Published:Updated:

வாசிம் அக்ரம் : வேகப்பந்து வீச்சுக்கு இலக்கணம் வகுத்தவன்... பேட்ஸ்மேன்களின் தலைக்கனம் தகர்த்தவன்!

வாசிம் அக்ரம்
News
வாசிம் அக்ரம்

அன்றைய தினம் பேட்ஸ்மேன் எங்கே நிற்கிறார், ஃபிரன்ட் ஃபுட், பேக் ஃபுட் இரண்டில் எதை அதிகம் பயன்படுத்துகிறார், அவரது ரிஸ்ட் வொர்க் எப்படி இருக்கிறது, கைகளும் கண்களும் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன எனப் பல விஷயங்களை கவனித்துவிடுவார்.

பேட்ஸ்மேன்களுக்கு, இன் ஸ்விங்கால் பல இன்னல்களைக் கொடுத்தவர், அவுட் ஸ்விங்கால் அலற வைத்தவர், ரிவர்ஸ் ஸ்விங்கால் பலரை ரிட்டையர் ஆக வைத்தவர், இந்த ஸ்விங் சுல்தான்.

இடது கை வேகப்பந்து வீச்சு... ஓவரின் ஆறு பந்துகளையும், ஆறு தோட்டாக்களாய், மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீசும் மாயவித்தை; பாரம்பரிய இன்ஸ்விங்களையும், அவுட்ஸ்விங்குகளையும், உருமாறிய ஸ்விங்களான, ரிவர்ஸ் ஸ்விங்களையும், ஆயுதங்களாய் பயன்படுத்தி, விக்கெட் எடுக்கும் வேக வித்தகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், டிரன்ட் போல்ட் என சமீபகால சமபலங்கள், சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களாக விளங்கினாலும், இவர்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து புரவியாகப் புறப்பட்டுவந்த ஒருவர், இதற்குமுன்னமும் இல்லை, இதற்குப் பின்னமும் இல்லை. இடது கை வேகப்பந்து வீச்சின் என்சைக்ளோபீடியாவாக, எல்லா கரைகளையும் தொட்டு, காலக் கண்ணாடியில், தனது பிம்பத்தை அழியாது நிலைநிறுத்திச் சென்றுள்ளார். அவர்தான் 'வாசிம் அக்ரம் - கிங் ஆஃப் ஸ்விங்'.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

80-களின் தொடக்கத்தில், பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங்கால், உலகை மிரட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அணிக்குள் காலடியெடுத்து வைத்தார் அக்ரம். வேகமாக வீசப்படும் பந்துகள் மட்டுமே, விக்கெட் எடுக்க போதுமானவை என்ற கருத்து, மனங்களில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்ட காலத்தில்தான், அவர் அறிமுகமானார். ஆயினும், அவரது பாணி சற்றே வித்தியாசமானது. வேகம் மட்டுமின்றி, சரியான லைன், லென்த்தோடு, வீசப்பட்ட பந்துகளில் அம்பின் வேகமும் இருந்தது, கத்திமுனையின் கூர்மையான துல்லியமும் இருந்தது.

இன்றைய நாட்களில், ஒரு போட்டியில் விளையாடும் முன்னரே, வீடியோ அனலிஸ்டுகள், எதிரணி பேட்ஸ்மேன்களின் 'வீக் ஸ்பாட்' என்ன, எப்படிப் பந்துவீசினால், அவர்களது விக்கெட்டை வீழ்த்தலாம் போன்ற அடிப்படைகளை, ஒரு பௌலருக்கு அள்ளித்தந்து விடுகின்றனர். அன்றைய தேதியில், அனாலிஸ்ட்டுகள் இல்லையென்றாலும், வீடியோக்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் பார்த்துவிட்டு, அதற்கேற்றாற்போல், திட்டங்களை வகுத்துச் செல்லும் பௌலர்கள்தான் அக்காலத்தில் அதிகம். அக்ரமும் இதையெல்லாம் செய்தார்தான், பிட்சின் இயல்பை முன்னமே கணித்துச் செயல்படுவார்தான் என்றாலும், நிறைய ஹோம்வொர்க் செய்யும் பௌலரல்ல அவர்.

களத்திலிறங்கி, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் உற்றுநோக்கி, அன்றைய தினம் பேட்ஸ்மேன் எங்கே நிற்கிறார், ஃபிரன்ட் ஃபுட், பேக் ஃபுட் இரண்டில் எதை அதிகம் பயன்படுத்துகிறார், அவரது ரிஸ்ட் வொர்க் எப்படி இருக்கிறது, கைகளும் கண்களும் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன எனப் பல விஷயங்களை கவனித்துவிடுவார். அதற்கேற்றாற்போல், ஆன் ஃபீல்டில் திட்டங்களை வகுத்து, கச்சிதமாக அதைச் செய்து முடிப்பதுதான், அக்ரமின் பாணி. இதற்காக இவர் எடுத்துக் கொள்ளும் நேரம், ரன் அப்புக்கான நேரம் மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வளவுக்கும் அக்தரைப்போல, பார்வையாளர்களுக்குப் பக்கத்திலிருந்தெல்லாம் ஓடிவர மாட்டார் அக்ரம். ஷார்ட் ரன்அப்பும், வேகமான ஆர்ம் ஆக்ஷனும்தான் அவருடையது. பேட்ஸ்மேனிடமிருந்து விலகி நடந்து சென்று, திரும்ப ஓட ஆரம்பிக்கும் அந்தக் குறுகிய காலத்திற்குள், அவரது மனதில் அடுத்த பந்துக்கான திட்டமிடல் முடிந்துவிடும். யார்க்கரா அல்லது பவுன்சரா இல்லை ஸ்விங்களா என எல்லாமே முடிவாகி விடும். சிலநேரம், ஒட்டுமொத்த ஓவருக்குமான திட்டமிடலாகக் கூட, அது இருக்கும்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

1992-ம் வருட உலகக்கோப்பையை, பாகிஸ்தானுக்கு அவர் பெற்றுத்தந்ததும் கூட, அப்படி ஒரு ஓவரில்தான். இயான் போத்தமின் விக்கெட்டினை முதலில் எடுத்ததோடு மட்டுமின்றி, ஆலன் லாம்ப் மற்றும் கிறிஸ் லூயிஸின் விக்கெட்டுகளையும் அவர் எடுத்துத்தந்த அந்த ஒற்றை ஓவர் சொல்லும், எத்தகைய கிரிக்கெட் மூளை அக்ரமுடையதென்பதை. இன்றைய தினம் வரை, அந்தப் பந்துகளை இப்படி ஆடியிருக்கலாம், அப்படி ஆடியிருக்கலாம் என்ற டீகோடிங் நடைபெற்று வந்தாலும், அது எப்படியென யாராலும், இறுதிசெய்து கூற முடியவில்லை.

அவ்வாறு, பேட்ஸ்மேனுக்குக் கொஞ்சமும் வாய்ப்புக் கொடுக்காமல் பந்துவீசிய பௌலர்களில், அக்ரம் முக்கியமானவர். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசுவது அவரது இன்னொரு டெக்னிக். இது எப்படிப்பட்ட சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவர்களைச் சற்றேனும் அசைத்துப் பார்க்கும்.

அக்ரம் பயன்படுத்திய இன்னொரு தந்திரம், அவரது கையிலிருந்து விடுபடும்வரை, பேட்ஸ்மேன்களால் பார்க்க முடியாதவாறு, பந்துகளை, மறைத்துக்கொண்டு வீசுவது. இது தேய்ந்த பந்துகளை வீசும் பிந்தைய ஓவர்களில், அக்ரமுக்கு, மிகவும் பயனுடையதாக இருந்தது. இதனால், தேய்ந்தபக்கம், தன் பக்கம் இருக்கிறது என்று கவனித்து, ரிவர்ஸ் ஸ்விங்கை எதிர்பார்த்து, பேட்ஸ்மேன் முன்கூட்டியே தயாராகவும் முடியாது, தொடக்க ஓவர்களில், பந்தின் தையல் பகுதி எப்பக்கம் இருப்பதென்பதைப் பார்த்தே, இன்ஸ்விங் வரப்போகிறதா அல்லது அவுட்ஸ்விங்கா என யூகித்தறியவும் முடியாது. இது பேட்ஸ்மேனை ஒரு பதற்றத்திலும் குழப்பத்திலுமே வைத்துக்கொள்ளும். அதோடு பந்துவரும் வேகத்திற்கு, மைக்ரோ விநாடிக்குள் அது பேட்டை அடைவதால், அது எத்தகைய பந்து என்பதைப் புரிந்து ஆடவும் முடியாமல்போக, விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பேட்ஸ்மேன்கள் வெளியேறுவார்கள்.

இந்த காரணங்களுக்காகவே, மத்திய ஓவர்களில் விக்கெட் விழாமல் இருக்கும் தருணத்தில், பந்து அக்ரமின் கைகளுக்குப் போகும். பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சமும் மூச்சுவிட கால இடைவேளையின்றி, ஆறு பந்துகளையும் ஆறு வகையில் வீசுவார். கால்களைக் குறிபார்க்கும் யார்க்கரை எதிர்பார்த்தால், பவுன்சர்கள் வந்து, தலையைத் தாக்கும். பவுன்சரை எதிர்பார்த்தால் ஸ்லோ பால்கள் வந்து செல்லமாக 'நலம்தானா?!' கேட்டுச் செல்லும். ஸ்லோபால் வரும் என்று நினைக்கும் நேரத்தில், பிளாக் ஹோலை வந்து பந்து பதம்பார்த்து, நிலைதடுமாறச் செய்யும். வியக்கச் செய்யும் வேரியேஷன்களோடு, பேட்ஸ்மேனை அச்சுறுத்திக் கொண்டே இருந்ததுதான், அக்ரமின் ப்ளஸ் பாயின்ட்.

பின்னாளில், வக்கார் யூனுஸோடு சேர்ந்து ஸ்விங்கால், உலக கிரிக்கெட்டையே உலுக்கினார் அக்ரம். டொமஸ்டிக் கிரிக்கெட் ஆடாமலே, டபுள் ப்ரமோஷனில் அணிக்குள் வந்திருந்தாலும், அனுபவ அறிவு அவருக்குக் கிடைக்காமல் போகவில்லை. இம்ரான் கானின் பட்டறையில், நேரடியாகப் பட்டை தீட்டப்பட்ட அக்ரமுக்கு, அவரின் ஆயுதமான ஸ்விங்களில் கைதேற இரண்டு மூன்று மாதங்கள்தான் ஆகின. இம்ரான் கானும், முடாசர் நாசரும்தான் இக்கலையில், இவரது ஆசான்கள்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

ஆரம்பகாலத்தில், `வேகமே துணை' என வீசிக்கொண்டிருந்தவரின் பந்துவீச்சின் வேகம், உண்மையில் வருடங்கள் ஓடஓட, 99 உலகக்கோப்பைக்குப்பின் குறைந்தது. ஆனால், ஸ்கில்ஃபுல் பௌலிங் எனச் சொல்லுமளவிற்கு டெக்னிக்கலாக பந்துவீச தொடங்கினார் அக்ரம். ஸ்லோ பால்களை அவர் வீச கற்றுக் கொண்டதே, 1991-க்கு பிறகுதான். அதேபோல், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களைக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இன்னொரு கட்டத்திற்கு வேகப்பந்து வீச்சை எடுத்துச் சென்றார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்ததும், அவரது வெற்றிக்குக் காரணம்.

இவையெல்லாம்தான், ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸையே, தனக்குப் பந்துவீசிய பௌலர்களிலேயே, மிக அபாயகரமானவராக, அக்ரமைக் குறிப்பிட வைத்தது. "நல்லவேளை, எனது கரியரின் இறுதி ஆண்டுகளில், அவர் வந்தார்" என்று சொல்லியிருந்தார் ரிச்சர்ட்ஸ்.

பேட்டிங் செய்யவே பிறந்த அவரே அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால், மற்ற பேட்ஸ்மேன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சச்சின், டிராவிட் தொடங்கி லாரா, பான்ட்டிங் வரை பலரும் இக்கருத்தைச் சொல்லியிருக்கின்றனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில், இவரது பவுன்சர்களே போதும் அச்சுறுத்த. ஃபிளாட் பிட்ச் என்றாலும் கூட, விக்கெட் கிடைக்குமென்ற கியாரன்ட்டியை ஒருவருக்குக் கொடுக்க முடியும் என்றால், அது அக்ரம்தான்.

அதனால்தான், தன்னாடோ, அயல்நாடோ, டெஸ்டோ, ஒருநாள் போட்டியோ, எல்லாவற்றிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. ஒருநாள் போட்டிகளில், 502 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் வாசிம் அக்ரம், டெஸ்ட் போட்டிகளில், 414 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இரண்டு ஃபார்மேட்டிலும் சேர்த்து, 31 ஐந்து விக்கெட் ஹால்களும், 5 பத்து விக்கெட் ஹால்களும் இதில் அடங்கும்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

தனது கரியரில், டெஸ்ட்டில் இரண்டு, ஒரேநாள் போட்டிகளில் இரண்டு என நான்கு ஹாட்ரிக்களை எடுத்துள்ளார் அக்ரம். அதில் எடுக்கப்பட்டுள்ள 12 விக்கெட்டுகளில், 10 விக்கெட்டுகள் bowled என்பதுதான் கூடுதல் சிறப்பு. பந்தை மறைத்து வைத்துப் போடும் வித்தையின் மூலம், பல விக்கெட்டுகளை அள்ளிக் குவித்தவர்.

டெஸ்ட்டில், அக்ரம் மிகச்சிறந்த ஸ்பெல் என்றால், நியூஸிலாந்தில் வைத்தே நியூஸிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தானை அவர் இன்னிங்ஸ் வெற்றி பெறவைத்த 94-ம் ஆண்டு நடந்த போட்டிதான். அந்தப்போட்டியில் மட்டும், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருந்தார் அக்ரம்.

பேட்டிங்கிலும் சில போட்டிகளில், பெரிய பங்களிப்பை பாகிஸ்தானுக்காக அளித்திருந்தார் அக்ரம். குறிப்பாக, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், அவர் அடித்த இரட்டை சதம் (257 ரன்கள்) அவரது பேட்டிங் திறமைக்கு இன்றளவும் சான்றாக உள்ளது. குறிப்பாக, ஸ்பின் பௌலிங்கை இலகுவாக எதிர்கொள்வார் அக்ரம்.

கேப்டனாகவும், இம்ரான்கானுக்கு அடுத்தபடியாக நிறைய ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்குத் தலைமையேற்ற பெருமை, அக்ரமைச் சாரும். அதிலும், 61.46 சதவிகித வெற்றி பெற்று, பெருமை சேர்த்திருந்தார். இவ்வளவுக்கும் பலமுறை, அக்ரமை, அணியின் கேப்டனாக்குவது, பின் நீக்குவது என கண்ணாமூச்சி ஆடியது கிரிக்கெட் வாரியம். எனினும் பதவியிலிருக்கும் சமயங்களில், தனது முழுமையான திறமையை அவர் காட்டியிருந்தார்.

"பந்துகளை ஸ்விங் செய்யக்கற்றுக் கொள்ளுங்கள், அதுவே ரெட்பால் கிரிக்கெட்டில், அதுவும், வெளிநாடுகளில் விளையாடும் சமயங்களில், உங்களை அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச்செல்லும். ஸ்விங் செய்ய பழகிவிட்டு, வேகத்தையும் அதிகரித்துவிட்டால், அற்புதமான லெஃப்ட் ஆர்ம் பௌலராக நீங்கள் உருவெடுக்கலாம்" என அதற்கான புது இலக்கணங்களை எழுதியுள்ளார். கிரிக்கெட் இருக்கும்வரை வாசிம் அக்ரமின் பெளலிங்தான் இளம்தலைமுறை பெளலர்களுக்குப் பாடமாக இருக்கும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் வாசிம் அக்ரம்!