Published:Updated:

ஆக்ரோஷம், ஆனந்தம், ஆசுவாசம் - ஸ்டார்க்கின் அந்த ஒரு பந்தும், ஆஷஸின் தொடக்கமும்!

Mitchell Starc ( AP )

ஸ்விங்கும், ஸ்விங் ஆனதே தெரியாத அந்த வேகமும் சேர, ஸ்டார்க்கின் ஆஸ்தான டெலிவரியை கட்டியணைத்து ஸ்டம்புகள் நோக்கிச் செலுத்தியது காபா ஆடுகளம். தூக்கிய பர்ன்ஸின் பேட், அவர் பாதத்தை நோக்கி வருவதற்குள் பெயில்கள் மேலே தெறித்தன. காபாவில் எழுந்த கரோகஷங்கள் பிரிஸ்பேன் வானைப் பிளந்தன.

Published:Updated:

ஆக்ரோஷம், ஆனந்தம், ஆசுவாசம் - ஸ்டார்க்கின் அந்த ஒரு பந்தும், ஆஷஸின் தொடக்கமும்!

ஸ்விங்கும், ஸ்விங் ஆனதே தெரியாத அந்த வேகமும் சேர, ஸ்டார்க்கின் ஆஸ்தான டெலிவரியை கட்டியணைத்து ஸ்டம்புகள் நோக்கிச் செலுத்தியது காபா ஆடுகளம். தூக்கிய பர்ன்ஸின் பேட், அவர் பாதத்தை நோக்கி வருவதற்குள் பெயில்கள் மேலே தெறித்தன. காபாவில் எழுந்த கரோகஷங்கள் பிரிஸ்பேன் வானைப் பிளந்தன.

Mitchell Starc ( AP )

பிரிஸ்பேன் அதிர்ந்துகொண்டிருக்கிறது. காபா மைதானத்தில் எழுந்த சத்தம் அந்த நகரையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மொத்த நாளுக்கும் சேர்த்து வைத்திருந்த எனர்ஜியை முதல் பந்திலேயே கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வர்ணனையாளர்கள். களத்தில், பச்சைத் தொப்பி அணிந்த ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாட்டத்தின் எல்லையை அடைந்திருக்கிறார்கள். சில வாரங்கள் முன்பு டி-20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோதுகூட இப்படி ஆர்ப்பரித்ததாகத் தெரியவில்லை. ஆக்ரோஷம், ஆசுவாசம், ஆனந்தம் என அத்தனை உணர்வுகளும் கரைபுரண்டுகொண்டிருக்கின்றன. இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமோ ஸ்தம்பித்துக்கிடக்கிறது. அத்தனை எமோஷன்களுக்கும் நடுவே - மிட்செல் ஸ்டார்க், அவர் வீசிய கூக்கபரா பந்து, அது தாக்கி தகர்ந்திருந்த அந்த ஸ்டம்புகள்..!

2021-22 ஆஷஸ் டெஸ்ட் தொடர் இப்படியாகத்தான் தொடங்கியது. உலகமே எதிர்பார்த்த அந்தத் தொடரின் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸை போல்டாக்கினார் மிட்செல் ஸ்டார்க். அதனால்தான் அத்தனை ஆர்ப்பரிப்பும். ஆனால், மேலே சொன்னதுபோல் அது ஆனந்தத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அது ஆசுவாசத்தின் வெளிப்பாடும் கூட!

இந்தத் தொடருக்கு இரண்டு அணிகளும் எப்படியான மனநிலையில் வந்தன? பொதுவாகவே ஆஷஸ் தொடர் இரண்டு அணிகள் மீதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். நெருக்கடியைக் கொடுக்கும். இரண்டு அணிகளைக் கேட்டாலும், உலகக் கோப்பையை விட ஆஷஸ் முக்கியம் என்று கர்வமாகக் கூறுவார்கள். ஆனால், ஆஷஸ் ஏற்படுத்தும் நெருக்கடியை விட, பல விஷயங்கள் இரண்டு அணிகள் மீதான பிரஷரையும் அதிகப்படுத்தியிருந்தன.

கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களில் ஒன்றைக்கூட இங்கிலாந்து வெல்லவில்லை. இந்திய மண்ணில் படுதோல்வி. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி. இந்தியாவுக்கு எதிராகவும் தொடரை இழக்கும் நிலையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் தங்களின் மிகப்பெரிய யுத்ததத்தை சந்திக்க, ஆஸ்திரேலிய மண்ணில் காலெடுத்து வைத்திருக்கிறது ரூட் அண்ட் கோ.

The Ashes started with a Starc Special!
The Ashes started with a Starc Special!

சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா ஒன்றும் நம்பிக்கையோடு இந்த டெஸ்ட் தொடரை தொடங்கிவிடவில்லை. ஏற்கெனவே அந்த அணியின் கேப்டன்கள் சர்ச்சையில் சிக்கி பெரும் பிரச்னை ஆன நிலையில், இப்போது டிம் பெய்னும் விலகியிருக்கிறார். மிகப்பெரிய தொடருக்கு முன்னால் ஒரு புதிய கேப்டன் பதவியேற்றிருக்கிறார். இதற்குப் பின்னணியில் வரலாறும் அவர்களுக்குக் கொஞ்சம் வலியைக் கடத்தியிருக்கும்.

பல ஆண்டுகள் அவர்களின் கோட்டையாய் விளங்கிய காபாவை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இளம் இந்தியப் படை இடித்து தள்ளியது. போக, தொடரையும் வென்று சென்றது. அதிலிருந்து மீளவேண்டும். முதல் போட்டி, அதே காபாவில். தங்கள் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய நெருக்கடி. புதிய கேப்டனின் தலைமையில் நல்லபடியாகத் தொடங்கி, தங்கள் மதிப்பை நிலைநாட்டவேண்டிய நெருக்கடி. இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியாவுக்குத்தான் மிகப்பெரிய நெருக்கடி இருந்தது.

Rory Burns losing his stumps for a Starc Yorker
Rory Burns losing his stumps for a Starc Yorker
AP

ஸ்டார்க் வீசிய அந்த முதல் பந்து, காபாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அஸ்திவாரமாய் அமைந்துவிட்டது. அவர்களுக்கு இருந்த நெருக்கடியை வெகுவாகக் குறைத்துவிட்டது. களத்துக்கு வெளியே நடக்கும் பிரச்னைகள், உள்ளே பிரதிபலிக்காது எனும் நம்பிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்துவிட்டது. அந்த ஆசுவாசம்தான் அந்த அமர்க்களமான கொண்டாட்டத்துக்குக் காரணமாக அமைந்தது.

களத்திலிருந்த மற்ற 10 பேருக்கும் ஒரே மாதிரியான நெருக்கடிதான். ஆனால், மிட்செல் ஸ்டார்க்குக்கு அப்படியில்லை. அவர் கொண்டாட்டத்தைப் பார்க்கும்போதே அந்த வித்தியாசத்தை உணர முடியும். மற்ற வீரர்களுக்கு இருந்ததை விடவும் ஸ்டார்க்குக்கு அதிக நெருக்கடி இருந்தது.

இந்தப் போட்டிக்கு முன்பு, தான் களமிறக்க விரும்பும் பிளேயிங் லெவன் என்று ஒரு பட்டியல் வெளியிடுகிறார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே. அதில் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. சொல்லப்போனால் ஒரு சிலருக்கு அது அதிர்ச்சியாகவும் இருந்திருக்காது. ஏனெனில், அவர் பழைய ஸ்டார்க்காக இல்லை.

அவர் பந்துவீச்சில் முந்தைய துள்ளியம் இல்லை. அச்சுறுத்தல் இல்லை. தங்களின் டச் தவறும்போது மற்ற முன்னணி பௌலர்கள் சில மாற்றங்கள் செய்துகொள்வார்கள். ஸ்டார்க் அதையும் செய்யவில்லை. எல்லா ஃபார்மட்டிலும் சொதப்பினார். டி-20 உலகக் கோப்பை பைனலில், வில்லியம்சனோடு சேர்ந்து நியூசிலாந்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தார். காபாவில் நடந்த முந்தைய போட்டியில், இவர் ஓவரில் 20 ரன்கள் அடித்துத்தான் இந்தியாவின் சேஸுக்கு அடித்தளம் அமைத்தார் சுப்மன் கில்.

Mitchell Starc
Mitchell Starc
AP

அதுமட்டுமல்ல, கடந்த ஆஷஸ் தொடரில் அவர் விளையாடியது வெறும் 1 போட்டியில் மட்டும்தான். இந்த அணியில் இருக்கும் ஜை ரிச்சர்ட்சன், கடந்த மாதம் இந்த மைதானத்தில் விளையாடிய ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இவர் சரியாக செயல்படாவிட்டால், அவரை எடுத்திருக்கலாம் என்ற குரல்கள் எழும். வார்னேவின் அணியில் ஸ்டார்க்குக்குப் பதில் இருந்ததும் ஜை ரிச்சர்ட்சன்தான். ஸ்டார்க் சாதாரண நெருக்கடியிலா இருந்தார்?!

இப்படியொரு மனநிலையில் இருக்கும்போது, வீசிய முதல் பந்தே விக்கெட் என்றால், அதுவும் ஆஷஸின் முதல் பந்தே விக்கெட் என்றால்... அந்தக் கொண்டாட்டத்தில் ஆக்ரோஷம் இருக்கத்தானே செய்யும். அதுவும் அந்த விக்கெட் விழுந்த விதம், தன்னையே தனக்கு நினைவுபடுத்தினால், தன் பழைய மேஜிக் திரும்பிவிட்ட நம்பிக்கைக் கொடுத்தால்... உலகக் கோப்பை வென்றதைவிட மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கத்தானே செய்யும்!

பர்ன்ஸின் விக்கெட்டை அட்டகாசமாக முறையிலல்லவா வீழ்த்தினார் ஸ்டார்க். அதுவும் அவருடைய ஸ்டைலில் பக்காவான ஸ்விங்கிங் யார்க்கர்!

ஓவர் தி ஸ்டம்ப் லைனிலிருந்து அவர் வீச, லெக் ஸ்டம்ப் லைனை நோக்கி பாய்ந்தது அந்தப் பந்து. அதனால், டவுன் தி லைன் வந்தார் பர்ன்ஸ்.

இப்போது பௌலரை மறந்துவிட்டு யோசித்துப் பார்ப்போம். சாதாரணமாக, ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஓவர் தி ஸ்டம்ப் லைனிலிருந்து வீசிய பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியேதான் சென்றிருக்கும். சொல்லப்போனால், எட்டாவதாக ஒரு ஸ்டம்ப் இருந்தால் அதைத்தான் தாக்கியிருக்கும். அந்த இடத்தில் பர்ன்ஸ் ஆடிய விதத்தில் பிரச்னை ஏதும் இருந்திருக்காது. ஆனால், இது ஸ்டார்க். சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் தன் மிரட்டல் பந்துவீச்சால் அலறவிட்டுக்கொண்டிருந்தாரே அந்த ஸ்டார்க்.

That Swing!!
That Swing!!

142.1 kmph வேகத்தில் புயலென பாய்ந்து வந்து, யாரும் எதிர்பாராத விதம் பாதை மாறிப் பயணிக்கத் தொடங்கியது அந்தப் புதிய கூக்கபரா பந்து. மிகப்பெரிய ஸ்விங். மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் அது எந்த அளவுக்கு பாதை மாறியது என்று புரியும். இப்படியொரு ஸ்விங்கும், ஸ்விங் ஆனதே தெரியாத அந்த வேகமும் சேர, ஸ்டார்க்கின் ஆஸ்தான டெலிவரியை கட்டியணைத்து ஸ்டம்புகள் நோக்கிச் செலுத்தியது காபா ஆடுகளம். தூக்கிய பர்ன்ஸின் பேட், அவர் பாதத்தை நோக்கி வருவதற்குள் பெயில்கள் மேலே தெறித்தன. காபாவில் எழுந்த கரோகஷங்கள் பிரிஸ்பேன் வானைப் பிளந்தன. இங்கிலாந்தின் இன்னிங்ஸுக்கு முடிவுரையும் எழுதப்பட்டது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடாத வாதம். எத்தனையோ சகாப்தங்கள் படுமோசமாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அதன்பின் அவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒருசில முறை அந்த முதல் பந்து ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையையும் உடைத்துவிடும். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அது நிகழும்போது, எதிரணி உருகுலைவது சாதாரண விஷயம்தான். எதிரணியின் அவநம்பிக்கை மீது அரியாசணமிட்டு அமர்ந்து, அவர்களின் பயத்தைக் குடிப்பவர்கள் அவர்கள். அதுவும் 'ஸ்டார்க் ஸ்பெஷல்' டெலிவரிகளில் வீழும்போது எப்பேர்ப்பட்ட அணியின் நிலைத்தன்மையையும் அது கெடுத்துவிடும். 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் வீசிய ஒற்றைப் பந்து நியூசிலாந்தை ஒட்டுமொத்தமாக உருக்குலைக்க அவருக்குத் தேவைப்பட்டது ஒரேயொரு ஸ்டா(ர்)க் டெலிவரிதான். இன்று இங்கிலாந்து இன்னிங்ஸை காலி செய்யவும், ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுக்கவும், தன்னைத் திரும்ப மீட்டெடுக்கவும் அவருக்குத் தேவைப்பட்டது ஒரு டெலிவரிதான்!