நடிகையும் பிட்னஸ் ஆர்வலருமான மந்திரா பேடி, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தன்னிடம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் தொடரில் போட்டி தொடங்குவதற்கு முன் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய மந்திரா, "விளையாட்டு வீரர்களிடம் கேள்வி கேட்கும் போது நிறைய பேர் 'இவள் என்ன கேட்கிறாள்' என்பது போலவே என்னைப் பாவிப்பார்கள்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். பல நேரங்களில் கேள்விக்கும் அவர்கள் தருகிற பதிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார், மந்திரா பேடி.

கிரிக்கெட் தொடர்களில் கமென்டரி செய்வது, தொகுத்து வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்ய ஆரம்பித்த முதல் பெண்களில் ஒருவர், மந்திரா பேடி. 2003 மற்றும் 2007 ஆண்டுகளில் ICC கிரிக்கெட் உலக கோப்பைத் தொடரை தொகுத்து வழங்கியதில் இவர் பணி தொடங்கியது. 2004 மற்றும் 2006 சாம்பியன் கோப்பையில் தொடர் தொகுப்பாளராக பணியாற்றினார். ஐபிஎல் சீசன் 2 நிகழ்வை சோனி மேக்ஸ் தொலைக்காட்சிக்காகவும் ITV-க்காக ஐபிஎல் சீசன் 3-யையும் தொகுத்து வழங்கினார். இவை மட்டுமில்லாது நிறைய படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் மந்திரா, "நான் கிரிக்கெட்டைத் தொகுத்து வழங்க ஆரம்பித்ததை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிச்சயமாக பேனலில் உள்ளவர்கள். முன்னாள் கிரிக்கெட்டர்கள் பலருக்கு இப்போது நான் நண்பர், ஆனால் முன்பு அவர்களே நான் வருவதை விரும்பவில்லை. ஒரு பெண் சேலை அணிந்து கொன்டு கிரிக்கெட் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை. யாருமே என்ன பேச வேண்டும் என்பதையோ, கேள்விகளையோ எனக்குத் தரவில்லை. கிரிக்கெட்டின் அடிப்படைகள் பற்றியோ அதன் நுட்பங்கள் பற்றியோ தெரியாத சாதாரண மக்களுக்கு நான் தொகுத்து வழங்க அங்கிருந்தேன். எனக்கு அப்போதைக்கு என்ன கேள்வி தோன்றியதோ அதைக் கேட்பேன்.

எனக்கு அந்தச் சுதந்திரம் இருந்தது. ஆனால், 'இவள் என்ன கேள்வி கேட்கிறாள்' என என்னை விளையாட்டு வீரர்கள் வெறித்துப் பார்த்தனர். எதற்கு இதை கேட்கிறாள் என்பது போல கிரிக்கெட்டர்கள் பார்ப்பார்கள். அவர்களுக்குத் தோன்றியதைப் பதிலாகச் சொல்வார்கள். என்னை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. பல நேரங்களில் அவர்களின் பதில்கள், என் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத்தாக இருக்கும், அது என்னை அச்சுறுத்துவதாகவும் இருக்கும். சோனி டிவி, என்னை 150 - 200 பெண்களில் இருந்து தேர்ந்தெடுத்தார்கள். 'நாங்கள் உங்களைக் காரணத்தோடே தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இங்கு இருப்பதற்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள்' என எனக்கு துணையாக நின்றார்கள்" என்று பேட்டி அளித்துள்ளார்.
தன்னுடைய நினைவுகள், அனுபவங்கள் ஆகியவற்றை 'Happy for No Reason' என்கிற நூலாக எழுதியுள்ளார் மந்திரா.