மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சச்சின் சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மதுரை மக்கள் சச்சின் சிவாவை வாழ்த்தி வரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வாழ்த்தி உற்சாகப்படுத்தியுள்ளார்.
சச்சின் சிவா, தமிழக அணியில் விளையாடி, இந்திய அணியில் இடம்பெற்றுப் பல தடைகளைக் கடந்து தன் திறமையால் இந்த இடத்தை அடைந்துள்ளார்.

அதேநேரம் மாற்றுத் திறனாளிகளின் கிரிக்கெட்டுக்கான ஆதரவு அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் குறைவாகவே உள்ளதாக விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வாழ்த்துக் கூறிவிட்டு, சச்சின் சிவாவிடம் பேசினோம், "என் பெற்றோருக்குப் பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் வீரசோழன். இப்ப மதுரை அனுப்பானடியில் இருக்கிறோம். தியாகராஜர் மாடல் பள்ளியிலும், சௌராஷ்டிரா பள்ளியிலும் படித்து வக்போர்ட் கல்லூரியில் டிகிரி படித்துக்கொண்டிருக்கும்போது கிரிக்கெட் மேல் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மாவட்ட, மாநில அளவில் விளையாடி தற்போது இந்திய அணிக்குத் தலைமை தாங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தனிப்பட்ட முறையில் 115 ரன்கள் அவுட் ஆகாமல் விளையாடி தேசிய அளவில் சாதனை செய்தேன். சென்னை அணியின் கேப்டனாக இருந்தபோது துபாயில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள கமல்ஹாசன் ஸ்பான்சர் செய்து உறுதுணையாக இருந்தார்.
இந்திய அளவிலான அணியில் அப்போது நான் ஒருவன்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். இந்த நிலையில்தான் இந்த கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருபக்கம் இந்த பொறுப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப்போன்றவர்கள் பயிற்சி எடுப்பதிலிருந்து போட்டிகளுக்குச் சென்று விட்டு வரும் வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு யாரும் எந்தவித உதவிகளும் செய்வது கிடையாது.

நார்மலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் எங்களது விளையாட்டுக்கு ஆதரவு தராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
எங்கள் விளையாட்டை உலகத் தரத்திற்கு ஒளிபரப்பு செய்யத் தொலைக்காட்சிகள் யாரும் முன்வரவில்லை. ஒரு போட்டிக்குச் செல்ல, செய்துவரும் வேலைகளை விட்டுவிட்டுச் செல்வதால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறோம். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் கஷ்டப்பட்டு வருகிறோம்.
எங்களுக்கான அங்கீகாரம் என்பது இல்லாமல் இருந்துவருகிறது. நார்மல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கக்கூடிய சலுகைகளை எங்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
மாற்றத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போர்டு உள்ளது. அதன் மூலம் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால், எங்கள் அணிக்கென்று தனி நிதி இருப்பு கிடையாது. சிலர் மட்டும்தான் நிதி அளிப்பார்கள்.
மதுரையிலிருந்தபடி நான் விளையாடத் தொடங்கியபோது அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் விளையாடக்கூடிய குழுவிலுள்ள எல்லா வீரர்களும் என்னை பல்வேறு போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சீமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அழைத்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஐந்து வருடம் நம் நாட்டுக்காக விளையாடிவிட்டு, அதில் நன்றாகக் கற்றுக்கொண்டு விரைவில் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி மையம் ஆரம்பித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் எதிர்கால ஆசை" என்றார்.
உலகப்புகழ் பெற வாழ்த்துக்கள் சச்சின் சிவா!