சினிமா
பேட்டிகள்
Published:Updated:

அற்புதங்களுக்கான காலக்கெடு!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

அயராது உழைக்கும் அம்மாவோ, அப்பாவோ அண்ணனோ ஒருநாள் சட்டென படுத்த படுக்கையாகிவிட்டால் அந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலைதான்

“உன்னால ஒரு விஷயம் முடியாதுன்னு யார் சொன்னாலும் நம்பாத, நான் உட்பட. உனக்குன்னு ஒரு கனவு இருக்கு. அதை கெட்டியா பிடிச்சுக்கோ. முயற்சி பண்ணித் தோத்தவங்கதான் ஒரு விஷயத்தை முடியாதுன்னு சொல்லுவாங்க. அதைக் கேக்காத. உனக்கு வேண்டியதை நீதான் தேடி எடுத்துக்கணும்...’’

- சகலவற்றையும் இழந்து அடுத்த நாள் என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமல் தளர்ந்து குறுகிப்போன உடலோடு தூரத்துக் கட்டடங்களையும் பணம் துரத்தும் மனிதர்களையும் பார்த்தபடி தன் மகனுக்கு இதைச் சொல்வார் வில் ஸ்மித், ‘The Pursuit of Happyness’ படத்தில். கூடைப்பந்தை வைத்து அவர் சொன்னதை 90களில் பிறந்தவர்களுக்கு கிரிக்கெட் மைதானத்தைக் காட்டிச் சொன்னார்கள் அப்பாமார்கள். அந்தப் பத்தாண்டுகளில் பிறந்த அனேகம் பேருக்கு கிரிக்கெட்தான் தந்தையுடனான முதல் உரையாடல். தந்தைகள் அப்படி விரல் நீட்டிக் காட்டியபோது எதிரில் நின்றிருந்தவர் தோனி. இந்திய நிலப்பரப்பின் இடுப்பு இடுக்கிலிருந்து வந்து மாபெரும் கனவைச் சுமந்து நின்ற சாமானியன். அதனாலோ என்னவோ அப்பாக்கள் அறிமுகப்படுத்திய அந்த விளையாட்டையும் அந்த நபரையும் இப்போதும் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது மனது, தந்தையின் தோள்மீதேறித் திருவிழாவை முதல் தடவை காணும் குழந்தைக்கு மனிதத் தலைகளும் கலர் விளக்குகளுமான காட்சி இறுதிநாள்வரை பதிந்திருப்பதைப்போல.

அற்புதங்களுக்கான காலக்கெடு!

மிகச்சரியாக ஓராண்டுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் வராமல் போனபோது எழுதிய கட்டுரையை ‘காட்டுராஜாவுக்கு வயதாகலாம். ஆனால் அதன் சண்டை செய்யும் வேட்டைக் குணத்திற்கு என்றும் வயதாவதில்லை’ என முடித்திருந்தேன். அதை இந்த ஆண்டு மெய்யாக்கியிருக்கிறார் தோனி. விழுந்தபோதெல்லாம் அதனினும் வேகமாய் மீண்டெழுந்து வெற்றி நோக்கி ஓடுவதுதான் அவரை ஒரு பெருங்கூட்டம் இத்தனை ஆண்டுகளாகக் கொண்டாடுவதற்கான முக்கியக் காரணம். ‘சச்சின் அவுட்டாயிட்டா டி.வி-யை ஆப் செஞ்சுடுவோம்’ என்பதை அப்படியே திருப்பிப் போட்டவர் தோனி. ‘அவ்வளவுதான் மேட்ச். இனி எங்கத்த ஜெயிக்கிறது’ என இதயம் கூப்பாடு போடும் நேரத்தில், ‘டி.வி-யை கொஞ்ச நேரம் ஆப் பண்ணிடுவோம். தோனி கண்டிப்பா ஏதாவது மேஜிக் பண்ணிடுவாரு. ஆன் பண்ணிப் பாக்குறப்போ எல்லாமே மாறியிருக்கும்’ என அதீத நம்பிக்கையில் அணைத்தவர்கள் எக்கச்சக்கம் பேர், நான் உட்பட. 2013 சாம்பியன்ஸ் டிராபி எல்லாம் அப்படி நிகழ்ந்த அற்புதம்தான்.

இப்போதும் ஹாட்ஸ்டாரை சட்டென மூடிவிடுகிறேன்தான். ஆனால், அற்புதங்கள் நிகழுமென்றல்ல. அயராது உழைக்கும் அம்மாவோ, அப்பாவோ அண்ணனோ ஒருநாள் சட்டென படுத்த படுக்கையாகிவிட்டால் அந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலைதான். ‘இவருக்கெல்லாம் எதுவும் ஆகாது’ என்கிற நம்பிக்கையில் விழும் அடி அவர்களைக் கடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவிக்க விடுமே? அப்படி தோனியின் தடுமாற்றத்தையும், அவரால் அணி தோல்வியைத் தொடும்நிலையும் காணச் சகிக்காமல்தான். அற்புதங்களுக்கும் காலக்கெடு உண்டுபோல!

‘நாங்கள் வெல்வோம் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த வெற்றிக்கு நாங்கள் மிகத் தகுதியானவர்கள்’ - 2007 டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு ரவி சாஸ்திரியிடம் தோனி சொன்னது இது. அன்று தொடங்கி ‘Definitely Not’ என கடந்த சீசனில் பகிர்ந்துகொண்டது முதல் இன்று ‘Still I haven’t left behind’ வரை இன்னும் இன்னும் இந்த மனிதனிடம் எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது கிரிக்கெட் உலகம். இறுதிப்போட்டியில் கடைசிப் பந்திற்குப் பிறகு ஸ்டம்ப்பை நோக்கி நடந்துவந்த தோனியின் முகத்தில் தெரிந்த அந்த ஆசுவாசம், சுமையை இறக்கி வைத்துவிட்டுக் காடு திரும்பத் துடிக்கும் யானையின் ஆசுவாசம். விளையாட்டுலகம் கருணையற்றது. நீங்கள் திரும்பத் திரும்ப வென்றுகொண்டே இருக்கவேண்டும். பழைய வரலாற்றை மட்டுமே பேசிக்கொண்டே இருக்கமுடியாது. வெற்றி ஒரு புலிவால்!

அற்புதங்களுக்கான காலக்கெடு!

போன சீசனில் ‘நிச்சயமாக இல்லை’ என ஓய்வு குறித்து தோனி சொன்னதில் இருந்த உறுதி இந்த வருடம் அவர் வார்த்தைகளில் இல்லை. ‘அணிக்கு அவரின் பேட்டிங் இடைஞ்சலாக இருக்கிறது’ என்பதை அவருமே உணர்ந்திருக்கிறார். ‘என்னைப் பற்றி இனி யோசிக்க முடியாது. அடுத்த பத்தாண்டுகளுக்கான அணியை உருவாக்க மெனக்கெடவேண்டும்’ என அவர் சொன்னதன் காரணமும் இதுதான். ‘என்னை எப்போதோ ப்ளேயிங் லெவனிலிருந்து தூக்கியிருக்கவேண்டும். ஆனால் அணி நிர்வாகம் தொடர்ந்து என்னைத் தாங்கிப் பிடித்தது’ என வென்றபின் சொன்னார் மொயீன் அலி. ஒரு சீசன் ஆடிய மொயீனுக்கே இந்த வெளியென்றால் சென்னைப் பெயரை உலகமெங்கும் முணுமுணுக்க வைத்த தோனியை அணி நிர்வாகம் நிச்சயம் விட்டுத்தராது. ஆனால் டெஸ்ட்டில் சட்டென ஓய்வு பெற்றது, ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஒட்டுமொத்தமாக விலகியது என கிரிக்கெட்டில் களத்தைப்போல நிஜத்திலும் தோனி தன்னிச்சையாக முடிவெடுப்பவர். வெற்றியோடு தலைநிமிர்ந்து வெளியேற அவர் விரும்பக்கூடும்.

மனிதர்களுக்கு இயலாத விஷயம் எது? 1911-க்கு முன்புவரை அது தென் துருவத்தைத் தொடுவதாய் இருந்தது. 1953 வரை அது எவரெஸ்ட் உச்சியை அடைவதாய் இருந்தது. ஆனால் என்றென்றும் மனிதர்களுக்கு முடியாதது ரொம்பப் பிடித்தவர்களுக்கு விடைகொடுப்பதுதான். தோனியே முடிவெடுத்து கிரிக்கெட்டை விட்டாலொழிய கிரிக்கெட் அவரை விடப்போவதில்லை. ஆனாலும் இனியொருமுறை அவரை களத்தில் அழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கோப்பை வெல்லும் கேப்டனாக, யார்க்கர்களை சிக்ஸர்களாய் சிதறடிக்கும் பினிஷராக, மைக்ரோநொடியில் பெயில்ஸைத் தூக்கும் கீப்பராகப் பார்க்கமுடியாதோ என்பதுதான் இப்போதும் கிரிக்கெட் ரசிகர்களை அழுத்திக்கொண்டே இருக்கிறது. அவர் நிறையவே சொதப்புகிறார் எனத் தெரிந்திருந்தும் எல்லாரும் பாய்ந்து பாய்ந்து முட்டுக்கொடுப்பது அவருக்கு விடைகொடுக்க முடியாமல்தான். இன்னொரு காரணமும் இருக்கிறது. போன தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்குமான கிரிக்கெட் உரையாடலின் கடைசிக் கண்ணி தோனிதான். திருவிழாவில் தோள்மீதேறிப் பார்த்த பிரமாண்ட கட் அவுட் அது. அந்தக் கண்ணி அறுபடப் போகும் பதற்றம்கூட. ‘I was hoping to pulloff one last surprise’ என அவெஞ்சர்ஸில் அயர்ன்மேன் சொல்லுவதைப் போலத்தான் இப்போது தங்கள் கிரிக்கெட் சூப்பர்ஹீரோவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். கடைசியாய் ஒருதடவை அந்த அற்புதம் நடக்கக்கூடும், தோனியின் உடலும் மனதும் இசைவுகொடுத்தால்!

‘எங்கோ ஒரு மூலையிலிருந்து வந்த சாமானியன் இந்தியாவின் முகமாக மாறமுடியும்’ எனப் பாடமெடுத்த தோனிதான், ‘வெற்றி பெற நீங்கள் அனுபவமும் ஆதரவும் பெற்றவராய் இருக்கவேண்டிய அவசியமில்லை’ என சாதித்த தோனிதான் இப்போது, ‘வாழ்க்கை கொடுக்கும் அடிகளைப்போல வேறு யாரும் கொடுத்துவிட முடியாது. ஆனால் எவ்வளவு அடிவாங்குகிறோம் என்பது முக்கியமல்ல, அதைத்தாண்டி அடுத்தது என்ன என்பதை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும்’ என ராக்கி பட வசனத்தை நிஜத்தில் காட்டி நிதர்சனத்திற்குப் பழக்கப்படுத்துகிறார். முந்தைய பாடங்களை ஏற்றுக்கொண்டதைப் போல இதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அடுத்த ஐ.பி.எல்லுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் உலகின் ஆதிகுடி தோன்றிய அதே ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் உலகின் முதல் மலையும் வீற்றிருக்கிறது. பரிணாமத்தின் அத்தனை கோடி மாற்றங்களையும் அமைதியாய் தூரத்திலிருந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறது அந்த மாமலை. கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை தோனிதான் அந்த மாமலை. மாமலை போற்றுதும்!