ஐபிஎல் ஏலம் ஒவ்வொன்றின் போதும் பார்வையாளர்களே விக்கித்துப் போகும் அளவிற்கான விலையில் சில வீரர்கள் வாங்கப்படுவதும், பின் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது செயல்பாடு இல்லாமல் போவதும் வழக்கம்தான்.
தனது அணிக்கு அவர்கள் தேவையா, இந்தியச் சூழலுக்குப் பொருந்திப் போவார்களா என்பதையெல்லாம் யோசிக்காமல் அவர்களது சமீபத்திய செயல்பாடுகளை மட்டும் மனதில் நிறுத்தி அதிக விலைக்கு வாங்கி, பின் கையைச் சுட்டுக் கொண்ட கதை ஆர்சிபியிடம் அதிகம். அதே சமயம், அடிப்படைத் தொகையிலேயே வாங்கப்பட்டு தூள் கிளப்பிய வீரர்களும் உண்டு.

இந்த ஏலத்திலும் சில இந்திய வீரர்களை கையிருப்பைப் பற்றிக்கூட யோசிக்காமல் போட்டி போட்டு வாங்கியுள்ளன ஐபிஎல் அணிகள். அவர்கள் உண்மையில் அந்த விலைக்கு ஏற்றவர்கள்தானா அல்லது அணிகள் அவசரப்பட்டு விட்டனவா என்பது குறித்த ஓர் அலசல்தான் இது.
இஷான் கிஷன்:
அண்டர் 19 உலகக் கோப்பையில் உதயமானாலும், மும்பை தத்தெடுத்து புடம் போட்டுக் கொண்டிருக்கும் தங்கம். ஏலம் துவங்குவதற்கு முன்னதாகவே அதிக விலைக்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் இரண்டு கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ், பஞ்சாப், குஜராத் எனப் பல அணிகளுடன் முட்டிமோதி 15.25 கோடிக்கு மும்பையால் அவர் வாங்கப்பட்டார். தொடக்கம் முதல் சர்வ அமைதி காத்த மும்பை, இஷானை மட்டும் விட்டு விடக்கூடாதென்பதில் அதிதீவிரம் காட்டியது. உண்மையில் அவர் மீதான முதலீடு மும்பைக்கு நீண்ட காலத்திற்குரியதாக இருக்கப் போகிறது.

2018, 19, 21 சீசன்களில் சராசரியாக அவரது ஆட்டம் இருப்பினும் 2020-ல் இஷான் எடுத்த அவதாரத்தை மும்பையால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. 57.33 ஆவரேஜோடு ரன்களைக் குவித்திருந்தார். அட்டாக்கிங் ஓப்பனர் என்பதோடு, விக்கெட் கீப்பர் என்னும் கூடுதல் தகுதியும் அவரை இந்திய டீ காக் என அடையாளம் காட்டுகிறது. இதற்கு மேலும் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக ரோஹித்திற்குப் பின்னர், கேப்டன் பதவியை அலங்கரிக்கவும் அவர் தகுதியானவர்தான். மும்பைச் செலவழித்த ஒவ்வொரு காசிற்கும், பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்தான் இஷான்.
தீபக் சஹார்:
ரெய்னா, டுப்ளஸ்ஸி என சீனியர் வீரர்களை எடுக்கக்கூட முனைப்புக் காட்டாத சிஎஸ்கே, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், டெல்லி என ஆளுக்கொரு பக்கம் போட்டி போட்டு இழுக்க, 14 கோடியை வாரி இறைத்து தீபக் சஹாரை தன்பக்கம் இழுத்துப் போட்டது. தோனிக்குக் கொடுத்ததைவிட இரண்டு கோடி அதிகமாகக் கொடுத்து சஹாரை வாங்க வேண்டிய அவசியமென்ன? புனே நாள்களில் இருந்தே தோனியால் வார்க்கப்பட்ட பௌலர் சஹார் என்பது தெரிந்த கதைதான்.

கிட்டத்தட்ட அவர் ஆடப் போகும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கோடி அதாவது ஓவருக்கு 25 லட்சம் என்ற கணக்கில் அள்ளி வீசுமளவிற்கு சிஎஸ்கே போனதற்குக் காரணம், சர்வதேச தரத்தில் பந்து வீசும் ஒரு இந்திய பௌலர் என்பது மட்டுமல்ல. சமீப காலமாக அவரது பேட்டும் நம்பிக்கை அளிப்பதுதான். இது அணியின் பேட்டிங் லைன் அப்புக்கு மேலும் வலுசேர்க்கும். அவரது வயதைக் கணக்கில் கொண்டு இன்னும் சில ஆண்டுகள் அவரால் சிஎஸ்கேவுக்காக ஆடவும் முடியும். ஒரு கோர் அணியை உருவாக்கும் முயற்சியில் இது சரியாகப் பார்க்கப்பட்டாலும், டெல்லி ஏற்றிவிட்டதால் அவரது விலை எகிறியது என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர்:
ஏலத்திற்கு முன்னதாகவே சில அணிகளின் கேப்டன் பதவியும் காலியாக இருந்ததால் முன்னாள் டெல்லி கேப்டனான ஸ்ரேயாஸ் நல்ல விலைக்குப் போவார் என்பது எல்லோரும் அனுமானித்ததுதான். அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்ரேயாஸுகாக மல்லுக்கட்டும் என்பதுவும் எதிர்பார்க்கப்பட்டதுதான். தினேஷ் கார்த்திக், மார்கன் விடுவிக்கப்பட்ட நிலையில், தங்களது தேவைகளுக்குள் கச்சிதமாகப் பொருந்துவார் என்பதால்தான் அவரை வாங்க கேகேஆர் முனைந்தது. அவர்மேல் பழைய பாசத்திலிருந்த டெல்லியிடமும், புத்தம்புது அணிகள் லக்னோ மற்றும் குஜராத்திடமும் சரிசமமாக போராடியது. ஏலத்தில், தன்வசமிருந்த பணத்தில் நான்கில் ஒரு பங்கை ஸ்ரேயாஸை வாங்க மட்டுமே அதுவும் முதல் சுற்றிலேயே செலவு செய்தது. விளையாடிய ஏழு சீசன்களில் நான்கு முறை 400 ரன்களைக் கடந்தவர் ஸ்ரேயாஸ்.

31.66 என ஐபிஎல் ஆவரேஜும், மத்திய வரிசையில் அவரது ஆங்கர் ரோலும், சூழலுக்கிணங்க தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக் கொள்ளக் கூடியவர் என்பனவும் பேட்ஸ்மேனாக அவர்மீதான ஈர்ப்பினை அதிகரித்தன. அதுபோக, டெல்லியை 2020-ல் இறுதிச்சுற்று வரை அழைத்துச் சென்றவர் என கேப்டனாகவும் அவர் அதிகமாகக் கவர, மீண்டுமொரு கோப்பை எனும் கனவோடு வலம்வரும் கேகேஆர் அவரை என்ன விலை கொடுத்தேனும் வாங்க வேண்டும் என கொடிபிடித்தது. சர்வதேச அரங்கில், ஓவர்சீஸ் பௌலர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதுவும் கூடுதல் தகுதி. உண்மையில் 12.25 கோடியில் பேட்ஸ்மேனை மட்டுமல்ல, கேப்டனையும் சேர்த்துத் தூக்கி ஜாக்பாட்தான் அடித்துள்ளது கேகேஆர்.
ஹர்சல் படேல்:
கடந்த சீசனில் ஆர்சிபியின் சென்சேஷனாகக் கண்டெடுக்கப்பட்டு பர்பிள் கேப்போடு அதகளம் காட்டிய ஹர்சல் படேலை ஆர்சிபி விடுவித்ததே ஆச்சர்யத்துக்கு உரியதாகத்தான் பலருக்கும் இருந்தது. ஏழு கோடிக்கு சிராஜைத் தக்க வைத்தது போல் ஹர்சலைத் தக்கவைக்க ஆர்சிபி முயலவில்லையா, முயன்றும் அவருக்கு விருப்பமில்லையா என்பது விடைதெரியாக் கேள்விதான். டிரேடிங்கில் வந்து சேர்ந்து, அணியின் டிரேட் மார்க்காக மாறிப்போன ஹர்சலை கைநழுவ விடக்கூடாது என சிஎஸ்கேயுடனும் சன்ரைசர்ஸுடனும் கோதாவில் குதித்து 10.75 கோடிக்கு அவரை வாங்கியது ஆர்சிபி. 63 போட்டிகளில், 78 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களைக் கசிய விடுவதிலும் சமயத்தில் அவரது பந்து தாராளம் காட்டும்... எனவே அவருக்கு இந்த விலை அதிகமென சிலர் முணுமுணுத்தாலும், நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் டெத் பௌலிங்கில் பும்ராவிற்கு நிகராக மிரட்டிய ஹர்சல், தனக்கான விலை சரியென நிருபித்துள்ளார்.

வேகத்தை வேறுபடுத்தி பேட்ஸ்மேனைக் குழப்பி மிரட்டுவது அவரது தனித்திறன். அரபு மைதானங்களுக்குப் பொருந்திப் போன ஹர்சல் இங்கே எடுபட மாட்டார் என்று முன்னதாக ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். கடந்த ஐபிஎல்லில் முதல் சுற்றில் இந்தியாவில் நடந்த 7 போட்டிகளில்தான் 17 விக்கெட்டுகளை ஹர்சல் எடுத்தார் என்ற கணக்கு அதனைப் பொய்யாக்கி விடுகிறது. சிராஜ், சஹால், சுந்தர் எனப் பல நல்ல இந்திய பௌலர்களுக்கு அடையாளம் தந்த ஆர்சிபி, ஹர்சலை இந்த விலை கொடுத்து வாங்கியதில் ஆச்சர்யமுமில்லை, அதில் தவறேதுமில்லை.
ஷர்துல் தாக்கூர்:
தோனியோடு பல ஆண்டுகளாகப் பயணித்த தாக்கூரை 10.75 கோடியைக் கொட்டிக் கொடுத்து மஞ்சளிலிருந்து தங்கள் ஜெர்சிக்கு மாற வைத்துள்ளது டெல்லி. முதல் கோப்பை மீது கண்வைத்து நகரும் டெல்லியின் ஒவ்வொரு நகர்வும் சற்றும் பிசகாமல் இருந்தது. எந்த அளவிற்கு வார்னர் கிடைத்தது டெல்லியின் அதிர்ஷ்டமோ, அதே அளவு தாக்கூர் கிடைத்ததும் அவர்களது அதிர்ஷ்டம் அல்லது சாதுர்யமான நகர்வு. 'கேம் சேஞ்சர்' என்ற வார்த்தை 100 சதவிகிதம் ஒருவருக்கு பொருத்தமாக இருக்குமென்றால் அது தாக்கூருக்குத்தான்.

கடந்த ஐபிஎல்லில் வெளிப்பட்ட ஆட்டத்திறத்தைக் கொண்டு மட்டுமின்றி, சர்வதேச அளவில்கூட அவரது மதிப்பு எகிறி இருக்கிறது. பேட்டிங்கிலும் ஓரளவு நம்பத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இன்னமும் சொல்லப் போனால், தீபக் சஹாரைக்கூட தாகூருக்காக சிஎஸ்கே தாரை வார்க்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் டெல்லி வியூகம் வகுத்து, தாக்கூரை அபகரித்துக் கொண்டது. செலவழித்த ஒவ்வொரு லகரத்திற்கும் லார்ட் தாக்கூரின் மூலமாக லாபம் சம்பாதிக்கப் போகிறது டெல்லி.
அவேஷ் கான்:
2021 ஐபிஎல்லில் டெல்லியின் சர்வதேச பந்துவீச்சாளர்களுக்குச் சமமாகப் பந்து வீசிய அவேஷ் கானை லக்னோ 10 கோடிக்கு வாங்கியிருந்தது. டெல்லியும் சாமான்யமாக விட்டுக் கொடுத்து விடவில்லை. 8.75 கோடிவரை தர தயாராகவே இருந்தது. இறுதியில் தனது வேகப்பந்து வீச்சுப்படைக்கு பலம் சேர்த்துக் கொள்ளும் வகையில் அவேஷ் கானை இணைத்துக் கொண்டது லக்னோ. இந்தியாவுக்காக ஆடிய அனுபவமே இல்லை என்றாலும், அந்த நாள் இவருக்குத் தொலைவில் இல்லை. போன சீசனில் பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட அவேஷ், புதுப்பந்தில் மிரட்டும் வித்தகமும் தெரிந்தவர். இரட்டை லாபமடித்தது லக்னோவுக்கு என்றே சொல்ல வேண்டும்.

பிரஷித் கிருஷ்ணா:
அடிப்படை பணமாக ஒரு கோடியை நிர்ணயித்திருந்த பிரஷித்தை குஜராத், லக்னோவுடன் போட்டிப் போட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. பொதுவாக வெளிநாட்டு வீரர்களை, அதுவும் இங்கிலாந்து வீரர்களை அதிக விலைக்கு வாங்குவதுதான் ராஜஸ்தான் ராயல்ஸின் பழக்கம். இம்முறையோ, டிரெண்ட் போல்ட் போன்ற ஐபிஎல் அனுபவம் மிக்க ஸ்டார் பிளேயரைக்கூட எட்டு கோடி கொடுத்து மட்டுமே வாங்கிய ராஜஸ்தான், பத்து கோடி கொடுத்து பிரஷித் கிருஷ்ணாவை வாங்கியது.

டி20 பௌலிங் ஜாம்பவான்களான பும்ராவை 12 கோடி கொடுத்து தக்கவைத்த மும்பை, ஆர்ச்சரையும் 8 கோடி கொடுத்து எடுத்திருந்த நிலையில், ராஜஸ்தான் அனுபவம் குறைந்த வீரர் விஷயத்தில் எடுத்த இந்தத் துணிகர முடிவு ஆச்சரியமூட்டியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கான டிமாண்ட், சற்றே அதிகமென்றாலும் பிரஷித்தின் ஒருசில பௌலிங் ஸ்பெல்கள் அதிஅற்புதமானதாக இருந்தது உண்மைதான் என்றாலும், இது அவருக்குச் சற்றே அதிகமான விலை என்பதுதான், பலரது கருத்தாகவும் இருக்கிறது.
2022 ஐபிஎல் ஏலத்தில் 11 வீரர்கள், பத்து கோடி அல்லது அதற்கு மேல் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றனர். இதில், ஏழு பேர் இந்தியர்கள் என்பது இந்திய வீரர்களின் தரம் உயர்ந்திருப்பதையே காட்டுகிறது. இதற்கு முன்னதாக 2011-ல் மட்டுமே அதிக விலைக்குப் போன டாப் 7-ல் இந்திய முகங்கள் அதிகமாக இருந்தன.
இந்த வீரர்களின் கடந்த கால ஆட்டத்திறன், ஐபிஎல் களச்செயல்பாடுகள் இதைக் கொண்டு மட்டுமே அவர்களுக்கான விலை அதிகமா குறைவா என்பதனைக் கணக்கிடுகிறோம். ஒரு காலத்தில் இருபது லட்சத்திலிருந்த தனது மதிப்பை, கோடிகளுக்கு எடுத்துச் சென்ற ஹர்சல் படேல் போல் வீரர்கள் இங்கே இருந்தாலும், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட இந்த வீரர்களில் ஓரிருவர் சோபிக்கத் தவறலாம். எனினும், நிச்சயமாக பல புதிய நாயகர்கள் வரவிருக்கும் ஐபிஎல்லில் உதயமாவார்கள்.
எதிர்பாராததை எதிர்கொள்ள வைப்பதுதானே, டி20 ஃபார்மெட்டின் அழகே!