Published:Updated:

உம்ரான் மாலிக், அப்துல் சமத், அர்ஷ்தீப்.... கோடிகளைக் கொட்டி இளம் வீரர்களை அணிகள் தக்கவைத்தது ஏன்?!

அர்ஷ்தீப் சிங்
News
அர்ஷ்தீப் சிங் ( IPL )

எதிர்பாராத சில இளம் வீரர்களை இம்முறை கோடிகளை கொட்டி ஐபிஎல் அணிகள் தக்கவைத்திருக்கின்றன. அவர்கள் யார்? என்ன காரணம்?

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன அணிகள். ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறார்கள் என ஏற்கனவே கணிப்புகள் வெளியாகியிருந்தன. பெரும்பாலும் இந்த கணிப்புகளை ஒத்தே அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலும் இருக்கிறது. ஆனால், இதில் குட்டி சர்ப்ரைஸ்களும் இருக்கவே செய்கின்றன. எதிர்பாராத சில இளம் வீரர்களை கோடிகளை கொட்டி அணிகள் தக்கவைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீரர்களை பற்றிய அலசல் இங்கே...

உம்ரான் மாலிக்
ஒட்டுமொத்தமாக அத்தனை அணிகள் வெளியிட்டுள்ள வீரர்களின் பட்டியலிலும் அதிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பவர் உம்ரான் மாலிக்கே.

சமீபத்தில் நடந்து முடிந்த சீசனில்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார் உம்ரான் மாலிக். அதுவும் சன்ரைசர்ஸ் அணி முழுமையாக தோற்று ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு துளி கூட சாத்தியமில்லை என்ற நிலையில், பென்ச்சில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்த போதுதான் உம்ரான் மாலிக் களமிறங்கினார். வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளிலும் பெரிய ரெக்கார்ட் கிடையாது. விரல்விட்டு எண்ணும் வகையிலான உள்ளூர் போட்டிகளையே ஆடியிருக்கிறார். ஆனாலும் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து தக்க வைத்திருக்கிறது. காரணம், இவரின் வேகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Umran Malik
Umran Malik
SRH
கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே இரண்டு பந்துகளை 150+ கி.மீ வேகத்தில் வீசியிருந்தார். இந்த 2 பந்துகள்தான் அத்தனை பேரின் கவனத்தையும் உம்ரான் மாலிக்கின் பக்கம் திருப்பியது.

பெங்களூருக்கு எதிரான அடுத்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு 150+ கி.மீ டெலிவரிக்களை வீசியிருந்தார். இந்த போட்டியில் 4 ஓவர்களில் மொத்தம் 4 பந்துகளை மட்டுமே 140 கி.மீ வேகத்துக்கு கீழ் வீசியிருந்தார். அதாவது சராசரியாக ஏறக்குறைய ஒவ்வொரு பந்தையுமே 140+ வேகத்தில் வீசும் திறனுடையவராக இருந்தார். இந்த புல்லட் வேகத்தை பல முன்னாள் வீரர்களும் புகழ்ந்து தள்ளினர். இவரின் பௌலிங் ஆக்ஷனை வக்கார் யுனிஸுடன் ஒப்பிட்டு பரபரப்பையும் கிளப்பியிருந்தனர். டி20 போட்டிகளில் இவ்வளவு வேகத்தில் வீசும் பௌலர்கள் அரிய வகையினராக மாறி வருகின்றனர். நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனிலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் ஸ்லோ பால்களே வீசுயிருந்தனர். UAE பிட்ச்களும் அதற்குதான் கைகொடுத்தன. நோர்கியா, உம்ரான் மாலிக் போன்ற ஒரு சிலர் மட்டுமே முழுக்க முழுக்க வேகமாக வீசியிருந்தனர். அந்த வேகத்திற்கான பலனாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பௌலராக தேர்வானார். எல்லா அணிகளுக்குமே உம்ரான் மாலிக்கின் வேகத்தின் மீது ஒரு கண் இருந்தது. இப்போது சன்ரைசர்ஸ் அணியும் அவரை ரீடெயின் செய்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அர்ஷ்தீப் சிங்
கடந்த நான்கு ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த வெகு சில உருப்படியான காரியங்களில் முக்கியமானது அர்ஷ்தீப் சிங் மாதிரியான வீரரை கண்டெடுத்து அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்பை கொடுத்தது.

ஏன் ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படுகிறோம். ஏன் பென்ச்சில் இருக்கிறோம் என வீரருக்கே காரணம் தெரியாத அளவுக்கு குழப்பமான முடிவுகளை எடுக்கும் பஞ்சாப் அணியில் முட்டி மோதி சர்வைவ் ஆகி தனக்கான நிலையான இடத்தையும் அர்ஷ்தீப் பிடித்திருந்தார். ஒரு தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளராக பவர்ப்ளே, டெத் என எங்கேயும் வீசும் பௌலராக மிரட்டியிருந்தார்.

கடந்த சீசனில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டி ஒன்றில் டெத் ஓவரில் ஹோல்டரை க்ரீஸில் வைத்துக் கொண்டு மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தினார்.
அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்
Punjab Kings

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏலத்தில் இருக்கும் டிமாண்டை கண் கூடாக பார்த்திருப்போம். கையிலேயே ஒரு தரமான ஆளை வைத்துக்கொண்டு ஏலம் வரை சென்று ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? என்பதை உணர்ந்து 4 கோடி கொடுத்து அர்ஷ்தீப்பை ரீடெயின் செய்திருக்கின்றனர். உள்ளூர் ஆளாகவும் இருப்பது அணிக்கு எல்லாவிதத்திலும் கூடுதல் பலமாக அமையும்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்:
முழுக்க முழுக்க இளம் வீரர்களால் கட்டமைக்கப்பட்ட அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணி நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு uncapped வீரர்களை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என திறமையான பல வீரர்கள் இதற்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் யாஷஸ்வியை மட்டும் டிக் அடித்து ரீடெயின் செய்திருக்கிறது ராஜஸ்தான். திறமையான இடதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஜொலிக்கக்கூடியவர். தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படும்பட்சத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதனாலயே ராஜஸ்தான் அணியும் 4 கோடி கொடுத்து இவரை ரீட்டெயின் செய்துள்ளது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Rajasthan Royals
பட்லரையும் தக்கவைத்திருப்பதால் வலது-இடது கூட்டணியாக இருவரையும் தொடர்ந்து ஓப்பனிங் இறக்கலாம் எனும் கணக்கும் இதன் பின்னணியில் இருக்கக்கூடும்.
வெங்கடேஷ் ஐயர்:
2021 சீசனின் முதல் பாதியில் கொல்கத்தா அணி ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்து இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறியிருந்தது.

இந்த உருமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் வெங்கடேஷ் ஐயர். திடீரென ஓப்பனிங்கில் இறங்கி கொல்கத்தா அணியின் தலையெழுத்தையே மாற்றினார்.

10 போட்டிகளில் 370 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ் இந்திய அணியிலும் இடத்தை பெற்றுக் கொடுத்தது. பேட்டிங் மட்டுமல்லாமல் மிதவேக பந்துவீச்சாளராகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஓவர்கள் வீசியிருந்தார்.
வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்
IPL

சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் ஆல்ரவுண்டராக நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். இப்படி ஒரு வீரரை ஒரு அணி தக்கவைக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ஆனாலும், கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில் அல்லது வெங்கடேஷ் இந்த இருவரில் யாரை எடுப்பது என்பதில் சிறிய குழப்பம் இருந்திருக்கும். டி20 போட்டிக்கு தேவையான ஆட்ட அணுகுமுறை, பௌலிங், சமீபத்திய ஃபார்ம் இவற்றின் அடிப்படையில் வெங்கடேஷ் ஐயரை 8 கோடி கொடுத்து கொல்கத்தா தக்க வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்துல் சமத்
சன்ரைசர்ஸ் அணி ரீடெய்ன் செய்துள்ள மூன்று வீரர்களில் இருவர் இந்திய அணிக்கு ஆடிராத இளம் வீரர்கள். ஒருவர் உம்ரான் மாலிக். இன்னொருவர் அப்துல் சமத். உம்ரான் மாலிக்கை போன்றே அப்துல் சமத்தும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவரே.

காஷ்மீர் அணிக்காக பயிற்சியாளர் மற்றும் வீரராக இர்ஃபான் பதான் சென்றிருந்த போது அவரின் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர் வி.வி.எஸ்.லெக்ஷ்மணிடம் சமத் பற்றி கூறி சன்ரைசர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பார். ஃபினிஷர் ரோலில் ஆடுவதற்கு அத்தனை தகுதியும் உடைய ஹார்ட் ஹிட்டர்.

கம்மின்ஸ், பும்ரா, நோர்கியா, ரபாடா என அபாயமான வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனை பேருக்கு எதிராவும் சிக்சர்களை அடித்து மிரட்டியிருக்கிறார்.

பேட்டிங் மட்டுமில்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னராகவும் ஒன்றிரண்டு ஓவர்களை வீசி கொடுக்கக்கூடியவர். 2020 சீசனில் தோனிக்கு எதிராக கடைசி ஓவரை வீச சமத்திடம் வார்னர் பந்தை கொடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 2021 சீசனில் எக்கச்சக்க குழப்பங்களுடன் களமிறங்கிய சொதப்பிய சன்ரைசர்ஸ் சமத்தையும் சரியாக பயன்படுத்த தவறியிருந்தது. ஆனாலும், அவரின் திறமையை உணர்ந்து ரீடெயின் செய்திருப்பது சாதுர்யமான முடிவு.

இதில் எந்த இளம்வீரர் அடுத்த சீசனில் ஜொலிப்பார்? கமென்ட்டில் பதிவிடுங்கள்!