Published:Updated:

ஹிட்மேன் ரோஹித் உள்ளே... நடராஜன் அவுட், சைனி இன்... பரபரக்கும் சிட்னி டெஸ்ட்! #AUSvIND

Ravi Shastri | Rahane | #AUSvIND
Ravi Shastri | Rahane | #AUSvIND ( Rick Rycroft )

பேட்டிங்கிற்கும் சாதகமான பிட்ச் இது. ஒரு கவர் டிரைவ்கூட அடிக்காமல் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில்தான். #AUSvIND

நாளை காலை சிட்னியில் தொடங்கப்போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. நடராஜன் ப்ளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்ப்பார் என எல்லோரும் எதிர்பார்க்க, நவ்தீப் சைனியை டிக் அடித்திருக்கிறது கேப்டன் ரஹானே - கோச் சாஸ்திரி கூட்டணி! இந்தியாவின் 299வது டெஸ்ட் வீரராக சைனி, சிட்னியில் களமிறங்க இருக்கிறார்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் சிட்னியில் இந்தியாவின் வெற்றிக்கு ரஹானேவிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், ஆஸ்திரேலியா என்ன செய்ய காத்திருக்கிறது?!

Team India | #AUSvIND
Team India | #AUSvIND
Rick Rycroft | AP

டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டிக்கு சில மாதங்களே இருப்பதால், மொத்தக் கண்களும் அதற்குரிய பட்டியலையே மொய்க்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால், இந்த அணிகள் ஆடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் அரை இறுதிப் போட்டி போன்றே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வெற்றியும் லார்ட்ஸில் நடக்கும் இறுதிப் போட்டியை நோக்கி அவர்களை நகர்த்தும் என்பதால், இதை மனதில் வைத்தே இரு அணிகளும் போட்டியை அணுகும்.

Ravindra Jadeja | #AUSvIND
Ravindra Jadeja | #AUSvIND
Rick Rycroft

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!

ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா சிட்னியில் திடீர் என்று அதிகரித்ததின் காரணமாக, மேற்கு சிட்னி மற்றும் பெரேலா சேர்ந்த மக்கள் போட்டியைப் பார்க்க வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 25 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது‌. மேலும் பார்வையாளர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரோஹித் இன்... மயாங்க் அவுட்!

மயாங்க்கா, விஹாரியா... ரோஹித்துக்கு வழிவிட்டு ஒதுங்கப்போவது யார் என்கிற கேள்விக்கு விடைகிடைத்துவிட்டது. கவாஸ்கர் உள்ளிட்ட சிலரது தேர்வாய் மயாங்க் இருந்தாரெனினும், அவர் வெளியேற்றப்பட்டு விஹாரி அணியில் தொடர்கிறார். இதனால் ரோஹித்துடன் ஷுப்மான் கில் ஓப்பனிங் இறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

Rohit Sharma | #AUSvIND
Rohit Sharma | #AUSvIND
Rick Rycroft | AP

சைனி தேர்வு!

நடராஜன், தாக்கூர் என இருவரையும் பின்னுக்குத்தள்ளி அணியில் இடம்பிடித்திருக்கிறார் நவ்தீப் சைனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில், சைனியின் பங்களிப்பு பெரிதாக இல்லையென்றாலும், போட்டிகளில், அவருடைய சிறப்பான பங்களிப்பை மனதில் கொண்டு சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது‌. தேர்வுக்கு அவர் நியாயம் கற்பிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

David Warner | #AUSvIND
David Warner | #AUSvIND
Rick Rycroft | AP

வார்னரின் வருகை!

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பெளலிங்கில் எந்தவிதக் குறைபாடும் இல்லை. பேட்டிங் மட்டுமே அவர்களுக்குப் பெரிய தலைவலியாய் இருந்து வருகிறது. முதல் போட்டியில், பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவில் மறைமுகமாகக் காணப்பட்ட குறைபாடுகள், இரண்டாவது போட்டியிலோ திரையைவிட்டு வெளிப்படையாய் வெளியே வந்தன. லாபுசேன் மற்றும் ஸ்மித் இருவரும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவற, ஓப்பனிங்கில் பர்ன்ஸும் எடுபடாமல் போனார். ஹெட்டின் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வார்னரின் வருகை தற்போது அவர்களுக்கு அசுரபலம் சேர்த்துள்ளது. அதேபோல் தொடர்ந்து சொதப்பி வந்த டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக உள்ளூர் போட்டிகளில் ஸ்டார் பிளேயராகக் கண்டறியப்பட்டுள்ள புவோஸ்கி இடம் பெற்றுள்ளார்.

ஸ்பின் டு வின்!

சிட்னி மைதானம் வேகப்பந்து, ஸ்பின் என இரண்டுக்குமே சம அளவு வாய்ப்பு கொடுக்கும். ஸ்பின்னர்களே பெரும்பாலும் மேட்ச் வின்னர்களாக இருந்திருக்கிறார்கள். ஷேன் வார்னே இங்கு அதிகபட்சமாக 64 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார். அதனால் இந்திய பேட்ஸ்மேன்களை நாதன் லயான் அதிகம் அச்சுறுத்துவரா அல்லது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அஷ்வின் அச்சுறுத்துவாரா என்கிற போட்டி பலமானதாக இருக்கும்.

பேட்டிங்கிற்கும் சாதகமான பிட்ச் இது. ஒரு கவர் டிரைவ்கூட அடிக்காமல் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில்தான்.
Ravichandran Ashwin | #AUSvIND
Ravichandran Ashwin | #AUSvIND
Rick Rycroft | AP

இந்திய அணி சிட்னியில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு டெஸ்ட்டில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. அதுவும் 42 ஆண்டுகளுக்கு முன்பு. அதனால் ரஹானே தலைமையிலான அணி இந்த டெஸ்ட்டில் வென்றால் அது வரலாற்று வெற்றியாக இருக்கும்.

இந்தப் போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடர் சமநிலையில் முடிந்தாலும், பார்டர் கவாஸ்கர் டிராஃபியை இந்தியா தக்கவைத்துகொள்ளும். மறுபுறம் ஆஸ்திரேலியாவோ சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை தொடரை இழக்க விரும்பாது என்பதால் கடும்போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் எழுச்சிக்காகக் காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு