
எந்த ஒரு வீரரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. அணிக்கு செட் ஆகவில்லையென்றால் நிச்சயம் வெளியேற்றலாம்
நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக டி-20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய ஆண்கள் அணி. அந்த அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கிய காரணமாய் விளங்கி, தொடரின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் வார்னர். ஒரு மாதத்துக்கு முன்பு சன்ரைசர்ஸ் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட அதே டேவிட் வார்னர்தான்!
ஐ.பி.எல் சீசனின் டாப் ஸ்கோரருக்குக் கொடுக்கப்படும் ஆரஞ்சு கேப்பை மூன்று முறை வென்ற ஒரே வீரர் வார்னர்தான். இத்தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கும் வெளிநாட்டு வீரரும் அவர்தான். தொடர்ந்து 6 சீசன்கள் 500+ ரன்கள் குவித்து ஐ.பி.எல் தொடரின் ஆகச்சிறந்த பேட்டர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். ஆனால், அவரை கேப்டன் பதவியிலிருந்து விலக்கி, அணியிலிருந்தும் தூக்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

எந்த ஒரு வீரரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. அணிக்கு செட் ஆகவில்லையென்றால் நிச்சயம் வெளியேற்றலாம். ஆனால், அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதும் முக்கியம். அவரால்தான் அணி தோற்கிறது என்ற பிம்பம் ஏற்படும் வகையில் இருந்தது வார்னரை சன்ரைசர்ஸ் கையாண்ட விதம். எதுவுமே சொல்லாமல் அவரை விலக்கியதோடு, கிரவுண்டுக்கும் கூட வரவேண்டாம் என்றிருக்கிறார்கள்.
மிடில் ஆர்டரில், பந்துவீச்சில் அத்தனை குறைகளை வைத்துக்கொண்டு, தங்களின் தவற்றை மறைக்க ஒரு சாம்பியன் பிளேயரைப் பகடை ஆக்கியது அந்த அணி. அந்த அவமரியாதையால் எந்த அளவுக்கு மனமுடைந்திருந்தார் என்பதை அவரே கூறியிருந்தார்.
வார்னர் ஒன்றும் மற்ற வெளிநாட்டு வீரர்களைப் போல் இல்லை. சொல்லப்போனால், வில்லியம்சனோ, ரஷீத் கானோகூட வார்னர் அளவுக்கு அந்த அணியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் என்ற அணி உருவானதிலிருந்து அதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர் வார்னர். அவர்கள் 2016-ல் கோப்பை வெல்ல அதிமுக்கிய காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த அணியும் சொதப்பினாலும் தனித்து நின்று போராடினார்.

இவற்றையெல்லாம் தாண்டி ஹைதராபாத் ரசிகர்களுக்கும் அந்த அணிக்கும் இருந்த மிகப்பெரிய பாலமே வார்னர்தான். உரிமையாளர்களோ, அணியின் முக்கிய வீரர்களோ அந்த நகரைச் சேர்ந்தவர்கள் இல்லை. சென்னைக்கு தோனி அமைந்ததுபோல், இந்தியா கொண்டாடும் ஒரு இந்திய வீரரும் கிடைக்கவில்லை. அதனால், ஆரம்பத்தில் இருந்தே இவர்தான் அந்த அணியின் ஐகானாக இருந்தார். லாக்டௌன் காலகட்டத்தில் புட்டபொம்மா பாட்டுக்கு நடனம் ஆடியது, பாகுபலி சீனை மார்ஃப் செய்தது எனத் தெலுங்கு தேச மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார். அப்படிப்பட்டவரைத்தான் சங்கடப்படுத்தியிருந்தனர் சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர்.
சன்ரைசர்ஸ் ஒருபுறம் அவரைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்க, அவரது எண்களை வைத்து ஆய்வு செய்ய ஆரம்பித்தனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். வார்னரின் மோசமான ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்குள்ளானது. அவர் ஃபார்மிலேயே இல்லை என்பதை உறுதிப்படுத்தி, சன்ரைசர்ஸின் முடிவுக்கு நியாயம் சேர்த்தார்கள். கிரிக்கெட் உலகம், டேவிட் வார்னர் எனும் அசாகய சூரனை தன் முதல் பக்கத்திலிருந்து அழித்தது.

வார்னருக்கு இதுவொன்றும் புதிதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் சேண்ட்பேப்பர் பிரச்னையில் சிக்கி ஓராண்டு தடை பெற்று கிரிக்கெட்டிலிருந்தே விலகவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். அன்று ஒட்டுமொத்த உலகமும் அவரைத் திட்டித் தீர்த்தது. ஏமாற்றுக்காரன் என்று முத்திரை குத்தியது. தன் தவற்றை உணர்ந்து கண்ணீர் சிந்திய வார்னர், அந்த இருண்ட பக்கத்திலிருந்து மீண்டு வெளியே வந்தார்.
அப்போதும் தன் கம்பேக்கை மிகப்பெரிய அரங்கில்தான் அரங்கேற்றினார் வார்னர். சொல்லப்போனால், இதைவிடப் பெரிய அரங்கு. இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பை. அதில் 647 ரன்கள் குவித்து, இரண்டாவது டாப் ஸ்கோரரானார். ரோஹித் ஷர்மாவைவிட 1 ரன்தான் குறைவு. 3 சதம், 3 அரைசதம் என அடித்து நொறுக்கினார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு பழையபடி ஆட முடியுமா என்ற விமர்சகர்களின் கேள்விக்கு கெத்தாக பதிலளித்தார்.
இப்போதும் அதேபோல் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் வார்னர். இந்த உலகக் கோப்பையிலும் இவர்தான் இரண்டாவது டாப் ஸ்கோரர். அரையிறுதியில் 49 ரன்கள் எடுத்திருந்தவர், பந்து பேட்டில் படாதபோதும் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இறுதிப் போட்டியிலும் நிலைத்து நின்று விளையாடி ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை உறுதி செய்தார். தன்னை எத்தனை முறை வெளியேற்றினாலும், தன்னால் உச்சம் தொட முடியும் என்பதை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

ஒரு தொடரின் செயல்பாட்டுக்காக ஒரு சாம்பியன் பிளேயரை உதாசீனப்படுத்துவது மாபெரும் குற்றம். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் தொடர்ந்து வெல்வதற்குக் காரணம், முக்கிய வீரர்களுக்குக் கொடுக்கும் அந்த மரியாதைதான். தோனி, ரோஹித் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை வார்னருக்கும் கிடைத்திருக்கவேண்டும். அதைத்தான் இந்த உலகக் கோப்பையில் உரக்கச் சொல்லியிருக்கிறார் டேவிட் வார்னர்.