Published:Updated:

Mohsin Khan: "அப்பாக்காகதான் எல்லாமே..." - நெகிழும் மோஷின் கான் சாதித்தது எப்படி?

Mohsin Khan

மோஷினின் தந்தை இப்போது ஐசியூவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல்நலம் தேறி வருகிறார். தன்னுடைய நம்பிக்கையைக் காப்பாற்றிய தன்னுடைய அன்பின் வலியைப் புரிந்து கொண்ட தந்தைக்கு ஒரு மகன் நெகிழ்வின் மிகுதியில் ஒரு பரிசைக் கொடுத்தால் எப்படியிருக்கும்?

Published:Updated:

Mohsin Khan: "அப்பாக்காகதான் எல்லாமே..." - நெகிழும் மோஷின் கான் சாதித்தது எப்படி?

மோஷினின் தந்தை இப்போது ஐசியூவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல்நலம் தேறி வருகிறார். தன்னுடைய நம்பிக்கையைக் காப்பாற்றிய தன்னுடைய அன்பின் வலியைப் புரிந்து கொண்ட தந்தைக்கு ஒரு மகன் நெகிழ்வின் மிகுதியில் ஒரு பரிசைக் கொடுத்தால் எப்படியிருக்கும்?

Mohsin Khan
"அப்பா... எனக்குத் தெரிஞ்சு நான் உங்கள மாதிரி பலமான ஆளைப் பார்த்ததே இல்ல. உங்களோட தீர்க்கமான மனசால இந்த நோயில இருந்தெல்லாம் மீண்டு வந்து சீக்கிரமே கம்பீரமா நிற்பீங்கன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ்... சீக்கிரமே குணமாகிடுங்கப்பா!"
மோஷின் கான்
சில தினங்களுக்கு முன்பு மோஷின் கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தந்தை குறித்து இப்படி உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
தன்னுடைய தந்தை சீக்கிரமாக குணமாகிவிடுவார் என்கிற மோஷின் நம்பிக்கை பொய்யாகவில்லை. மோஷினின் தந்தை இப்போது ஐசியூவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல்நலம் தேறி வருகிறார். தன்னுடைய நம்பிக்கையைக் காப்பாற்றிய தன்னுடைய அன்பின் வலியைப் புரிந்து கொண்ட தந்தைக்கு ஒரு மகன் நெகிழ்வின் மிகுதியில் ஒரு பரிசைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? அதுதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மோஷின் கானின் பெர்ஃபார்மென்ஸ்.

லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு 178 ரன்கள்தான் டார்கெட். ஃபார்ம் அவுட்டில் இருந்த ரோஹித் சர்மாவே மும்பைக்கு ஒரு துடிப்பான ஓப்பனிங்கைக் கொடுத்தார். இஷன் கிஷனும் அதிரடியாக நின்று ஆடி அரை சதம் கண்டார். பவர்ப்ளேயில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள். முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 90 ரன்கள். எட்டவேண்டிய இலக்கை மும்பை எளிதில் எட்டிவிடும் என்றே தோன்றியது. மும்பையும் அதே சீரான வேகத்தில் இலக்கை நோக்கி முன்னேறியது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள்தான் தேவை. க்ரீஸில் டிம் டேவிட்டும் கேமரூன் க்ரீனும் நின்றார்கள். டிம் டேவிட் அக்மார்க் ஃபினிஷர்.

Mohsin Khan
Mohsin Khan

இந்த சீசனிலேயே சில போட்டிகளில் நம்பமுடியாத இன்னிங்ஸ்களை ஆடி போட்டியைச் சிறப்பாக முடித்திருக்கிறார். கேமரூன் க்ரீனும் பேட்டை வாள் போல வீசக்கூடியவர்தான். இப்படிப்பட்ட இருவரை க்ரீஸுக்குள் வைத்துக்கொண்டுதான் அந்த 11 ரன்களை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்து காட்டியிருக்கிறார் மோஷின் கான்.

சரி, அந்த கடைசி ஓவரில் மோஷின் கான் என்னதான் செய்தார்?

ஒரு எக்ஸ்ட்ரா கூட வீசாமல் திட்டமிட்டப்படியே வெறும் 6 பந்துகளை மட்டுமே வீசியிருந்தார். 11 ரன்களை டிஃபண்ட் செய்தார் என்பதைத் தாண்டி கேமரூன் க்ரீன், டிம் டேவிட்டையும் ஒரு பந்தை கூட பவுண்டரியாக்கவிடாமல் தடுத்தார் இல்லையா அதுதான் பெரிய விஷயம்.
Mohsin Khan and his Father
Mohsin Khan and his Father

மோஷின் கான் வீசிய இந்த 6 பந்துகளை மூன்று மூன்று பந்துகளாக இரு கூறாகப் பிரித்துக் கொள்ளலாம். வேகத்தின் அடிப்படையில் இதை வகைப்படுத்தினோம் எனில், மூன்று பந்துகளை ரொம்பவே மெதுவாக வீசியிருந்தார். மூன்று பந்துகளை நல்ல வேகத்தில் வீசியிருந்தார். அவர் வீசிய முதல் 2 பந்துகளின் வேகம் 122, 125 Kmph ஆகத்தான் இருந்தது. குட் லென்த்தில் வந்த இந்த இரண்டு பந்துகளையும் க்ரீனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. சிங்கிள் மட்டுமே தட்டினார். மூன்றாவது பந்தில் டிம் டேவிட் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். இப்போது திடீரென வேகத்தைக் கூட்டினார் மோஷின். இந்த மூன்றாவது பந்து 144 Kmph வேகத்தில் யார்க்கர் லென்த்தில் வந்து விழுந்தது. டிம் டேவிட்டால் சிங்கிள் மட்டுமே தட்ட முடிந்தது. நான்காவது பந்தில் க்ரீன் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். இப்போதும் 140+ கி.மீ வேகத்தில் நச் யார்க்கர். க்ரீனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்தப் பந்து டாட்டாக மாறியது.

Tim David
Tim David
IPL

கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் அடிக்க வேண்டும். ஆக, அந்த 5வது பந்தில் ஒரு பவுண்டரியோ அல்லது மூன்று ரன்னோ வந்தால்தான் ஆட்டத்தில் உயிர்ப்போடு இருக்க முடியும் என்ற நிலை. இப்போதும் அதே 140+ கி.மீ வேகத்தில் யார்க்கிங் லென்த் டெலிவரி. க்ரீனால் இந்தப் பந்தில் சிங்கிள் தட்ட முடிந்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.

'குரு' படத்தின் க்ளைமாக்ஸில் அபிஷேக் பச்சன், "நீங்க கொடுத்தது 5 நிமிசம். ஆனா, நா 4 நிமிசம் 30 செகண்ட்லயே முடிச்சிட்டேன். 30 செகண்ட் ப்ராஃபிட்" என்பாரே, மோஷின் கான் அந்த 5வது பந்தை வீசி முடித்த தருணத்தில் அந்தக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. கடைசி பந்து வீசப்படுவதற்கு முன்பே லக்னோவிற்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் மோஷின். சம்பிரதாயத்திற்கு வீசப்பட்ட அந்தக் கடைசி பந்தை மீண்டும் 120 கி.மீ வேகத்திலேயே வீசினார். இந்தப் பந்தில் டிம் டேவிட் இரண்டு ரன்களை எடுத்தார். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அத்தனை பேரும் மோஷினைத் தோளில் தூக்கிக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

Mohsin Khan
Mohsin Khan

மோஷின் கான் இந்த சீசனில் இல்லை, கடந்த சீசனிலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார். கடந்த சீசனின் இரண்டாம் பாதியில் தொடர் வாய்ப்புகளை பெற்ற மோஷின் கான் லக்னோ அணிக்காக 9 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் கவனிக்க வேண்டியது அவருடைய எக்கானமி. அது 5.9 ஆகத்தான் இருந்தது. டி20 போட்டியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இத்தனை சிக்கனமாக வீசுவது அரிதினும் அரிதாகவே நடக்கக்கூடியது.

நான்காண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஆடுவதற்கு வாய்ப்பே கிடைக்காத மோஷின் கான் லக்னோவில் வாய்ப்பு கிடைத்ததும் செய்ததெல்லாம் புலிப்பாய்ச்சல்தான். விறுவிறுவென முன்னேறியவருக்கு அதே வேகத்தில் தடங்கல்களும் வரத் தொடங்கின. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த சமயத்திலேயே காயம் காரணமாக அவதியுறத் தொடங்கினார் மோஷின். தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில்தான் கடந்த ஒரு வருடமாகத் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

"என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையையே புரட்டிப் போடும் காயத்தில் சிக்கியிருந்தேன். கொஞ்சம் தாமதமாகியிருந்தால் என்னுடைய கையையே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்" என மோஷின் கான் தன்னுடைய காயம் குறித்து அச்சம் விலகாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் கூட அவர் ஆடுவது சந்தேகத்துக்குரியதாகதான் இருந்தது. மெது மெதுவாகக் காயத்திலிருந்து மீண்டு வந்தவர் இப்போதுதான் போட்டிகளில் ஆடத் தொடங்கினார். இந்தச் சமயத்தில்தான் தந்தையின் உடல் நலமும் மோஷினுக்குப் பெரும் வலியைக் கொடுத்தது.

Mohsin Khan
Mohsin Khan

தந்தை எப்படியும் தேறிவிடுவார் என்று மனதைத் தேற்றிக் கொண்டு ஒருவித அழுத்தத்தோடுதான் ஆடவே வந்தார். ஆனால், அவரது செயல்பாட்டில் இதை நம்மால் உணரவே முடியாது. ரொம்பவே நிசப்தமாக பதைபதைப்பு எதுவுமின்றி பக்குவமாக அந்தக் கடைசி ஓவரை வீசியிருந்தார். போட்டியை வென்று கொடுத்துவிட்டு பேசுகையில் தனது ஹீரோவான தந்தை குறித்தும் அவர் பேசத் தவறவில்லை.

"நேத்துதான் அப்பா ஐசியூவுல இருந்து டிஸ்சார்ஜ் ஆனாரு. இன்னைக்கு இந்த மேட்ச்ச அவரும் பார்த்திருப்பாரு. அவருக்காகதான் நான் இப்படி ஆடுனேன்" என மும்பைக்கு எதிரான இந்த பெர்ஃபார்மென்ஸைத் தனது தந்தைக்கே டெடிகேட் செய்தார் மோஷின்.
"அப்பாக்காகதான் எல்லாமே..!"