26 வயதினிலே... சச்சினுக்கும் கோலிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? #MotherOfCoincidencesInCricket

சுவாரஸ்யம் மிக்க கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
பொழுதுபோக்கு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால், அனைத்து பொழுதுபோக்குகளிலும் முக்கிய பங்கு வகிப்பது சுவாரஸ்யம்தான்! கிரிக்கெட் விளையாடுவதும் கிரிக்கெட் பார்ப்பதும்தான் இந்தியாவின் மிக முக்கிய பொழுதுபோக்கு. இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக கிரிக்கெட் மாறியதற்குக் காரணமும் அந்த விளையாட்டில் உள்ள சுவாரஸ்யம்தான். சுவாரஸ்யம் மிக்க கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான தற்செயல் (Coincidence) நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இங்கே கிரிக்கெட்டில் தற்செயலாக நடைபெற்ற முக்கியமான தருணங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.
மேஜிக்கல் 183
இந்திய அணிக்கு கேப்டன்களாகப் பொறுப்பேற்று புகழ் உச்சிக்குச் சென்றவர்களில் முக்கியமான மூன்று பேர் கங்குலி, தோனி, கோலி. இந்த மூவருக்கும் தற்போது வரை ஒற்றுமையாக அமைந்திருக்கும் இருக்கும் மேஜிக்கல் எண் 183. ஆம், ஒருநாள் போட்டிகளில் கங்குலி, தோனி, கோலி ஆகிய மூவரின் அதிகபட்ச ஸ்கோரும் 183 தான். வரும் காலத்தில் கோலி இதை பீட் செய்து தனது அதிகபட்ச ஸ்கோரை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது வரை இம்மூவருக்கும் இதுவே அதிகபட்ச ரன்கள்.

மூவருமே அணியில் சாதாரண வீரர்களாக இருந்தபோதுதான் 183 என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்தனர். அதன் பின்புதான் அவர்களுக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது என்பதும் ஒரு வகையில் கோயின்சிடன்ஸ்தான்!
11/11/11
நவம்பர் 11, 2011 அன்று தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் சரியாக 11 மணி 11 நிமிடங்கள் ஆகும்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு 111 ரன்கள் தேவைப்பட்டன. அன்றைய போட்டியின் போது மைதானத்தில் இருக்கும் ஸ்கோர் போர்டை பார்த்து, வீரர்கள், ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

அந்த ஸ்கோர் போர்டில் இருந்தவை பின்வருமாறு...
தேதி : 11/11/11 மணி : 11:11 தென்னாப்பிரிக்கா வெற்றி பெறத் தேவைப்படும் ரன்கள் : 111
தோனி 148
`கேப்டன் கூல்' தோனி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு ஃபார்மேட்டிலும் தான் விளையாடிய 5-வது போட்டியில்தான் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இரண்டு ஃபார்மேட்டிலும் தோனி முதல் சதத்தைப் பதிவு செய்தபோது 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

அதுவும் அந்த இரண்டு சதங்களுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை என்பது கூடுதல் ஆச்சர்யம்!
இரட்டைச் சதமும் வெற்றி வித்தியாசமும்!
ஒருநாள் போட்டிகளில், இதுவரை இந்திய வீரர்கள், சச்சின், சேவாக் மற்றும் ரோகித் ஆகிய மூன்று பேர் இரட்டைச் சதமடித்துள்ளனர். இதில் ரோகித் ஷர்மா மட்டும் மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்துள்ளார். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதானே இதிலென்ன கோயின்சிடென்ஸ் என்கிறீர்களா? இருக்கிறது! இந்த மூவரும் ஒருநாள் போட்டிகளில் தங்களது அதிகபட்ச ஸ்கோர்களை அடித்தபோது இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அந்த தற்செயல் நிகழ்வு.
மூன்று வீரர்களும் எந்த அணிக்கு எதிராக எவ்வளவு ரன்கள் அடித்தார்கள் என்பதைக் கீழே பார்க்கலாம்...

நவம்பர் 27
1981-ம் ஆண்டு, நவம்பர் 27-ம்தேதி அன்று ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி, `டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் எடுத்தவர்' என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

சரியாக 36 ஆண்டுகள் கழித்து, 2017-ம் ஆண்டில், அதேநாளில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் `டெஸ்ட் போட்டிகளில், அதிவேகமாக 300 விக்கெட்டுகள்' என்ற சாதனையைத் தன்வசப் படுத்திக்கொண்டார் இந்தியச் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ரன் மெஷின்ஸ்!
சச்சின், கோலி ஆகிய இருவரும் கிரிக்கெட் உலகில் ரன் குவித்தே பெருமை தேடிக்கொண்டவர்கள். இந்த இரண்டு ரன் மெஷின்களும் சதங்கள் குவித்து சாதனை புரிவதில் வல்லவர்கள். அப்படி குவிக்கப்பட்ட சதங்களுள் இருவருக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன.

முதலாவது, இவர்கள் இருவரும் சொல்லி வைத்தாற்போல தங்களது 26-வது வயதில்தான் 22-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்துள்ளனர். கோலி தனது 143-வது இன்னிங்ஸிலும் சச்சின் தனது 206-வது இன்னிங்ஸிலும் 22-வது சதத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இரண்டாவது ஒற்றுமை, இருவரும் சர்வதேசப் போட்டிகளில் தங்களது 58-வது சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் அடித்துள்ளனர். இதில், சச்சினும் கோலியும் சதத்தைப் பதிவு செய்த போட்டிகளில் இருவரின் ஸ்கோரும் 103 தான்!
இந்த இரண்டு ஒற்றுமைகளையும் விஞ்சி நிற்கும் ஆச்சர்ய ஒற்றுமைகளைத்தான் அடுத்து பார்க்கப் போகிறோம்...
டிசம்பர் 28, 1999 அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், `டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 1,000 ரன்கள்' என்ற சாதனையை படைத்தார் சச்சின். 2014-ம் ஆண்டு அதே நாளில் அதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1,000 ரன்களைச் சேர்த்து முத்திரை பதித்தார் கோலி. ஒற்றுமையானது இதோடு முடிந்துவிடவில்லை. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 ரன்கள் குவிக்க எடுத்துக் கொண்ட போட்டிகளின் எண்ணிக்கை 11, இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை 19. மேலும், இந்தச் சாதனையைப் படைத்தபோது சச்சின், கோலி ஆகிய இருவருமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தலா 5 சதங்களும், 2 அரை சதங்களும் அடித்திருந்தனர் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
இதோடு ஆச்சர்யங்கள் முடிந்து விடவில்லை...
இது போன்ற பல ஒற்றுமைகளைக் கொண்ட ஆச்சர்யங்களைத்தான் ஆங்கிலத்தில் `Mother Of Coincidence' என்பார்கள்!
முதல் போட்டியும் நூறாவது போட்டியும்!
1877-ம் ஆண்டு, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 1977-ம் ஆண்டு, இரு அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு டெஸ்ட் போட்டி அதே மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலும் ஒரே அணி வெற்றி பெற்றதையெல்லாம் மிகப் பெரிய கோயின்சிடன்ஸாக சொல்லிவிட முடியாது.
ஆனால், இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது!
சுவர் vs மினி சுவர்!
டெஸ்ட் போட்டிகளில் பொறுமையாக விளையாடி இந்திய அணியைப் பலமுறை தோல்வியிலிருந்து மீட்டெடுத்ததால் `கிரிக்கெட்டின் சுவர்' என்ற பெயர் பெற்றார் ராகுல் டிராவிட். அதே மாதிரியான பல டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியதால் புஜராவுக்கு `மினி சுவர்' என்ற பட்டம் கொடுத்தனர் இந்திய ரசிகர்கள்.

இவர்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கு இந்த ஒற்றுமையைத் தவிர வேறொரு ஒற்றுமையும் உண்டு. இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன்கள், 4,000 ரன்கள் மற்றும் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட ஒரே அளவிலான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளனர் என்பதுதான் அந்த ஒற்றுமை.
எடுத்ததைக் கொடுத்தவர்!
வங்கதேச பந்துவீச்சாளர் அபுல் ஹசன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 113 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். நவம்பர் 21, 2012 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை வென்று முதலில் பேட் செய்தது வங்கதேசம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, தன் முதல் போட்டியிலேயே சதமடித்து அணியை மீட்டார் அபுல் ஹசன். முதல் இன்னிங்ஸில், பேட் செய்து எவ்வளவு ரன்கள் எடுத்தாரோ, அதே அளவிலான (113) ரன்களை முதல் இன்னிங்ஸில் பந்து வீசும்போது விக்கெட் ஏதும் எடுக்காமல் விட்டுக் கொடுத்து சொதப்பினார் ஹசன்.

காட் vs காட்ஸில்லா!
2010-ம் ஆண்டு, `காட் ஆஃப் கிரிக்கெட்' சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டைச் சதத்தை அடித்தார். அன்றிலிருந்து சரியாக 5 ஆண்டுகள் கழித்து, 2015-ம் ஆண்டில், `காட்ஸில்லா ஆஃப் டி20 கிரிக்கெட்' என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தவர்.
விக்கெட்... விக்கெட்... விக்கெட்..!
வேகப்பந்து வீச்சின் மூலம் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்தவர் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மெக்ராத். இவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதற்கு முன் தான் வீசிய கடைசிப் பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது கோயின்சிடன்ஸின் உச்சம்.

2007 உலகக் கோப்பையோடு தான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார் மெக்ராத். உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் தன் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார் மெக்ராத். அந்தப் போட்டியிலும் தான் வீசிய கடைசிப் பந்தில் விக்கெட் எடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார் மெக்ராத்.
2007 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிதான் மெக்ராத் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அந்தப் போட்டியிலும் தன் கடைசிப் பந்தில் விக்கெட் எடுத்து அசத்துவார் மெக்ராத் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது ஜஸ்ட் மிஸ் ஆனது. அந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக தான் வீசிய கடைசி ஓவரின் 5-வது பந்து, அதாவது கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில் விக்கெட் எடுத்தார் மெக்ராத்.
ஈடன் கார்டன்ஸ்!
ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரி மற்றும் புஜாரா ஆகிய மூவர் மட்டுமே, ஒரு டெஸ்ட் போட்டியின் 5 நாள்களிலும் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள். இவர்கள் மூவரும் இந்தச் சாதனையை நிகழ்த்திய மூன்று போட்டிகளுமே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்தான் நடைபெற்றது.

மேற்கண்ட கிரிக்கெட் கோயின்சிடன்ஸ்களைத் தவிர உங்கள் நினைவிலிருக்கும் தற்செயல் நிகழ்வுகளை கமென்ட்டில் பகிருங்கள்!