ஐ.பி.எல் மினி ஏலத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்தனர். இதில் பலர் நல்ல விலைக்கு போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அப்படியில்லாமல் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருந்தனர். அவர்களின் பட்டியல் இதோ...
சந்தீப் ஷர்மா:
இந்திய வீரர் ஆன சந்தீப், ஒரு வேகப்பந்து வீச்சாளர். பல ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ளார். பவர்ப்ளேயில் ரொம்பவே சிறப்பாக வீசக்கூடியவர். பஞ்சாப், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ள சந்தீப் இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் விலை போகவில்லை.
டாம் கரண்:
சாம் கரண் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நிலையில் அவரின் சகோதரர் டாம் கரண் ஏலத்தில் விற்கப்படாத வீரராகியிருக்கிறார். இவர் ஓர் பௌலிங் ஆல் ரவுண்டர். ஐ.பி.எல்-இல் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்களுக்காக ஆடியுள்ளார். ஏலத்தில் இங்கிலாந்து வீரர்கள் நல்ல விலை போனபோதும் டாம், தனது ஆரம்பவிலை ₹75 லட்சத்திற்குக்கூட விலை போகவில்லை.

ஆடம் மில்னே:
ஆடம் மில்னே ஒரு நியூசிலாந்து வீரர். அவர் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். 30 வயதான அவர், கடந்த ஐ.பி.எல் சிசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால், பெரிதும் ஜொலித்தது இல்லை. ஆடம் மில்னேவின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருக்க, அவர் ஏலத்தில் விலை போகவில்லை.
பிரியம் கார்க்:
இளம் இந்திய வீரரான கார்க், உள்நாட்டு போட்டிகளில் உத்தரப் பிரதேசம் அணிக்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளார். 2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். 21 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ள, கார்க் 251 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் தனது ஆரம்பவிலையான ₹20 லட்சத்துக்கு கூட அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
கிறிஸ் ஜோர்டன்:

இங்கிலாந்து வீரரான கிறிஸ் ஜோர்டன் இதற்கு முன் ஐ.பி.எல்-இல் ஐதராபாத், பெங்களூர், பஞ்சாப் மற்றும் சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். ஆனால் இதுவரை ஐ.பி.எல்-களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இவர் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது ₹2 கோடி. ஆனால், எந்த அணியும் இவர் மீது ஆர்வம் காட்டவில்லை.
முகமது நபி:
முகமது நபி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர். அந்த அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளிலும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். உலகம் முழுக்க அத்தனை லீகுகளிலும் ஆப்கன் வீரர்கள் ஜொலித்து வரும் நிலையில் அந்த அணியின் முக்கிய வீரரை யாரும் சீண்டவில்லை என்பது சோகமே. நபியை போன்றே முஜிபூர் ரஹ்மானையும் யாரும் சீண்டவில்லை.

ஷ்ரேயாஸ் கோபால்:
ஷ்ரேயாஸ் கோபால் இந்திய கிரிக்கெட் வீரர். உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்காகவும், ஐ.பி.எல்-இல் ராஜஸ்தான், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். ஆனால், தன் ஆரம்ப விலையான ₹20 லட்சத்திற்கே அவர் விலை போகவில்லை.
இவர்கள் போக நீங்கள் எதிர்பார்த்து ஏமாற்றமளித்த வீரர்களின் பெயர்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.