Published:Updated:

கறை படியாத கரம்; பாகிஸ்தான் போர்டுக்குப் பணிந்திடாத வீரம் - `தி புரொபசர்' முகமது ஹஃபீஸ் சாதனைகள்!

முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez ( AP )

'Money Heist' வருவதற்கு முன்னதாகவே 'The Professor' என்ற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்தவர் ஹஃபீஸ். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டோடு பலமுறை மோத வேண்டி இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. 'The Professor' என்ற பெயருக்கான காரணமும் இதுதான்.

கறை படியாத கரம்; பாகிஸ்தான் போர்டுக்குப் பணிந்திடாத வீரம் - `தி புரொபசர்' முகமது ஹஃபீஸ் சாதனைகள்!

'Money Heist' வருவதற்கு முன்னதாகவே 'The Professor' என்ற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்தவர் ஹஃபீஸ். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டோடு பலமுறை மோத வேண்டி இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. 'The Professor' என்ற பெயருக்கான காரணமும் இதுதான்.

Published:Updated:
முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez ( AP )
குழப்ப முடிச்சுகளாலும், இடியாப்பச் சிக்கல்களாலும் நிறைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகம். அங்கே கேப்டன்களே பந்தாடப்படுவார்கள் என்றால், வீரர்களின் கதி எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய ஓர் இடத்தில், ஒரு வீரர் 18 ஆண்டுகள் கோலோச்சி இருக்கிறார் என்பதே சொல்லும் முகமது ஹஃபீஸ் எத்தகைய ஒரு வீரர் என்பதனை!

ஆம்! ஹஃபீஸின் சாதனை யாத்திரை, சாமான்யமானதல்ல...

எல்லா ஃபார்மட்டுக்கும் தகுந்தவராக, தன்னைத் தகவமைத்துக் கொண்டது, பௌலிங் ஆக்ஷன் ஐசிசியால் தடை செய்யப்பட... அதிலிருந்து மீண்டு வந்தது, சக வீரர்களுடனான ஆரோக்கியமான, தொழில்முறை போட்டிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடனான உரசல்கள் என பல சவால்களை உள்ளடக்கியதுதான் அது.

இப்பயணத்தில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 12,000-க்கும் அதிகமான ரன்களையும், 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளையும், அவரது பேட்டும், பந்தும் இணைந்து வாரிக் குவித்துள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இரு மைல்கற்களிலுமே கொடியேற்றிய ஒரே பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹஃபீஸ்தான்.

முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவுக்கும் வாசிம் அக்ரம், இன்சமாம், சையத் அன்வர், அஃப்ரிடி அளவிற்குப் பெரிதாக அவர் கொண்டாடப்படவில்லைதான். ஆனாலும், அணியின் நலனையே முன்னிறுத்தித்தான் அவரது ஒவ்வொரு பங்களிப்பும் இருந்து வந்துள்ளது. பேட்ஸ்மேனாக, பௌலராக, கேப்டனாக எனப் பல பரிமாணத்திலும், அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் பலமுறை பலனடைந்திருக்கிறது.

2003-ம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 12 ரன்களை மட்டுமே அவரால் அணியின் கணக்கில் சேர்க்க முடிந்தது. ஆனாலும், அதன்பிறகு பல சமயங்களிலும் அவரது ரன் பசிக்கு பல பௌலர்களின் பந்துகள் பலியாகி, அதன் விளைவாக அணியும் மீண்டுள்ளது. வொய்ட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் தவிர்க்க முடியாத தேர்வாக ஹஃபீஸ் மாறியதற்குக் காரணமும் அதுதான். எதிரணி பௌலர்கள், பாகிஸ்தான் ஓப்பனர்களை மீறி பேட்டிங் லைன்அப்புக்குள் ஊடுருவினாலும், தனது பேட்டைக் கேடயமாக்கி, பின் வாளாக்கி ரன்களைத் தன்வசம் இழுத்துவிடுவார் ஹஃபீஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான அவரது அதிவேக அரைசதத்தால் இந்திய ரசிகர்களின், கோப்பைக் கனவு தகர்ந்து போனது வலிதரும் நினைவலைதான். என்றாலும், ஒரு கிரிக்கெட் ரசிகனின் கண்கள் கொண்டு பார்த்தால் அவரது அருமையான கவர் டிரைவ்களை ரசித்து ஆராதிக்கலாம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைப் போலவே 2012-ல், பாகிஸ்தானின் இந்தியச் சுற்றுப் பயணத்தையும் அவ்வளவு சுலபமாக யாராலும் மறக்க முடியாது. அச்சமயம் டி20 தொடரை சமன் செய்து ஒருநாள் தொடர் கோப்பையையும் வாங்கிச் சென்றது பாகிஸ்தான். அந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருந்தாலும், அன்று அகமதாபாத் ஹஃபீஸின் அபரித ஆட்டத்திறனைக் கண்டது.

முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
KAMRAN JEBREILI

தோனி - யுவராஜ் கூட்டணியின் உபயத்தில் கிடைத்த 192 ரன்களால் நாளின் இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், நடுவில் சற்றுநேரம் மரணபயம் காட்டினார் ஹஃபீஸ். 55 ரன்களை, 212 ஸ்ட்ரைக் ரேட்டோடு விளாசி, மூன்று சிக்ஸர், ஆறு பவுண்டரி என 22 யார்டுகளுக்கும், பவுண்டரி லைனுக்கும் இடையேயான நீள அகலத்தை பல பந்துகளால் அளந்தார். இஷாந்த், டிண்டா, என அனைவரின் பந்துகளும் பஞ்சராகின. அதுவும், ரவுண்ட் த விக்கெட்டில் வந்து கட்டம் கட்ட முயன்ற அஷ்வினின் இரு பந்துகளை பேக் டு பேக் டீப் மிட் விக்கெட்டில் பறக்க விட்டதெல்லாம் சில்லிடச் செய்யும் சிக்ஸர்கள். அன்று ஃப்ரண்ட் ஃபுட்டில், பேக் ஃபுட்டில் என அவரது கால்கள் பந்துக்கேற்றவாறு நடனமாட, பலமுறை பக்குவமாய் பந்து ஃபீல்டர்களுக்கு நடுவில் புகுந்து சென்றது. அப்போதெல்லாம் மொத்த மைதானத்திலும் நிசப்தம்.

ஸ்பின்னர்கள், ஃபாஸ்ட் பௌலர்கள் என்ற பாகுபாடுகள் அவரது பேட்டுக்கு இருந்ததில்லை. துணைக்கண்ட களங்களில், ஆதிக்கம் செலுத்துவார் என்றாலும், அயல்நாடுகளிலும் சோடை போனதில்லை.

பொதுவாக தொடக்கத்தில் இவ்வளவு அதிரடி காட்டும் வீரர்களின் வேகம், நாள்பட மட்டுப்படும். வயதாக ஆக, ஸ்ட்ரைக்ரேட் பாதிக்கப்பட்ட பங்குச்சந்தையாகச் சரியும். ஆனால், தனது 40 வயதிலும், அந்நிய மண்ணில் எதிரணிக்கு ஆட்டம் காட்டினார் ஹஃபீஸ். 2020 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20-ல், 57 பந்துகளில் 99 ரன்களைக் குவித்திருந்தார். அவர் 100-ஐ எட்டுவதற்குள், துரதிர்ஷ்டவசமாக ஓவர்கள் முடிவுற்றிருந்தாலும், நியூசிலாந்து வென்று, டிம் சவுத்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தாலும், ஹஃபீஸின் இன்னிங்ஸ் அனைவருக்கும் பிரமிப்பை ஊட்டியது.

2018-ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றதிலிருந்து, அவரது டி20 ஆட்டத்தில் மேலும் காரம் கூடியது. அவரது டைமிங், ஷாட் செலக்சன், பவர் ஹிட்டிங் திறன் என ஒவ்வொன்றும் ஆச்சரியமூட்டின. 2020-ல், சராசரியாக அவர் சந்தித்த ஒவ்வொரு 5.51 பந்துகளுக்கும் ஒருமுறை ஒரு பவுண்டரி வந்திருந்தது. இப்படி இளைய வீரர்களுக்கே சவால் விடுக்கும் வகையில்தான் கரியரின் இறுதியில்கூட ஆடிவந்தார் ஹஃபீஸ்.

முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez

சரி, லிமிடெட் ஃபார்மட்டில் வேண்டுமென்றால் அன்லிமிடெடாக, ரன் குவித்திருக்கலாம். "டிஃபென்ஸிவ் கிரிக்கெட்டின் நிறம் என்ன?" என அதிரடி பேட்ஸ்மேனாகக் கேட்பவர், ஆர்தடாக்ஸ் ஷாட்டுகளோடு, ஒரு கிளாசிக்கல் இன்னிங்க்ஸை ஆடுவாரா? கட்டுக்கோப்பாக, பொறுமையைக் கடைபிடிக்க முடியுமா என்று பார்த்தால், வெள்ளை ஜெர்ஸியோடும் 15 ஆண்டுகள் வெற்றித் தடம் பதித்திருக்கிறார் ஹஃபீஸ். 2015-ல் ஷார்ஜாவில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 151 ரன்களை அநாயாசமாகச் சேர்த்திருந்தார். அதில் பெரும்பாலான ரன்கள், கட் ஷாட் மூலமாகவும், கவர் டிரைவ்கள் மூலமாகவும் வந்திருந்தன. ஆன்டர்சனும், பிராடும் இணைந்து புதுப் பந்தோடு மிரட்டினார்கள். பின் பந்து தேய, ரிவர்ஸ் ஸ்விங்காலும் போர் தொடுத்தார்கள். ஆனால், கொஞ்சமும் அயராது நின்று, பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லக் காரணமாக இருந்து, ஆட்ட நாயகன் விருதையும் ஹஃபீஸ் கைப்பற்றினார். 2-0 என பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. அத்தொடரில், பாகிஸ்தான் சார்பாக அதிக ரன்களை எடுத்த வீரரும் ஹஃபீஸ்தான். போட்டிகளை மட்டுமல்ல, தொடர்களையும் வென்று கொடுத்தவர்தான் அவர்.

அவரது அறிமுகப் போட்டிக்கு பின்பு வந்த காலகட்டங்களில், நடந்துள்ள போட்டிகளை மட்டும் கணக்கில் எடுத்தால் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது (32) வாங்கிய பெருமையோடு, தொடர் நாயகன் விருதைப் (9) பெற்ற பட்டியலிலும் ஹஃபீஸ்தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
Hafeez, Imam, Amir
Hafeez, Imam, Amir
AP

இதற்கு முக்கியக் காரணம், பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் பௌலராகவும் அவர் சாதித்துக் காட்டி இருப்பதுதான். அஃப்ரிடி, ஹஃபீஸ், அஜ்மல் மூவரும் இணைந்த இந்த ஸ்பின்னர்கள் கூட்டணி, முன்னதாக வேகப்பந்து வீச்சின் மூலமாக பாகிஸ்தான் நிகழ்த்திக் காட்டி இருந்த அதே புரட்சியை திரும்பவும் நிகழ்த்தியது. துணைக்கண்டக் சூழ்நிலைகளில், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களால் சமாளிக்கவே முடியாதவாறு திணறடித்தது இந்த மூவரணி. குறிப்பாக, இடக்கை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுக்கான தூண்டிலாக ஹஃபீஸ் வலம் வந்தார்.

கேப்டனாக பாகிஸ்தானுக்கு எல்லா ஃபார்மட்டிலும் பொறுப்பேற்றிருந்தாலும் டி20-ல் சற்றே அதிகளவில் வெற்றி சதவிகிதத்தைத் தனதாக்கி இருக்கிறார் ஹஃபீஸ். இவரது தலைமையில் 29 டி20 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான், அதில் 17-ல் வென்றுள்ளது. வீரர்களை அரவணைத்துப் போவதிலிருந்து இளைஞர்களை பட்டைத் தீட்டுவது வரை, இந்த டி20 ஸ்பெஷலிஸ்ட், சர்வ பொறுப்போடே அணியை வழிநடத்தியுள்ளார்.

'Money Heist' வருவதற்கு முன்னதாகவே 'The Professor' என்ற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்தவர் ஹஃபீஸ். தெளிவான சிந்தனையும், விஷய ஞானமும் கொண்டு சரியான முடிவுகளை மிகச் சரியான நேரத்தில் எடுப்பார் என்பது மட்டும் காரணமல்ல. கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அணிக்கு இதுதான் நல்லது எனத் தனக்குத் தோன்றும் எதனையும் எடுத்துச் சொல்ல ஹஃபீஸ் தயங்கியதே இல்லை. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டோடு பலமுறை மோத வேண்டி இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. 'The Professor' என்ற பெயருக்கான காரணமும் இதுதான்.

முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
முகமது ஹஃபீஸ் | Mohammed Hafeez
டி20-ல் 2,500 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர், டி20 தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஆக்கிரமித்த முதல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர், எல்லா ஃபார்மட்டுக்கும் சேர்த்து அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கான பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் என தரவு தரும் தகவல்கள் அவரது தனித்தன்மையை எடுத்துரைக்கின்றன.

ரமீஸ் ராஜா, பாபர் ஆசம், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் அவரை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த ரெக்கார்டுகளுக்குச் சொந்தக்காரரான ஸ்டெய்ன் என ஹஃபீஸுக்கு எல்லாத் தரப்பில் இருந்தும் புகழுரை பாடப்பட்டுக் கொண்டுள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்து, கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராகவே அவர் விடைபெறுவதுதான் கூடுதல் பெருமை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தோடு சமீபகாலமாக அவரது மோதல்கள் சற்றே முற்றிய நிலையை எட்டி இருந்தது. சூதாட்டப் புகாரில் ஈடுபட்டு தடைபெற்ற வீரர்கள் அணிக்குத் திரும்புவதை எதிர்த்தது, போர்டுக்கும் அவருக்குமான சம்பள ஒப்பந்தப் பிரச்னை, சமீபத்தில் நடந்த சில தொடர்களில் அவர் ஓரங்கட்டப்பட்டது, 'இளைஞர்களின் பெர்ஃபார்மன்ஸுகளே ஹஃபீஸ், சோயப் மாலிக் ஆகியோரது எதிர்காலத்தை முடிவு செய்யும்' என்ற பாகிஸ்தானின் அணித் தேர்வாளரான முகம்மத் வாசிமின் பேச்சு எனப் பல நகர்வுகள், ஹஃபீஸின் ஓய்வறிவிப்புக்கு அடித்தளமிட்டுள்ளன எனக் கூறப்பட்டாலும், தான் பல மாதங்களுக்கு முன்னதாகவே எடுத்துவிட்ட முடிவு இது என ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

ஓய்வறிவிப்புக்கான செய்தியாளர் கூட்டத்திலும், தனது பாணியில் அதிரடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் குற்றங்களைக் கூண்டில் ஏற்றி, வெளிப்படையாகவே கடிந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி20 பிரிமியர் லீக்கில் தனது பயணம் தொடரும் என ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

உமர் குல், அஃப்ரிடி, அஜ்மல், ஹஃபீஸ்
உமர் குல், அஃப்ரிடி, அஜ்மல், ஹஃபீஸ்
90-களில் பிறந்து, நாடு வேறுபாடு இன்றி, கிரிக்கெட்டையும், மாற்றான் களத்து வீரர்களையும், ஆராதித்துக் கொண்டுள்ள ரசிகர்களின் கனவு நாயகர்கள் உமர் குல், அஃப்ரிடி, அஜ்மல், ஹஃபீஸ் என ஒவ்வொருவரும் விடைபெறும் போது, அவர்களோடு பயணித்த ரசிகர்களை வெறுமை சூழ்வதைத் தவிர்க்க முடியாது.