ஏராளமான ரசிகர்களுடன் கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரராக வலம் வரும் தோனி, திரைத்துறையிலும் கால் பதித்து திரைப்படங்கள் தயாரிப்பு, நடிப்பு என பல்வேறு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு 'அதர்வா' எனும் படத்தில் தோனி நடிப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்படம் எடுக்க முடியாமல் தள்ளிப்போய் கொண்டேயிருக்கிறது. இதற்கிடையில் தமிழில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கித்தில் 'எல். ஜி. எம்.' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரை காணக் காத்திருக்கிறது.

இதையடுத்து கூடிய விரைவில் தோனி, திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தோனி சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தோனி தன் நடிப்பு குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், "இயக்குநர்கள் தரும் வசனங்களை ஞாபகம் வைத்து அதை அப்படியே பேசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. முடிந்தவரை, இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்துவிடுவேன். என் நடிப்பு நன்றாக இல்லை என்றால் அதற்குக் காரணம் இயக்குநர்தான். காரணம், அவர் சொன்னதைத்தான் நான் அப்படியே செய்கிறேன்" என்று கூறினார்.
மேலும், அதே வீடியோவில் தோனி தனது மகள் ஜிவா (Ziva) பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய தோனி, "என் மகளை முதல் முறை வெளியில் அழைத்துச் சென்றபோது, அவளுக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும். அப்போது அவள் சிரித்துக்கொண்டே சத்தம் போட்டாள். அப்போது, 5 நிமிடங்களுக்கு, அவள் சிரித்துக்கொண்டே சத்தம் போட்டாள். ஏன் அவள் அப்படி செய்தாள் என்று தெரியவில்லை. தந்தையாக இருக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்போதெல்லாம் என் மகள் நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். யாரேனும் அவளிடம், உன் அப்பாவை ஏன் பிடிக்கும் என்று கேட்டால், 'அப்பா என்றால் பணம்' அதனால் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்கிறாள்"தன் என்று சிரித்த படி கூறினார்.