நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியபோதே, சீனியர்கள் இல்லாத பேட்டிங் லைன் அப், எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக வீசக்கூடிய எதிரணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி ஆகியவற்றை இந்தியாவின் இளம்படை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு சரியான விடையாக அமைந்தது அறிமுக இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த சதம். சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் போட்டியிலேயே சதமடிக்கும் 16-வது இந்திய வீரர் ஷ்ரேயஸ். இவருக்கு முன் இந்த லிஸ்டில் இடம்பெற்றவர்களை பற்றிய சிறிய ரீவைண்ட் இதோ
1. லாலா அமர்நாத்
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் லாலா அமர்நாத். 1933-ம் ஆண்டு பாம்பே ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதமடித்தார்.
2. தீபக் ஷோதன்
1952 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் 8 ஆவது பேட்டராக களமிறங்கி தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்தார் தீபக் ஷோடன். தன்னுடைய முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலே சதமடித்த முதல் இந்தியர் இவர்தான்.
3. AG கிரிபால் சிங்
நியூசிலாந்துக்கு எதிராக 1955-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கிரிபால் சிங். துரதிரஷ்டவசமாக அதுவே அவரது கடைசி சதமாகவும் அமைந்தது.
4. அப்பாஸ் அலி பைக்
1959-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. முக்கிய பேட்டரான விஜய் மஞ்ச்ரேக்கருக்குக் காயம் ஏற்பட, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதல் தரப் போட்டியில் ஆடி வந்த 20 வயதே நிரம்பிய அப்பாஸ் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். அறிமுக போட்டியில் சதம் அடித்தது மட்டுமல்லாமல், மிக இளைய வயதில் இச்சாதனையை செய்தவர், வெளிநாட்டு மண்ணில் இதை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.
5. ஹனுமந்த் சிங்
மிக நீண்ட கிரிக்கெட் பின்னணியை கொண்டவர் அனுமந்த் சிங். அரச குடும்பத்தை சேர்ந்தவர். 1964-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக சதம் அடித்த ஹனுமந்த், அணி தேர்வில் நடைபெற்ற குழப்பத்தால் அதன் பின் இந்திய அணிக்கு அதிகம் விளையாடவில்லை
6. குண்டப்பா விஸ்வநாத்
எழுபதுகளின் தலைசிறந்த பேட்டராக அறியப்பட்ட குண்டப்பா விஸ்வநாத், தன் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பௌலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்ட அவர் 137 ரன்கள் விளாசினார்.

7. சுரிந்தர் அமர்நாத்
வெறும் 15 வயதில் ரஞ்சி ஆடிய அமர்நாத், எந்த பௌலரையும் நினைத்த நேரத்தில் அடிக்கக்கூடிய திறன் கொண்டவர். 1975-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களைக் குவித்தார் அமர்நாத்.
8. முகமது அசாருதீன்
தன் முதல் போட்டியில் மட்டுமல்லாமல் முதல் மூன்று போட்டிகளிலும் சதம் விளாசி சாதனை படைத்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 1984-ல் அறிமுகமானவர், முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில்தான் பேட் செய்தார். அதில் சதம். இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம். மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் சதமடித்தார் அசார். தன் முதல் 4 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து கெத்தான என்ட்ரி கொடுத்தார் இவர்!
9. பிரவீன் ஆம்ரே
ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே, தன் முதல் போட்டியில் ஆலன் டொனால்ட், பிரயன் மெக்மில்லன் போன்ற தென்னாப்பிரிக்க பௌலர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடி சதம் விளாசினார். இன்று அறிமுக போட்டியில் சதம் விளாசிய ஷ்ரேயாஸின் பயிற்சியாளரும் இவர்தான்.
10. சௌரவ் கங்குலி
ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, அடுத்த 4 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (1996) டெஸ்ட் அணிக்கு அறிமுகமானார் கங்குலி. அதுவும் முதல் போட்டியே லார்ட்ஸ் மைதானத்தில். கிரிக்கெட்டின் மெக்காவில் அசத்தலாக சதமடித்து தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். அதே போட்டியில் அறிமுகமாகி 95 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார் இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் டிராவிட். அடுத்த போட்டியிலும்கூட சதமடித்திருந்தார் தாதா!

11. விரேந்திர சேவாக்
அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன சேவாக்கை டெஸ்ட் அணியில் சேர்க்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேப்டன் கங்குலிக்கோ சேவாக்கை வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு அவரின் மேல் நம்பிக்கை இருந்தது. அதைக் காப்பாற்றும் வகையில் (2001-ம் ஆண்டு) தென்னாபிரிக்காவிற்கு எதிரான தனது முதல் போட்டியிலே சதம் விளாசினார் வீரு.
12. சுரேஷ் ரெய்னா.
Mr. IPL என்று அழைக்கப்படும் ரெய்னா தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தவர். கொழும்பு டெஸ்டில் சீனியர் பௌலர்கள் நிறைந்த இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார் ரெய்னா. அந்த சதத்தால் அப்போட்டியை டிரா செய்தது இந்தியா.
13. ஷிகர் தவான்
தவானின் டெஸ்ட் அறிமுகத்தை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் ஒப்பனராக களமிறங்கிய தவான் எதிரணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடித்தார். இரட்டை சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்க்க கடைசியில் 187 ரன்களுக்கு (174 பந்துகள் ) ஆட்டமிழந்தார் தவான்.

14. ரோஹித் ஷர்மா
பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ரோஹித் ஷர்மா, தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்தார். சுமார் 108 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகே ரோஹித்திற்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 83-5 என்று தடுமாற அட்டகாசமான சதமொன்றை விளாசினார் ஹிட்மேன்.
15. பிரித்வி ஷா
அதே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2018-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் சதமடித்து தன் டெஸ்ட் கரியரைத் தொடங்கினார் 18 வயது பிரித்வி ஷா.