Published:Updated:

‘’கிரிக்கெட்டை அழிக்கும் நஞ்சு… ஐபிஎல்-க்கு கமென்ட்ரி செய்யவே மாட்டேன்!’’ - மைக்கேல் ஹோல்டிங்

மைக்கேல் ஹோல்டிங்
News
மைக்கேல் ஹோல்டிங்

''டி20 தொடர்களை வெல்வதை வைத்தெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி எழுச்சி பெறுகிறது என சொல்ல முடியாது.'' - மைக்கேல் ஹோல்டிங்

மைக்கேல் ஹோல்டிங்கின் குரலுக்கு கிரிக்கெட் உலகில் எப்போதும் பெரும் மதிப்பு உண்டு. நடைமுறை யதார்த்தத்தோடு சேர்ந்த ஒரு லட்சியவாதம் எப்போதும் அவருடைய பேச்சில் வெளிப்படும். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட போது, நிறவெறிக்கு எதிராக இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிக்கு இடையே மைக்கேல் ஹோல்டிங் பேசிய கருத்துகள் உலகம் முழுக்க வைரலானது. கண்ணீர்மல்க வெறும் உணர்ச்சி கொந்தளிப்பாக மட்டும் இல்லாமல் '’கற்பித்தலின் மூலம் மட்டுமே நிறவெறியை களைய முடியும்'’ என ஆக்கப்பூர்வமாக மைக்கேல் ஹோல்டிங் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த பேச்சுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'Why we kneel how we rise' என்ற புத்தகத்தை மைக்கேல் ஹோல்டிங் எழுதியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மைக்கேல் ஹோல்டிங் குறிப்பிட்ட 'கற்பித்தல்' என்கிற விஷயமே இந்த புத்தகத்தின் அடிப்படையாக இருக்கிறது. நிறவெறிக்கான வரலாற்று பதிவுகளோடு உசைன் போல்ட், மக்காயா நித்னி, நவோமி ஒசாகா போன்ற பல்வேறு விளையாட்டை சேர்ந்த வீரர்களின் நிறவெறி அனுபவங்களும் இந்த புத்தகத்தில் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தை அறிமுகம் செய்து வைக்கும் பொருட்டு மைக்கேல் ஹோல்டிங் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். இதில் ஒரு நேர்காணலில் ஐபிஎல் குறித்தும் பேசியிருந்தார்.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்

'’நிறவெறிக்கு எதிராக பேசுவோர்கள் எல்லாம் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையை அந்த ஒற்றை கருத்தோடு முடித்துவிடுகிறார்கள். அதற்கான உதாரணம் அமெரிக்க கால்பந்து வீரரான காலின் கேப்பர்னிக். நிறவெறிக்கு எதிராக அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். அத்தோடு அவருடைய கரியரை முடித்துவிட்டார்கள். இங்கே நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பு ரீதியிலான இனவெறி விளையாட்டு உலகுக்குள் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக தெருவில் ஒரு கறுப்பினத்தவர் நடந்து சென்றால் எதிரில் வரும் வெள்ளையினத்தவர்கள் ஒதுங்கி ஒரு ஓரமாக செல்லுவார்கள். இந்த மனநிலைக்கு யாரையும் குற்றம்சாட்ட முடியாது. கறுப்பினத்தவர் என்றால் முரடராக குற்றவாளியாகவே இருப்பார் என்கிற ஒரு பிம்பம் இங்கே காலங்காலமாக அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வெள்ளையின மாணவனும் ஒரு கறுப்பின மாணவனும் ஒன்றாக அமர்ந்து பள்ளியில் படிக்கலாம். ஆனால், பள்ளி படிப்பை முடித்த பிறகு இருவரின் பாதையும் வேறாகத்தான் இருக்கும். வெள்ளையின மாணவன் செய்வதை கறுப்பின மாணவரால் செய்ய முடியாது. இன்றைக்கும் இதுதான் நிலைமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் என்னுடைய பேச்சை கேட்டுவிட்டு பலரும் அந்த பேச்சு தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் வெளிப்பாடாகவே இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். வெறும் நட்சத்திரங்களை மட்டும் வைத்து அவர்களின் அனுபவங்களை எழுதி பரபரப்பாக விற்றுவிட முடியும். அதனால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. யாருக்கும் எந்தவித கற்பிதமும் ஏற்படாது. முழுமையாக ஆராய்ந்து வரலாற்று தகவல்களோடு அனைவருக்கும் நிறவெறி குறித்த ஒரு கற்பிதத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்'’ எனப்பேசிய மைக்கேல் ஹோல்டிங் இதேபேட்டியில் ஐபிஎல் குறித்தும், டி20 கிரிக்கெட் குறித்தும் விமர்சித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்டனருடன் மைக்கேல் ஹோல்டிங்
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்டனருடன் மைக்கேல் ஹோல்டிங்

'’டி20 தொடர்களை வெல்வதை வைத்தெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி எழுச்சி பெறுகிறது என சொல்ல முடியாது. டி20 க்கள் ஒரு கிரிக்கெட்டே கிடையாது. கிரிக்கெட்டை சாகடிக்கும் நஞ்சு போன்றவை இந்த டி20 தொடர்கள். ஏழ்மையான கிரிக்கெட் போர்டுகளின் வீரர்களை அதிக பணத்தை கொடுத்து அள்ளிச் சென்று கிரிக்கெட் ஆட வைக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதை விட வேறு நாட்டின் டி20 தொடரில் ஆடவே அதிகம் விரும்புகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்துகிறோம் என வெறுமென வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக்கொண்டிருக்கின்றனர். உண்மையான கிரிக்கெட்டுக்குதான் கமென்ட்ரி செய்வேன். ஐபிஎல்-க்கு ஒருபோதும் கமெண்ட்ரி செய்யமாட்டேன்'’ என தனது ஆதங்கத்தையும் மொத்தமாக கொட்டியிருக்கிறார் மைக்கேல் ஹோல்டிங்.

ஐ.பி.எல் குறித்த சர்ச்சைமிக்க கருத்தால் மைக்கேல் ஹோல்டிங் நிறவெறி பற்றி பேசிய பேச்சுக்கள் தாண்டி ஐபிஎல் பற்றி பேசியது அதிகம் பகிரப்படுகிறது. டேக் டைவர்ஷன் ப்ளீஸ்!