Published:Updated:

மார்னஸ் லாபுஷேன்... டெஸ்ட் அரங்கை அதிரவைக்கும் குட்டி ஸ்டீவ் ஸ்மித்!

Marnus Labuschagne
Marnus Labuschagne ( AP )

2019-ம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாமோர்கன் கவுன்டி கிரிக்கெட் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் லாபுஷேன். கவுன்டி போட்டிகளில் சிறப்பாக ஆடி 3 சதங்களை விளாசி, இந்த ஆண்டு 1000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கவுன்டி பிளேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

2019-ம் ஆண்டின் ஆரம்பத்தில், டெஸ்ட் தரவரிசையில் 110-வது இடத்தில் இருந்த ஒருவர், வருடம் முடியும்போது 4-வது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். மார்னஸ் லாபுஷேன் - ஆஸ்திரேலிய அணியின் குட்டி ஸ்டீவ் ஸ்மித்!

ஆகஸ்ட் மாதம், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாம் ஆஷஸ் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம். தொடர்ந்து பவுன்சர்களாக வீசிக்கொண்டிருந்தார், ஜோஃப்ரா ஆச்சர். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அவரது பந்தை எதிர்த்து ஆடிக்கொண்டிருந்தார், ஸ்டீவ் ஸ்மித். முதலில், ஒரு பந்தை ஸ்மித்தின் முழங்கைக்கு மேல் வீசினார் ஆர்ச்சர். அடி வாங்கிய ஸ்மித், அப்போதே சற்று தடுமாறினாலும் தொடர்ந்து ஆடினார். 80 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தபோது, மீண்டும் ஒரு பவுன்சரை வீசினார் ஆர்ச்சர். இம்முறை, ஸ்மித்தின் கழுத்துப் பகுதியைப் பதம்பார்த்தது அந்தப் பந்து. நிலைதடுமாறி கீழே விழுந்தார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்.

ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார், ஸ்மித். திரும்ப பில்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக `கன்கஷன்' விதிப்படி மாற்றுவீரராக ஆடவந்தார், மார்னஸ் லாபுஷேன். அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை, ஆஸ்திரேலியாவின் ஒன்டவுன் பொசிஷனை ஆளப்போகும் வீரர் இவர்தான் என்று. ரிக்கி பான்டிங்கிற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்டவுன் பொசிஷனுக்கு 16 வீரர்களை முயற்சி செய்தும் சரியான ஆள் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு, அமுத சுரபி போல் கிடைத்துள்ளார், லாபுஷேன்.

Marnus Labuschagne
Marnus Labuschagne
AP

டெஸ்ட் அரங்கில், வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு இவரது வருகை பெரும் பலம் சேர்த்துள்ளது. இந்த வருடம் 11 டெஸ்ட்டில் விளையாடி, 7 அரைசதம், 3 சதம் உள்பட 1104 ரன்களைக் குவித்து (சராசரி : 65) மிரட்டல் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்திய அணியில் புஜாராவும் கோலியும் ஆடுவதைப்போல, ஆஸ்திரேலிய அணிக்கு, மூன்று மற்றும் நான்காம் பேட்டிங் ஆர்டர்களில் வலு சேர்த்துக்கொண்டிருக்கிறது ஸ்மித்-லாபுஷேன் ஜோடி. ஆஸ்திரேலிய அணிக்கு குட்டி ஸ்மித்தாகவே உருவெடுத்திருக்கார், மார்னஸ் லாபுஷேன்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த மார்னஸ் லாபுஷேன், தந்தையின் பணி நிமித்தம், தன் 10-வது வயதில் ஆஸ்திரேலியாவில் குடிபுகுகிறார். குயின்ஸ்லாந்து மாநில அணிக்காக அண்டர்-12 போட்டிகளில் ஆடத் தொடங்கியவர், படிப்படியாக அண்டர் - 15,17,19 போட்டிகளில் ஆடினார். தன்னுடைய கன்சிஸ்டெண்ட் பர்ஃபாமன்ஸ் காரணமாக 2014/15 சீசனில் ஷெஃபில்ட் ஷீல்ட் (இந்திய ரஞ்சி போட்டிகள் மாதிரி) போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

Marnus Labuschagne
Marnus Labuschagne
AP

அந்த வருடத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டியில், சப்ஸ்டியூட் ஃபீல்டராகக் களமிறங்கினார். வருன் ஆரோன் அடித்த ஒரு ஷாட்டை, மிகவும் கஷ்டமான லோ கேட்சாகப் பிடித்து அசத்தியிருப்பார். அதற்குப் பிறகு ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தவர், 2018 சீசனில் 795 ரன்கள் அடிக்க, அந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.

மார்னஸ் லாபுஷேனின் பயிற்சியாளர் டி கோஸ்டா, முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்குப் பயிற்சியளித்தவர். ஆஸ்திரேலியா போன்ற வேகமான ஆடுகளங்களில் ஆடுவதற்கும் ஆசியாவிலிருக்கும் ஸ்பின்னுக்குச் சாதகமான ஆடுகளங்களில் ஆடுவதற்கும் பயிற்சி அளிப்பதில் சிறந்தவர். இவரிடம் பயிற்சிபெற்ற லாபுஷேன், இரண்டு வகையான ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடத்தொடங்கினார்.

Marnus Labuschagne
Marnus Labuschagne
AP

2019-ம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாமோர்கன் கவுன்டி கிரிக்கெட் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் லாபுஷேன். கவுன்டி போட்டிகளில் சிறப்பாக ஆடி 3 சதங்களை விளாசி, இந்த ஆண்டு 1000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கவுன்டி பிளேயர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் விளைவாக, ஆஷஸ் தொடரில் ஆடத் தேர்வுசெய்யப்பட்டார். 2-வது டெஸ்ட்டில் ஸ்மித்துக்கு அடிபட, மாற்றுவீரராக ஆட வந்தார். ஏற்கெனவே, இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆடியிருந்ததால், அந்த அனுபவம் நன்றாகக் கை கொடுத்தது. ஆர்ச்சர், பிராட் , வோக்ஸ் போன்ற பௌலர்களை எளிதாகச் சமாளித்து, 4 அரை சதங்களுடன் 353 ரன்கள் குவித்து ஆஷஸை வெல்ல உதவியிருப்பார்.

பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியா வர, அவர்களுக்கெதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 185 மற்றும் 162 ரன்கள் அடித்து அசத்தினார். `யார் இந்த லாபுஷேன்' என்று மொத்த உலகமும் உற்றுநோக்கத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சில் நேர்த்தியாக ஆடும் திறமை, சுழலை சாதுர்யமாக ஆடும் லாகவம் என அசத்தினார். பாகிஸ்தான் அணி இளம் பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்தாலும், இவரது ஆட்டம் எப்பேர்ப்பட்ட பௌலர்களையும் சமாளிக்க முடியும் என்று நினைக்கவைத்தது.

Marnus Labuschagne
Marnus Labuschagne
AP
ஸ்மித் எனும் ராஜபோதை... அவமானத்தால் அழுதவன் மீண்டெழுந்த கதை!

அதை நிரூபிக்கும் வகையில் இருந்தது, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இவர் ஆடிய ஆட்டம். இரண்டு இன்னிங்ஸ்களிலும் 143 மற்றும் 50 ரன்கள் என அடித்து, இந்த ஆண்டின் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். ஒருசில சதங்கள் அடித்தவுடன், கவனம் சிதறும் வீரர் போல் அல்லாமல், நிலைத்து நின்று ஆடி, பெரிய ஸ்கோர்கள் எடுக்கும் பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறார்.

நடப்பு ஆண்டில், 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1104 ரன்களை அடித்து, டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா தனது கரத்தை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் பழைய ஆஸ்திரேலிய அணியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. லாபுஷேன் போன்ற வீரர்களின் வருகை, உலக அரங்கில் அவர்களின் பலத்தை அதிகரித்துள்ளது. அவரது இந்த அசத்தல் ஆட்டத்தால், இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளை உடையில் செலுத்திய ஆதிக்கத்தை, மஞ்சள் உடையிலும் செலுத்தக் காத்திருக்கிறார், இந்த குட்டி ஸ்மித்!

அடுத்த கட்டுரைக்கு