நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் தனது சிறப்பானப் பங்களிப்பை அளித்திருந்தார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார்.

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வாகி, பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றி இருக்கிறார். டூ பிளேசிஸ் 84 ரன்களை எடுத்து, ஆரஞ்சு கேப்பைக் கைப்பற்றி இருக்கிறார். ஆட்ட நாயகனாக தேர்வாகி, பர்ப்பிள் கேப்பை வென்ற முகமது சிராஜிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகமது சிராஜ் பர்பிள் கேப் தொடர்பாக ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். “ 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் புவனேஷ்வர் குமார் பர்ப்பிள் கேப்பை வென்றபோது, அவர் சார்பாக அந்த பர்ப்பிள் கேப்பை வாங்க நான் சென்றேன். அப்போது நானும் ஒரு நாள் இந்த கேப்பை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது இந்த பர்ப்பிள் கேப்பை வென்று அதனை என் கையில் வைத்திருப்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.