Published:Updated:

IND vs IRE : இறுதிப்பந்து வரை அச்சுறுத்திய அயர்லாந்து; தொடரை வென்ற இந்தியா

IND vs IRE

அயர்லாந்தோ இங்கிலாந்தின் துணை அணி போல ஆடியது. பின்வரிசை வீரர்கள் எல்லாம் பேர்ஸ்டோவின் பாசறையில் இருந்து புறப்பட்டு வந்தது போல் ஸ்ட்ரைக் ரேட்டை ராக்கெட் ஏற்றினர். குறிப்பாக டாக்ரெல் இந்தியா போட்டியை இழக்கப் போகிறதோ என்ற பதற்றத்தை ஏற்றினார்.

IND vs IRE : இறுதிப்பந்து வரை அச்சுறுத்திய அயர்லாந்து; தொடரை வென்ற இந்தியா

அயர்லாந்தோ இங்கிலாந்தின் துணை அணி போல ஆடியது. பின்வரிசை வீரர்கள் எல்லாம் பேர்ஸ்டோவின் பாசறையில் இருந்து புறப்பட்டு வந்தது போல் ஸ்ட்ரைக் ரேட்டை ராக்கெட் ஏற்றினர். குறிப்பாக டாக்ரெல் இந்தியா போட்டியை இழக்கப் போகிறதோ என்ற பதற்றத்தை ஏற்றினார்.

Published:Updated:
IND vs IRE
ஹூடா சதத்தால் நேற்றைய போட்டியை இந்தியா வென்றாலும், தங்களது அதிரடி பேட்டிங்கினால் இதயங்களை வென்றுவிட்டது அயர்லாந்து.....
Ind vs Ire
Ind vs Ire

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் காட்டிய அதிரடிக்கு சற்றும் சளைக்காமல், அயர்லாந்து அணியும் பதிலடி கொடுக்க, 40 ஓவர்களில், 446 ரன்கள் என நான்கு மணிநேர ரன்மழையில் டப்லின் நனைந்தது. கடைசியாக இறுதி ஒவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கான வெற்றி, ரன் கணக்கிலா, விக்கெட் அடிப்படையிலா என்ற இறுமாப்புடைய கேள்விதான் ரசிகர்களிடம் முன்னதாக இருந்தது. ஆனால், எல்லைகளைத் தாண்டியும், அயர்லாந்து தன் கொடியை உயர்த்தியது.

முன்னதாக ருத்துராஜின் காயம், சாம்சனை அணிக்குள் கொண்டுவர, மூன்று விக்கெட் கீப்பர்களோடு களமிறங்கியது இந்திய அணி. முதல் இரண்டு ஓவர்களில் ரன் எடுக்கவிடாமல் அழுத்தம் தந்து இஷானின் விக்கெட்டை மூன்றாவது ஓவரிலேயே வீழ்த்தியது அயர்லாந்து. அவ்வகையில் பவர்பிளேயின் கடைசி ஓவரை விலக்கிவிட்டுப் பார்த்தால், இந்தியா சற்றே சுணக்கத்தோடே தொடங்க, 38 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. சொல்லப் போனால் பவர் பிளேவுக்கு அடுத்து வந்து ஓவர்கள்தான், 'சூப்பர் பவர்பிளே' போலக் காட்சியளித்தன.

சிறப்பாகத் தொடங்கி அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறுவது சாம்சனின் பழக்கம். ஆனால் அவருக்கு 'வாழ்வா, சாவா?' சாய்ஸைத் தந்த இப்போட்டியில் அவரிடம் நிதானமான அணுகுமுறையை தொடக்கத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் அவருக்கும் சேர்த்து ரிஸ்கை மொத்த விலையில் எடுத்துக் கொண்டிருந்தார் ஹூடா. குவித்தால் ரன்கள் போனால் ஒரு விக்கெட்தானே என்பது போலத்தான் அவரது இன்னிங்ஸ் முழுவதும் தன்னலமின்றித் தொடர்ந்தது.
Ind vs Ire
Ind vs Ire

4.3 ஓவரில் 14 ரன்களில் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார் ஹூடா. அவர் ரிவ்யூவுக்குச் செல்ல பந்து ஸ்டம்புக்கு சற்றே வெளியே பிட்ச் ஆகியிருந்தது. சென்டிமீட்டர் கணக்கில் தள்ளிச் சென்ற அப்பந்துதான் முதல் பாதியில் போட்டியை பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் அயர்லாந்திடமிருந்து எடுத்துச் சென்றது. மறுபடியும் 34 ரன்களிருந்த போதும் அவரது கேட்ச் விடப்பட்டது. அதுவரை அமைதிப்படை வீரராக சற்றே அடக்கி வாசித்த அவர் அதற்குப் பின் அதிரடிப்படை உடுப்பிற்கு மாறினார். வெறும் 27 பந்துகளில் அரைசதம் வர அவரது தனிப்பட்ட ஸ்கோரோடு சேர்ந்து அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ரோஹித்தை நினைவூட்டும் வகையில் அவரது சிக்னேச்சர் ஷாட்டான புல் ஷாட்டை அயர்லாந்து பௌலர்களின் ஷார்ட் பால்களுக்கு பரிசாகத் தந்து கொண்டிருந்தார். குட் லெந்த் நீங்கலாக வந்த எல்லா பந்துகளும் எந்த லைனில் வந்தாலும் அடிவாங்கின.

முதல் ஐந்து ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்க, 6 - 10 ஓவர்களில் 58 ரன்களை விளாசப்பட்டன. விக்கெட்டைக் காப்பாற்ற கட்டிப் போட்டிருந்த கைகளை விடுவித்து சாம்சனும், ஒரு கட்டத்துக்குப் பின் அதிரடி காட்ட 31 பந்துகளில் அரைசதம் வந்து சேர்ந்தது. 85 பந்துகளில் 176 ரன்களை 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்ரேட்டோடு அடித்தது இக்கூட்டணி. டி20-ல் இந்தியாவுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களும் இவைதான். 17-வது ஓவரில், 77 ரன்களோடு சாம்சன் விடைபெற்றதுதான் முக்கியத் திருப்புமுனை. ஏனெனில், கடைசி 4 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அயர்லாந்து அங்கிருந்துதான் ஆதிக்கம் செலுத்தியது. என்னதான் ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்தாலும் ரசிகர்கள் கவனம் முழுவதும் ஹூடா சதம் அடிக்க வேண்டுமென்பதிலேயே இருந்தது. 55 பந்துகளில் தன் முதல் டி20 சதத்தை ஹூடா நிறைவு செய்தார். சயத் முஸ்டாக் அலி தொடர், ஐபிஎல், தற்போதைய ஐயர்லாந்து தொடர் என தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் குறைவானதாகவே இருந்தாலும் அந்த ஒவ்வொரு தளத்திலும் தடம் பதிக்கிறார் ஹூடா. இறுதியில் 226 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்தது. முதல் ஐந்து மற்றும் இறுதி நான்கு ஓவர்களிலும் ஏற்பட்ட தொய்வு தவிர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவின் வெற்றி எளிதாகியிருக்கும்.

Ind vs Ire
Ind vs Ire

அயர்லாந்தால் இதனை நெருங்கக்கூட முடியாது. சுலபமான வெற்றியாகவே இது மாறும் என ரசிகர்கள் கனவு காண அதை முதல் ஓவரிலேயே சிக்ஸர் மற்றும் ஹாட்ரிக் பவுண்டரிகளோடு கலைத்தார் ஸ்டிர்லிங். அதிலும் புவ்னேஷ்வரின் ஓவரில். 34 பந்துகள்தான் ஆயுட்காலம் என்றாலும், 72 ரன்களைக் குவித்து இந்திய வீரர்களின் முதுகுத் தண்டை சில்லிடச் செய்தது ஸ்டிர்லிங் - பால்பிர்னி இருவரணி. ரவி பிஷ்னாய் அதி ஆபத்தான ஸ்டிர்லிங்கை 18 பந்துகளில் 40 ரன்களோடு அனுப்பி வைத்தார். இந்தக் கூட்டணி தகர்க்கப்படாமல் இருந்திருந்தால், கோப்பை பங்கிடப்பட வேண்டிய நிலைதான் உறுதியாக ஏற்பட்டிருக்கும்.

இந்த இருவரும், ஒட்டுமொத்தமாக 55 பந்துகளைச் சந்தித்து அதில் சரியாக 100 ரன்களைச் சேர்த்திருந்தனர். அயர்லாந்துக்கு தேவைப்பட்ட அடித்தளத்தை இவர்களது இன்னிங்ஸ்கள் ஏற்படுத்தித் தந்தது. எனினும் சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து போட்டியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்தியா முயன்று கொண்டே இருந்தது. ஆனால் பேட்ஸ்மேனுக்குச் சாதகமானதாகவே மைதானம் இருந்தது. மேலும் சின்ன கிரவுண்ட் என்பதால் பேட்டில் பட்ட அத்தனை பந்தையும் பவுண்டரி லைன் காந்தப் பொருள்களை இழுப்பது போல் இழுத்துக் கொண்டே இருந்தன. டெலானி, டக்கர் தவிர்த்து அத்தனை பேரும் சற்றும் விட்டுத் தராமல் எட்டக்கூடிய இலக்கு என்ற நம்பிக்கையோடே பயணித்தனர்.

Ind vs Ire
Ind vs Ire

ஹாரி டெக்டருடனான டாக்ரெல்லின் பார்ட்னர்ஷிப்பும் சரி, டாக்ரெல்லினுடனான மார்க்கின் பார்ட்னர்ஷிப்பும் சரி, பந்துக்கும் தேவைப்படும் ரன்களுக்கான வித்தியாசத்தை குறைத்துக் கொண்டே வந்ததோடு இந்தியர்களின் நம்பிக்கையையும் சேர்த்து கரைத்தது . இந்திய பௌலர்களைப் பொறுத்தவரை ஃபீல்டிலிருந்து மட்டுமல்ல ஃபீல்டர்களிடமிருந்து கூட முதல் ஒத்துழைப்பு வரவில்லை. அயர்லாந்து செய்ததைப் போல நிறைய ஃபீல்டிங் பாவக் கதைகளைப் பார்க்க முடிந்தது. பௌலர்களோ சரியான லைன் அண்ட் லெந்த்தில் செட் ஆக முடியாமல் திணறினர். முந்தைய பந்து குட் லெந்தில் வந்து பேட்ஸ்மேனை சிரமப்படுத்தும். அடுத்த பந்தே ஃபுல் டாஸாகி, ரன்களாக உருவெடுக்கும். முந்தைய பந்து ஸ்டம்ப் லைனில் பயமுறுத்தும் அடுத்த பந்தோ லெக் சைடில் வொய்டாகும். இப்படித்தான் இந்தியப் பந்துவீச்சு மொத்தமும் இருந்தது. அயர்லாந்து 12 உதிரிகளைக் கொடுத்திருக்க, இந்தியாவோ 20 உதிரிகளைக் கொடுத்து சொதப்பியது. புவனேஷ்வரின் வேரியஷன்கள்கூட வேலைக்காகவில்லை என்றால், ஹர்சலின் ஸ்லோ பால்கள் கூட சாதகமானதாகவில்லை. ஹர்தீக், அக்ஸர் தவிர்த்து வீசிய அத்தனை பௌலர்களது எக்கானமியும் 10-ஐ தாண்டியது.

அயர்லாந்தோ இங்கிலாந்தின் துணை அணி போல ஆடியது. பின்வரிசை வீரர்கள் எல்லாம் பேர்ஸ்டோவின் பாசறையில் இருந்து புறப்பட்டு வந்தது போல் ஸ்ட்ரைக்ரேட்டை ராக்கெட் ஏற்றினர். குறிப்பாக டாக்ரெல் இந்தியா போட்டியை இழக்கப் போகிறதோ என்ற பதற்றத்தை ஏற்றினார். கடைசி 30 பந்துகளில் 62 ரன்கள் தேவை என்ற போதே, எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால், இறுதி ஓவரில் இளம் வீரரான உம்ரான் மாலிக் 17 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தார். இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் புசித்துள்ளது. ஒரு பக்கமாக சென்று இந்தியாவுக்குச் சாதகமாக முடியும் என முன்னதாகக் கணிக்கப்பட்டிருக்க, அயர்லாந்தோ இரண்டாவது பாதியில் தனி ஊசலின் அலைவு போலக்கூட இல்லாமல் தன் பக்கமேதான் போட்டியை பல தருணங்களில் நிறுத்தி வைத்திருந்தது. 0-2 என தொடரை இழந்திருந்தாலும் அயர்லாந்துக்கு இத்தொடரில் இருந்து நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவுக்கோ கவனம் செலுத்த வேண்டிய பல தவறுகளை கண்ணில் பட வைத்திருக்கிறது.

எப்படியோ கேப்டனாக முதல் தொடரிலேயே கோப்பையை வென்று, 'பலே பாண்டியா' சொல்ல வைத்துள்ளார் ஹர்தீக் பாண்டியா!