Published:Updated:

T20 World Cup Final: வின்டேஜ் வில்லியம்சன்; வதம் செய்த வார்னர்; நிரூபித்த ஆஸ்திரேலியா! | NZ v AUS

கோப்பைக்கும் நியூஸிலாந்துக்குமான ஏழாம் பொருத்தம் திரும்ப உயிர்பெற, நாக் அவுட் போட்டிகளில், நியூசிலாந்திடம் வீழ்ந்ததில்லை என்னும் சரித்திரத்தை மீண்டும் எழுதியுள்ளது ஆஸ்திரேலியா.

2019 ஆஷஸ் தொடருக்குப் பிந்தைய பேட்டியில், "பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் என்னை வெறுக்கிறார்கள்", என மிட்செல் மார்ஷ் கூறி இருந்தார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கான முதல் டி20 உலகக் கோப்பையையே, அதே சூப்பர் மேன்தான் வாங்கித் தந்திருக்கிறார்.

டாஸை வென்றாலே, போட்டியையும் வெல்லலாம், நான்கு மணிநேரம், நகம் கடிக்க வைக்கும் சஸ்பென்ஸுக்கு எல்லாம் என்னிடத்தில் இடமில்லை என மீண்டுமொரு முறை நிருபித்துள்ளது, அரபு மண்.

வில்லியம்சன் வின்டேஜ் நாக்:

பழைய வில்லியம்சனாக அவர் காணப்படவில்லை எனக் கிளம்பிய அத்தனை விமர்சனங்களையும் மொத்தமாக நீர்த்துப் போகச் செய்து விட்டது, வில்லியம்சனின் இந்த ஒரு இன்னிங்க்ஸ்.

எப்போதுமே ஒரே திட்டத்தோடு இறங்குவது வில்லியம்சனின் பாணி இல்லை. திட்டம் A தொடங்கி Z வரை பல்வேறு திட்டங்களைத் தன் வசம் வைத்திருப்பவர். இப்போட்டியிலும் அதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரையிறுதியில் ஆதிக்கம் செலுத்தி ஆட்டநாயகனாக விளங்கிய மிட்செல்லின் விக்கெட்டை, வெகு சீக்கிரத்திலேயே நியூஸிலாந்து பறிகொடுத்து விட, அடுத்த சில ஓவர்கள் ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் வில்லியம்சனுக்கு இருந்தது.

இதில் வில்லியம்சனுக்கு சாதகமான ஒரு விஷயமும் நடந்தேறியது. இந்த உலகக் கோப்பையில் ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது ஸ்ட்ரைக் ரேட், 120-க்கும் குறைவானதே. எனவே அவருக்கு எதிராக மேக்ஸ்வெல்லைக் கொண்டு வர ஆஸ்திரேலியத் தரப்பு யோசித்தாலும், மறுபுறம், சுழல் பந்து வீச்சாளர்களை நையப் புடைக்கும் குப்தில், அதை நீர்த்துப்போகச் செய்தார். அது வில்லியம்சன் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைக் கொடுத்து விட்டது. பிந்தைய ஓவர்களுக்காக ஸ்டாக்கில் வைக்கப்பட்ட ஸ்டார்க், 11-வது ஓவரில் வந்து சேர அங்கே இருந்துதான் வில்லியம்சனின் ஸ்ட்ரைக்ரேட் ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது. ஸ்டார்க்கின் இரண்டாவது ஸ்பெல்லுக்கு முன்பு, பின்பு என இருவேறு அவதாரங்களை வில்லியம்சன் எடுத்திருந்தார். அதற்கு முன்னதாக 19 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்து 100-க்கும் கீழே இருந்த அவரது ஸ்ட்ரைக்ரேட், அந்த ஒரு ஓவரில்தான் மளமளவென ஏற்றங்களைச் சந்தித்தது.

வில்லியம்சன் | NZ v AUS | T20 World Cup Final
வில்லியம்சன் | NZ v AUS | T20 World Cup Final

அவர் செட்டில் ஆகிவிட்டால் ஸ்பின்னர்களுக்கும் ஆபத்துதான் என்பதை மேக்ஸ்வெல்லையும் டார்கெட் செய்து அவர் அடித்த பேக் டு பேக் சிக்ஸர்கள் நிரூபித்து விட்டன. அதுவும் அந்த ஒன் ஹாண்டட் சிக்ஸர் எல்லாம் வேற லெவல். அன்ஆர்தடாக்ஸ் ஷாட்டுகளும் அவருக்கு அத்துப்படிதான் எனக் காட்டியது. 32 பந்துகளிலேயே, அரைசதத்தைக் கடந்து, டி20 இறுதிப் போட்டியில், அதிவேக அரைசதத்தை எடுத்த வீரராகவும் சாதனை நிகழ்த்தினார்.

இந்தக் கட்டத்திலேயே அவரது ஸ்ட்ரைக் ரேட் 160-ஐ எட்டி விட்டது. எனினும், ஸ்டார்க்கின் இன்னொரு ஓவரில் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என மொத்தமாக, 22 ரன்களோடு, ஸ்டார்க்கை வைத்து செய்து விட்டார். வீசிய 18 பந்துகளிலேயே, ஸ்டார்க்கை அரை சதத்தையும் கடக்க வைத்து கலங்கடித்து விட்டார் வில்லியம்சன். அந்த இரு ஸ்டார்க் ஓவர்களுக்கும் இடையே மட்டும் வில்லியம்சனின் ஸ்ட்ரைக்ரேட்டைக் கணித்தால், அது 250-ஐயும் தாண்டும்.

ஜோஸ் மாஸ்:

இத்தொடரில், பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான ஹாசில்வுட்டின் மாயம் இப்போட்டியிலும் திரும்ப நிகழ்ந்தது. கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில், நான்கு ஓவர்களில் 29 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த இறுதிப் போட்டியில், முக்கியமான தருணத்தில் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியதோடு மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். வில்லியம்சன் விக்கெட் விழாமல் இருந்திருந்தால், இன்னமும் 20 ரன்கள் கூடுதலாகச் சேர்ந்திருந்தால், மதில் மேல் பூனையாக போட்டி எந்தப் பக்கத்திலும் தாவி இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வதம் செய்த வார்னர்:

"நான் குறைத்து மதிப்பிடப்படுகிறேன்", என குறைபட்டுக் கொண்டிருந்த ஜம்பா, பந்துவீச்சில் பலங்காட்டி இருந்ததைப் போல, தன்னை உதாசீனம் செய்த சன்ரைசர்ஸுக்கும், தன்னை நிருபிப்பதைப் போன்ற தொடக்கத்தை, வார்னர் கொடுத்திருந்தார்.

கேப்டன் ஃபின்ச் விரைவில் ஆட்டமிழந்தாலும், அதன் பிறகு மார்ஷுக்குத் துணையாக நின்று இலக்கைத் துரத்தினார் வார்னர். பந்துகளையும் வீணடிக்காமல், சரியான பந்துகள் கிடைத்தபோது, பெரிய ஷாட்டுகள் ஆடி, தனது ரன் ரேட்டோடு அணியின் ரன் ரேட்டையும் சீராக வைத்திருக்க உதவினார். ஸ்லாட்டில் விழுந்த நீஷம் வீசிய பந்தை, லாங் ஆனில் சிக்ஸருக்குத் தூக்கி அரைசதத்தைக் கடந்தார். அரபு மண்ணில் குறைந்தது பத்து டி20 போட்டிகளிலாவது ஆடியுள்ள பேட்ஸ்மேன்களின் வரிசையில், இரண்டாவது சிறந்த சராசரி (50.44) இவருடையதுதான்.

மார்ஷ் - மேக்ஸ்வெல் | NZ v AUS | T20 World Cup Final
மார்ஷ் - மேக்ஸ்வெல் | NZ v AUS | T20 World Cup Final

மகுடம் சூட்டிய மார்ஷ்:

வார்னராவது ஓரளவு இரக்கத்தோடு பௌலர்களை அணுகி இருந்தார். மிட்செல் மார்ஷோ மிச்சம் மீதி இல்லாமல் அவர்களை சூறையாடி விட்டார். மில்னின் ஓவரில் சிக்ஸரோடு தனது கணக்கைத் தொடங்கியவர், அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி அழுத்தத்தை நியூசிலாந்தின் பக்கம் மாற்றினார். மில்னின் வேகத்துக்குக் கிடைத்த அதே மரியாதைதான், சான்ட்னரின் சுழலுக்கும் கிடைத்தது. தொடரின் தொடக்கத்தோடு ஒப்பிடுகையில், மைதானம் சற்றும் ஈரப்பதம் இல்லாமல் இருக்கிறது. பனிப் பொழிவும் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே நியூஸிலாந்தின் ஸ்பின் படையின் கை ஓங்க வாய்ப்புள்ளது என்றே கள நிலவரங்கள் முன்னதாகக் கூறின. ஆனால், அது எல்லாவற்றையும் பொய்யாக்கி, ஏறக்குறைய எல்லோருடைய பந்துகளிலுமே பெரிய ஷாட்டுகளை ஆடினார் மார்ஷ். வெறும் 31 பந்துகளில் வந்து சேர்ந்த அவரது அரைசதம், வெற்றியை அப்போதே ஆஸ்திரேலியாவுக்கு உறுதி செய்து விட்டது.

வார்னர் | NZ v AUS | T20 World Cup Final
வார்னர் | NZ v AUS | T20 World Cup Final

மார்ஷ் - வார்னர் இருவரது ஆட்டமும் தான், ஆஸ்திரேலியாவை அவர்களது முதல் டி20 உலகக் கோப்பையை தூக்க வைத்துள்ளது. ரன் வேட்கையோடும், வெல்ல வேண்டுமென்ற தாகத்தோடும், கோப்பையின் மேலேயே கண் வைத்து நகரும் மேட்ச் வின்னர்களைக் கொண்ட ஆஸ்திரேலியா, தோற்றால் தானே ஆச்சரியம்?!

மறுபுறம், மூன்று ஆண்டுகளில் மூன்று ஃபார்மட்டிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சர்வ சாதாரணமாக நிகழக் கூடியதில்லை. ஆனால், நியூசிலாந்து அதை நிகழ்த்தியுள்ளது.

எனினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போதே, இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்க வேண்டிய ஆஸ்திரேலியா, புள்ளிகள் குறைக்கப்பட்டதால், அம்முறை அந்த வாய்ப்பை, நியூசிலாந்திடம் பறிகொடுத்தது.

NZ v AUS | T20 World Cup Final
NZ v AUS | T20 World Cup Final
KAMRAN JEBREILI
அதற்கு ஆறுதல் தேடும் விதமாக இம்முறை, தங்களுக்கான மகுடமாகச் சூடிக் கொண்டுள்ளது. டாஸ்தான் தொடரின் நாயகனாக தொடரையே கைப்பற்றியது என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும், அதைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவும் தன்னை மறுபடி ஒருமுறை, சாம்பியனாக நிருபித்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு