Published:Updated:

`200 கேட்டீர்கள், அடித்துவிட்டேன்... வேற என்ன?!' - மயங்க் கேள்விக்கு சைகையால் பதில் சொன்ன கோலி

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியுள்ளார்.

மயங்க் அகர்வால், விராட் கோலி
மயங்க் அகர்வால், விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. மயங்க் அகர்வாலும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ரோகித் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். முதல் நாள் முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா, மயங்க் அகர்வால் இருவரும் களத்தில் இருந்தனர்.

மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால்
bcci

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அரை சதம் அடித்த நிலையில் புஜாரா தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரஹானே களமிறங்கினார். மயங்க் அகர்வால், ரஹானே இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். மயங்க் தனது 3-வது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் வேகமெடுத்த மயங்க், ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க், 150 ரன்களைக் கடந்தார்.

`டீ கொடுத்தனர்; அவர்களுக்கு எங்களை யாரென்றே தெரியவில்லை..!’ - கோலி பிறந்தநாளில் நெகிழ்ந்த அனுஷ்கா

அப்போது, டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி மயங்க் பேட்டை உயர்த்திக்காட்டினார். அப்போது அங்கிருந்த கேப்டன் கோலி, `இரட்டை சதம் அடிக்க வேண்டும்' என விரல்களை உயர்த்திக்காட்டினார். அதற்கு மயங்க், `சரி' என சைகை செய்தார். இதையடுத்து, தொடர்ந்து ரன்களைக் குவித்துவந்தார். இதற்கிடையே ரஹானே 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மயங்க் - ரஹானே கூட்டணி இந்தியாவுக்கு நல்ல ஸ்கோரை ஏற்படுத்தித் தந்தது.

மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால்
bcci

இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜா ஒத்துழைப்பளிக்க, மயங்க் வங்கதேச பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மயங்க், சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.

கோலி சொன்னது போலவே இரட்டை சதத்தை விளாசினார். டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கோலியைப் பார்த்து மயங்க் கைகளை உயர்த்தி ‘200 கேட்டீர்கள், அடித்துவிட்டேன். வேற என்ன...’ என்பது போல் சைகை காட்டினார். 'சரி, 300 அடி' என்று கோலி ரிப்ளை செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த மயங்க் அகர்வால், 243 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சஹா, ஜடேஜா இருவரும் விளையாடி வருகின்றனர்.