் குறைந்தபட்சம் அதுவரையாவது செல்ல வேண்டும் என்பதே தோனியின் இலக்காக இருந்தது.

CSK v KXIP 2010 Dhoni
CSK v KXIP 2010 Dhoni

லிமிடெட் ஓவர்ஸ் ஆட்டங்களின் போக்கு ஒரு சிறிய விஷயத்தால் அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது எனப் புரிந்தவராகவே இருந்தார். ஒரு முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கேவிற்கு சூப்பர் ஓவர் வீசி அதிக ரன்கள் கொடுப்பார் அஷ்வின். தோனியோ கூலாக, "இன்னைக்கு உனக்கு நாள் சரியில்லை. வா அடுத்த வேலைய பார்ப்போம்" என அஷ்வினை கூட்டிச்செல்வார். இப்படி ஒரு போட்டியை வைத்து மட்டுமே வெற்றி, தோல்வி இல்லை என நம்புவதால்தான் ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் தோனி ஜொலிக்கிறார். அதே நேரத்தில் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால் ஊடகங்களுக்கு முன்பே தவறுகளை லிஸ்ட் போட்டுவிடுவார் எம்.எஸ்.

'Instinctive Captain'

'One of the best Cricketing brains' எனத் தோனியைப் பலரும் குறிப்பிடுவார்கள். அது உண்மையும் கூட. தோனியின் தலைமையில் ஆடிய வீரர்கள் அவரை 'Instinctive Captain' என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இன்று உலகமே டேட்டாவால் சூழம்பியிருக்கிறது. கிரிக்கெட்டிலும் இதே கதைதான். ஒரு பேட்ஸ்மேனின் பலவீனம் எது, பந்துவீச்சாளர்களின் பலம் எது என ஒவ்வொரு போட்டிக்கு முன்னும் டேட்டாவை ஆராய்ந்து அந்தப் போட்டிக்கென திட்டங்களை அணிகள் வகுப்பது வழக்கம். ஆனால், தோனி தலைமை தாங்கும் அணிகளில் இது ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடக்குமாம். முக்கிய முடிவுகள் அனைத்தையுமே களத்தில் அந்த நொடியில்தான் எடுக்கிறார் தோனி. தோனியின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

2011 World Cup Dhoni
2011 World Cup Dhoni
Gurinder Osan

எப்படி எதிர்காலத்திற்கான தெளிவான விஷன் தோனியிடம் எப்போதும் இருக்கும் எனச் சொன்னோமோ அதே போலத்தான் நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் இருக்கும் வீரர்களை வைத்து ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தோனிக்கு தெளிவு உண்டு. இப்படி அவர் களத்தில் எடுத்த முடிவுகள் ஏராளம். இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைகளின் இறுதிப் போட்டியிலுமே இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பார் தோனி. அவற்றில் சில முக்கிய விஷயங்களைக் கீழ்க்காணும் கட்டுரையில் படிக்கலாம்.

இதன் மூலம் சச்சின் சதங்களையும், கும்ப்ளேவின் விக்கெட்களையும் மட்டும் கொண்டாடிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்குப் பெரிய வெற்றிகளின் சுவையைக் காட்டியவர் தோனி.

மாஸ் ஹீரோ!

சரி கேப்டன்ஷிப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். தோனியின் ஹீரோயிசம் மொத்தமாக வெளிப்படுவது அவரது பேட்டிங்கில்தான். நம்மூர் சினிமாவை எடுத்துக்கொள்வோமே, முடியாததை முடிப்பவன்தான் மாஸ் ஹீரோ. அப்படித்தான் தோனியும். இதை எடுத்துக்காட்டும் இன்னிங்ஸ்கள் பல. 'முடியாத சூழலுக்குக் கொண்டு போறதே உங்க ஆளுதான்' என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால், கடைசி வரை களத்தில் நின்றால் எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை ததும்பும் மனிதனாக சாமான்ய மக்களின் ஹீரோவானார் தோனி. ஃபார்மில் இல்லாதபோதும்கூட தோனி களத்திலிருந்தால் எதிரணி மொத்தமும் ஃபுல் அலர்ட்டில் இருக்கும். தோனி ட்ராக் ரெகார்ட் அப்படி!

Dhoni
Dhoni
Tsering Topgyal | AP

உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் சங்ககாரா, கில்கிரிஸ்ட்டுடன் தோனியின் பெயரும் நீங்காத இடம்பெறும். இப்போதே பட்லர், பில்லிங்ஸ் போன்ற பிற நாட்டு கீப்பர் பேட்ஸ்மென்களுக்கு தோனிதான் ரோல் மாடல். கீப்பிங் சாதனைகளைத் தனியாக எடுத்துக்காட்ட இன்னொரு தனி கட்டுரை எழுத வேண்டியது இருக்கும்.

'Hypocrisy'-க்கு நோ!

தான் வலியுறுத்தும் விஷயங்களைத் தானே பின்பற்றாமல் இருப்பதை 'Hypocrisy' என ஆங்கிலத்தில் அழைப்பர். அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் Hypocrite ஆகவே இருப்போம். ஆனால், தோனி அப்படி இல்லை.

ஒவ்வொரு அணியும் அடுத்துவரும் உலகக் கோப்பையை மனதில் வைத்தே உருவாக்கப்பட வேண்டும் என்பது தோனி நம்பிக்கை. 2011-ல் உலகக் கோப்பை வென்ற கையோடு 2015 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணிகளில் தீவிரமானார். ஃபிட்னஸை முக்கிய விஷயமாக முன்னிறுத்தினார். இந்தக் காரணத்தால் சில முக்கிய வீரர்கள் ஓரம்கட்டப்பட 'அவர்களுக்கு Farewell மேட்ச் கூட கொடுக்கப்படவில்லை' எனத் தோனிக்கு எதிர்ப்பும் அதிகரித்தது. ஆனால், தான் நம்பியதில் சிறிதும் விலகவில்லை தோனி. இன்று உலகின் ஃபிட்டான அணியாக இந்தியா இருக்கிறது என்றால் அதற்கு விதைபோட்டது தோனி. இதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஃபிட்னஸ் முக்கியம் எனச் சொன்னவர் அணியில் இருக்கும் வரை ஃபிட்டாகவே இருந்தார் (யோ-யோ டெஸ்ட்டில் பல இளம் வீரர்களையும் பின்னுக்குத் தள்ளினார்).

தோனி
தோனி
Bikas Das

2015 உலகக் கோப்பை முடிந்ததுமே அடுத்த உலகக் கோப்பை அணி கோலி தலைமையில்தான் ஆடப்போகிறது என முடிவெடுத்து முதலில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அடுத்து அனைத்து ஃபார்மேட்களிலும் கோலியை கேப்டன் ஆக்கினார். "ஒரு அணிக்கு மூன்று கேப்டன்கள் என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. அனைத்துமே ஒருவரிடம் இருப்பதே அணிக்குச் சிறந்தது" என்று இந்த முடிவுக்கான காரணத்தைச் சொன்னார் தோனி. நம்பியதில் திடமாக இருந்தார்.

சொன்னதைப் போலவே 2019 உலகக்கோப்பை முடிந்ததுமே 2023 உலகக்கோப்பைக்கான அணி தயாராக வேண்டிய நேரம் என அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். 2020 டி20 உலகக்கோப்பை மட்டும் ஆடிவிடலாம் என்று இருந்த மனிதனுக்கு கொரோனா கைகொடுக்கவில்லை.

2015 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியின் வருங்காலம் குறித்து கேள்வி எழுப்பப்படும்.

பத்திரிகையாளர்கள் நீங்களே சில நாள்கள் உட்கார்ந்து என்ன செய்யலாம் என முடிவு செய்து ஒரு அறிக்கையை ரெடி பண்ணுங்க. அதற்கு நேர்மாறாக என்ன இருக்கிறதோ அதை வெளியிடுங்கள். அதைத்தான் நான் செய்வேன்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி

இப்போதும் அதையே செய்திருக்கிறார். அமைதியாகச் சத்தமில்லாமல் விடைபெற்றுவிடுவார் எனத் தெரியும். ஆனால், ஐபிஎல் முடித்துவிட்டு அறிவிப்பார் என்றே எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி இன்ஸ்டாவில் இரண்டு வரி போஸ்ட் மட்டும் போட்டு ஓய்வை அறிவிப்பார் என்பது யாருமே எதிர்பாராதது. இதிலும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். பக்கா தோனி பினிஷிங்!

இன்ஸ்டாவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை எளிமையாக ஒரு ஸ்லைடு-ஷோ வீடியோவாக ஒரு பாடலுடன் பதிவிட்டு 'Thanks a lot for your love and support throughout. From 1929 hrs consider me as Retired' என்று ஓய்வை அறிவித்திருக்கிறார் தோனி. அந்தப் பாடலின் அர்த்தம் என்ன எனக் கண்டுபிடித்தோம்.

"நான் ஒரு தற்காலிக கலைஞன்தான். இந்தச் சில தருணங்கள்தான் நான் யார் என்ற கதையைச் சொல்கின்றன. எனக்கு முன்பு ஒரு கலைஞன் இருந்தது போல் எனக்கு அடுத்தும் என்னை விஞ்சும் சிறந்த கலைஞன் வருவான்."

அதுதான் தோனி. 'மகேந்திர சிங் தோனி' என்னும் பெயருக்கு பின்னிருக்கும் மனிதன் யார் எனச் சொல்ல இதுவே போதும். இவ்வளவு பெரிய கட்டுரையே எழுதியிருக்க வேண்டாம்தான். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடிக்கும் கடைசி சிக்ஸரின்போது ரவி சாஸ்திரி செய்யும் வர்ணனையை யாராலும் மறக்க முடியாதது. இப்போதும் ஏனோ அதுதான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

'Dhoni Finishes Off in Style!''