கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையையும் இந்தக் கொரோனா தாக்கம் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். உடற்பயிற்சி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடல், கொரோனா தாக்கம் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வது என ஊரடங்கு நாள்களில் விளையாட்டு பிரபலங்கள் இப்படியான செயல்களின் மூலம் தங்களது பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுவரை ரசிகர்களின் முன்னிலையில் அந்தக் கூச்சலுடன் விளையாடி வந்த வீரர்களுக்கு காலி மைதானத்தில் நடக்கும் போட்டிகளின்போது எப்படியான மனநிலை இருக்கும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், ``இப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்துவது சாத்தியம்தான். இது கண்டிப்பாக நடக்கும். வீரர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஏனெனில், நாங்கள் எல்லாம் ஆக்ரோஷமாக, உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

நல்ல நோக்கத்தோடுதான் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே ஓர் அற்புதமான தொடர்பு இருக்கிறது. போட்டிகளின்போது ஏற்படக்கூடிய பதற்றம் வீரர்களையும் கடந்து ரசிகர்களையும் ஆட்கொள்ளும். அந்த மைதானம் முழுவதும் அது பரவி காணப்படும். அந்த உணர்வுகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்.
இவையெல்லாம் இல்லாமலும் போட்டி நடைபெறும். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடும்போது அந்த மாயஜாலங்கள் நடக்காது. அந்த உணர்வுகள் என்ன செய்தாலும் கிடைக்காது” எனக் கோலி கூறியுள்ளார்

காலி மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக ரோஹித் ஷர்மா , ``காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது விசித்திரமாக இருக்கும். ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் யாரும் என்னைப் பார்க்காதபோது நான் எப்படி கிரிக்கெட் விளையாடினேன் என்பதை நான் சிந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்த மைதானங்களில் விளையாடும் ஆடம்பரம் எங்களிடம் இல்லை. வாழ்க்கை மீண்டும் அந்தக் காலகட்டத்துக்கு திரும்பும் என நான் நினைக்கிறேன். கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம். மக்கள் எங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.