Published:Updated:

ஸ்கெட்ச் போட்ட மேக்ஸ்வெல்... மிரட்டிய கூல்டர்நைல்... பவர்ப்ளேவில் வீழ்ந்த ப்ரிஸ்பேன் ஹீட்! #BBL

#BBL
#BBL

லின்னை செக்மேட் செய்தது போல மேக்ஸ்வெல்லும் தொடர்ந்து ஆடம் ஸாம்பா மற்றும் ஹின்ச்லிஃப் ஆகிய ஸ்பின்னர்களை மட்டுமே வீச வைத்தார். லின்னுக்கும் ஸ்பின்னுக்கும் எப்போதுமே ஆகாது. ஸ்பின்னுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ சுற்றிதான் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிக்பேஷ் லீகின் இரண்டாவது போட்டியில் இன்று, மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியும், கிறிஸ் லின் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. இந்த போட்டியை மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல்-ல் கூட ரேசிசத்திற்கு எதிராக எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. ஆனால், பிக்பேஷ் லீகில் ரேசிசத்திற்கு எதிராக #BlackLivesMatter இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீரர்கள் அனைவரும் முட்டி போட்டு கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தப்பிறகே ஒவ்வொரு போட்டியும் தொடங்கப்படுகிறது.

டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் கேப்டன் மேக்ஸ்வெல் பௌலிங்கை தேர்வு செய்தார். பிரிஸ்பேன் ஹீட் அணியின் ஓப்பனர்களாக ஹேசல்ட்டும் ப்ரையன்ட்டும் களமிறங்கினர்.

மெல்பர்ன் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்லே முதல் ஓவரை வீசுவதற்கு வந்தார். எதிரணி பேட்ஸ்மேன்கள் மெயின் பௌலர்களை எதிர்பார்க்க, மேக்ஸ்வெல் பந்து வீச வந்தது பிரிஸ்பேனின் ஓப்பனர்களுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. இதனாலயே இவரின் ஓவரை அட்டாக் செய்வதா இல்லை கொஞ்சம் தட்டி ஆடுவோமா என்கிற குழப்பம் இருவருக்குமே இருந்தது. முதல் ஓவரின் கடைசிப் பந்தில் மட்டும் லெக் பையாக ஒரு பவுண்டரி கிடைத்தது. பில்லி ஸ்டேன்லேக் வீசிய அடுத்த ஓவரிலும் பெரிதாக இவர்களால் ரன் அடிக்க முடியவில்லை. கடைசி பந்தில் மட்டும் ஒரு பவுண்டரி கிடைத்தது. முதல் 4 ஓவர்கள்தான் பவர்ப்ளே என்பதே தெரியாதது போல ஹேசல்ட்டும் ப்ரையன்ட்டும் மந்தமாக ஆடிக்கொண்டிருந்தனர். மேக்ஸ்வெல் வீசிய 3 வது ஓவரிலும் வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

பவர்ப்ளே முடிவில் ப்ரிஸ்பேன் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. ஹேசல்ட்-ப்ரையன்ட் கூட்டணி பவர்ப்ளேயில் கூட ரன்ரேட்டே 5-க்கு மேல் உயர்த்தவில்லை. பவுண்டரி ப்ரஷர் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் ஹின்ச்லிஃப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹேசல்ட் எல்பிடபிள்யு ஆனார். ஒன்டவுனில் கேப்டன் கிறிஸ் லின் களமிறங்கினார்.

கிறிஸ் லின் இப்போதைக்கு சுத்தமாக ஃபார்மில் இல்லை. கரீபியன் லீகிலும் ரொம்பவே மோசமாகத்தான் ஆடியிருந்தார். அதன் விளைவாக ஐபிஎல்-லிலும் ப்ளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியிலும் லின் திணறவே செய்தார். லின்னை செக்மேட் செய்தது போல மேக்ஸ்வெல்லும் தொடர்ந்து ஆடம் ஸாம்பா மற்றும் ஹின்ச்லிஃப் ஆகிய ஸ்பின்னர்களை மட்டுமே வீச வைத்தார். லின்னுக்கு ஸ்பின்னுக்கும் எப்போதுமே ஆகாது. ஸ்பின்னுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ சுற்றிதான் இருக்கும். கணித்ததைப் போலவே லின்னால் ஸ்பின்னை அவ்வளவு சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை. இரண்டு சிக்சர்கள் அடித்தாலும், டாட் ஆடி பந்துகளுக்கு இணையாகத்தான் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார்.

#BBL
#BBL

8-வது ஓவரில் நாதன் கூல்டர்-நைலை அறிமுகப்படுத்தினார் மேக்ஸ்வெல். கூல்டர் நைலும் ஐபிஎல்-ல் அவ்வளவு சிறப்பாக செயல்படாவிட்டாலும் இன்று கச்சிதமாக வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே ப்ரையன்ட் எட்ஜ்ஜாகி கீப்பர் பெண் டங்கிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

முதல் 10 ஓவர்களில் 6 ஓவர்களை ஸ்பின்னர்கள் வீச 59 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்திருந்தது பிரிஸ்பேன். 11-வது ஓவரிலிருந்து கொஞ்சம் வேகப்பந்து வீச்சாளர்கள் எட்டிப்பார்க்க, ஆசுவாசமடைந்த லின் கியரை மாற்றத் தயாரானார். ஸ்டான்லேக் வீசிய 11-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து ஆடத் தொடங்கினார் லின். ஆனால், அடுத்து கூல்டர்நைல் வீசிய 12-வது ஓவரில் லாங்- ஆஃபில் தூக்கியடித்து கேட்ச் ஆகி வெளியேறினார். 11-வது ஓவருக்குப் பிறகு பவர் சர்ஜ் எனப்படும் இரண்டு ஓவர் பவர்ப்ளேவை எடுக்க முடியும். அதை இந்நேரத்தில் எடுத்திருந்தால் லின்னின் விக்கெட் விழுந்திருக்காது. ஆனால், பிரிஸ்பேன் அணி கொஞ்சம் தாமதமாக 17-18 வது ஓவரில் இந்த பவர் சர்ஜ் ஆப்ஷனை எடுத்தது. பவுண்டரி ப்ரஷரில் இந்த 2 ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் விழுந்தன. பியர்சன், ஜேக்வுட், டாம் கூப்பர் என முக்கியமான விக்கெட்டுகள் எல்லாம் காலியானது. விளைவு, அந்த அணியால் 20 ஓவரை கூட முழுதாக முடிக்க முடியவில்லை. 19.5 ஓவர்களிலேயே 125 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது பிரிஸ்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூல்டர்நைல் மட்டும் 3.5 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். போதாதற்கு இரண்டு ரன் அவுட்களை வேறு செய்திருந்தார்.

126 என்ற எளிய டார்கெட்டை சேஸ் செய்ய களமிறங்கியது மெல்பர்ன் ஸ்டார்ஸ். அந்த அணியின் ஓப்பனர்களாக ஸ்டாய்னிஸும் ஃப்ளெட்சரும் களமிறங்கினர். பேர்ட்லெட் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே லாங் ஆனில் பெரிய ஷாட்டுக்கு முயன்று எட்ஜ்ஜாகி கீப்பரிடம் கேட்ச் ஆனார் ஸ்டாய்னிஸ். இந்த ஓவர் விக்கெட் மெய்டனாக முடிந்தது. நம்பர் 3-ல் கார்ட்ரைட் களமிறங்கினார். மெல்பர்ன் பேட்ஸ்மேன்களுக்கு ஏன் அத்தனை அவசரம் எனப் புரியவே இல்லை. 126-தான் டார்கெட். ஆனால், இவர்களோ 200+ ஸ்கோரை சேஸ் செய்வது போல அவசரகதியில் ஆடத் தொடங்கினர். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்துவிட்டு குன்நெமனின் பந்தில் நேராக தலைக்கு மேல் தூக்கி அடித்து அவரிடமே கேட்ச் ஆனார் ஆண்ட்ரே ஃப்ளெட்சர். 4 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்து மெல்பர்ன் அணியும் தடுமாறத் தொடங்கியது. அடுத்த ஒரு சில ஓவர்களை கார்ட்ரைட்டும் பென் டங்கும் உருட்டி கொண்டு போய் கொண்டிருந்தனர். இடையில் கார்ட்ரைட்டுக்கு ஒரு கேட்ச்சை ஜாக் வுட் டிராப் செய்ய அவரையே கூப்பிட்டு பந்து வீச வைத்தார் லின். சைனாமேன் பௌலரான அவர் வீசிய முதல் பந்தையே தூக்கியடித்து பென் டங்க் கேட்ச் ஆகி வெளியேறினார். 34-3 என்ற நிலையில் மேக்ஸ்வெல்லும் கார்ட்ரைட்டும் கூட்டணி சேர்ந்தனர். இந்த கூட்டணிதான் ஆட்டத்தை மாற்றத் தொடங்கியது.

#BBL
#BBL

பெரிய ஷாட்டுக்கு செல்லாமல் இருவரும் பொறுப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த கூட்டணி சிறப்பாக ஆட 10 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்தது அந்த அணி. இந்த ஸ்கோர் பிரிஸ்பேன் 10 ஓவர்களில் எடுத்ததை விட அதிகம் என்பதால் Bash Boost ஆக ஒரு புள்ளி கிடைத்தது. செட்டிலான இந்தக் கூட்டணியில் மேக்ஸ்வெல் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பவுண்டரிகளுக்கு முயல சுலபமாகவே 126 ரன்களை சேஸ் செய்து முடித்துவிட்டது மெல்பர்ன் ஸ்டார்ஸ். மேக்ஸ்வெல் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கடைசி கட்டத்தில் அவுட் ஆக கார்ட்ரைட் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக அணியை வெற்றி பெற செய்தார்.

வெற்றி பெற்ற மெல்பர்ன் அணி Bash Boost புள்ளி, வெற்றிக்கான 3 புள்ளிகளோடு சேர்த்து 4 புள்ளிகளை பெற்றது.

பௌலிங்கில் கூல்டர்நைலின் வெறித்தனமான 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் மற்றும் கார்ட்ரைட்டின் பொறுப்பான பார்ட்னர்ஷிப்புமே இந்த அணி வெல்வதற்குக் காரணமாக அமைந்தது. மேலும், கேப்டன்சியில் மேக்ஸ்வெல் எதிரணி வீரர்களின் பலம் பலவீனங்களை நன்கு உணர்ந்து சிறப்பான பௌலிங் ரொட்டேஷன் மூலம் கட்டம் கட்டினார்.

பிரிஸ்பேன் ஹீட்டைப் பொறுத்தவரை முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் மேக்ஸ்வெல் 2 ஓவர்களை வீசியும் அவர்களால் 19 ரன்களே எடுக்க முடிந்தது. இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது பவர் சர்ஜ் பவர்ப்ளேவையும் கிறிஸ் லின் சரியான நேரத்தில் எடுக்கத் தவறிவிட்டார். இந்த இரண்டும்தான் பிரிஸ்பேன் அணியின் தோல்விக்குக் காரணங்கள்.

6 ஓவர்கள் பவர்ப்ளே ஆடிவிட்டு 4 ஓவர் பவர்ப்ளே ஆடுவதற்கு எல்லா அணிகளுமே சிரமப்படவே செய்கின்றனர். கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டுமா... அதிரடியில் இறங்க வேண்டுமா என்கிற குழுப்பம் எல்லாருக்குமே இருக்கிறது. இன்னும் X-Factor-ஐ எந்த அணியும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு