Published:Updated:

கிறிஸ் கெய்ன்ஸ்... விவியன் ரிச்சர்ட்ஸை முந்தியவன்... கங்குலியின் கனவை கலைத்தவன்! அண்டர் ஆர்ம்ஸ் - 15

கிறிஸ் கெய்ன்ஸ்
கிறிஸ் கெய்ன்ஸ்

நியூஸிலாந்தின் எல்லா வெற்றிகளிலும் இவர் இல்லை. ஆனால், இவர் இருந்தால் நிச்சயம் நியூஸிலாந்து வெற்றிபெறும் என்பதே அப்போதைய நிலை.

கொண்டாட்டங்கள் இல்லாத கிரிக்கெட்டர்கள் 90-களின் நியூஸிலாந்து வீரர்கள். வெற்றியோ, தோல்வியோ அவர்களிடம் இருந்து பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. திடீரென பெரிய பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். திடீரென தொடர் தோல்விகளை சந்திப்பார்கள். அப்படிப்பட்ட நியூஸிலாந்தின் 90'ஸ் லெவனில் ஸ்டாராக இருந்தவர் கிறிஸ் கெய்ன்ஸ்.

கிரிக்கெட்டில் சிலரை ஃப்ரீ ஃப்ளோயிங் பேட்ஸ்மேன்கள் என்பார்கள். அவர்கள் அடிப்பதே தெரியாது. ஆனால், சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறந்துகொண்டிருக்கும். ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றபடி அடித்தும் ஆடுவார்கள், அடக்கியும் ஆடுவார்கள். அப்படிப்பட்ட ஃப்ரீ ப்ளோயிங் பேட்ஸ்மேன்தான் இந்த கிறிஸ் கெய்ன்ஸ். ஃபுல் டாஸ் எல்லாம் இவருக்குப் போட்டால் பந்து ஸ்டேடியத்துக்கு வெளியே போய் விழும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல, மிதவேகப்பந்து பெளலரும் கூட. கிறிஸ் கெய்ன்ஸின் அப்பா லேன்ஸ் கெய்ன்ஸும் நியூஸிலாந்துக்காக விளையாடியவர்.

Chris Cairns
Chris Cairns

80-90-களில் அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகளை ஜூனியர் உலகக்கோப்பை என்பார்கள். 1988-ல் ஆஸ்திரேலியாவில் ஜூனியர் உலகக்கோப்பை நடந்தது. இந்த ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாடியப் பல வீரர்கள்தான் 90-களில் சூப்பர் ஸ்டார்களாக உயர்ந்தார்கள். பிரையன் லாரா, சனத் ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹக், மைக் ஆதர்ட்டன், நாசர் ஹுசைன் எனப் பலரும் விளையாடிய அந்த ஜூனியர் உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்காக விளையாடியவர் கிறிஸ் கெய்ன்ஸ். ஜூனியர் உலகக்கோப்பையின் பர்ஃபாமென்ஸ் கிறிஸ் கெய்ன்ஸை 1989-லேயே அணிக்குள் கொண்டுவந்துவிட்டது.

ஆனால், காயம் காரணமாக அணிக்குள் நிரந்தரமாகத் தங்கமாட்டார் கெய்ன்ஸ். நியூஸிலாந்தின் எல்லா வெற்றிகளிலும் இவர் இல்லை. ஆனால், இவர் இருந்தால் நிச்சயம் நியூஸிலாந்து வெற்றிபெறும் என்பதே அப்போதைய நிலை.

கிறிஸ் கெய்ன்ஸ் என்றதுமே எல்லோருக்கும் அந்த மினி வேர்ல்டு கப்பாக வர்ணிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராஃபிதான் நினைவுக்குவரும். முதல்முதலாக 1998-ல் மினி வேர்ல்டு கப் அறிமுகப்படுத்தப்பட்டது. டாக்காவில் நடந்த அந்த முதல் மினி வேர்ல்டு கப்பில் இந்தியா ஆஸ்திரேலியாவை எல்லாம் தோற்கடித்துவிட்டு அரையிறுதிப்போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றுவிடும். 96 உலகக்கோப்பை தோல்விக்குப்பிறகு இந்த அரையிறுதி தோல்வியும் தாங்கிக்கொள்ளவே முடியாததாக இருந்தது. ஏன் என்றால் அப்போது அசைக்கவே முடியாத அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை சச்சினின் இன்னிங்ஸ் காலிசெய்திருக்கும். 141 ரன்கள் அடித்து, இந்தியாவின் ஸ்கோரை 307 ரன்களுக்கு உயர்த்தி இந்தியாவை வெற்றிபெறவைத்திருப்பார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை சத்தம் இல்லாமல் அரையிறுதியில் தூக்கிவிடும். அசாருதின் தலைமையில்தான் இந்தியா இந்த தொடரை சந்தித்திருந்தது.

ஆனால், 2000-ல் நடைபெற்ற அடுத்த மினி வேல்ர்டு கப்பில் கங்குலி கேப்டன். அப்போது கிரிக்கெட்டில் ரேங்கிங் சிஸ்டம் கிடையாது. ஆனால், 1999 உலகக்கோப்பையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகள் நேரடியாகக் காலிறுதிப்போட்டியில் விளையாடும் என்றும், அடுத்த நிலையில் இருந்த 6 நாடுகள் தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடி, வெற்றிபெறும் மூன்று அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

யுவராஜ் - கங்குலி
யுவராஜ் - கங்குலி

இந்த மினி வேர்ல்டு கப் கென்யாவின் நைரோபியில் நடந்தது. தகுதிச்சுற்றுப்போட்டியில் கென்யாவுடன் இந்தியா விளையாடவேண்டியிருந்தது. ஜாகீர் கான், யுவராஜ் சிங் இருவரும் இந்தப்போட்டியில்தான் முதல்முறையாக இந்திய அணிக்காக அறிமுகமானார்கள். கென்யாவை தகுதிச்சுற்றில் தோற்கடித்த இந்தியாவுக்கு இந்தமுறையும், காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாதான் எதிரி. ஆனால், தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே 84 பந்துகளில் 80 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார் யுவராஜ் சிங். அரையிறுதிப்போட்டியில் கங்குலி 141 ரன்கள் அடிக்க தென்னாப்பிரிக்காவை வென்று முதல்முறையாக மினி உலகக்கோப்பையை வெல்லும் முனைப்போடு இறுதிப்போட்டிக்குத் தயாரானது இந்தியா. எதிர்பக்கம் ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து நியூஸிலாந்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.

எளிதாக இந்த மினி உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிடும் என்கிற கணிப்பை, கனவை கிறிஸ் கெய்ன்ஸ் என்னும் அந்த நீளமுடி நாயகன் கலைத்தார். அதுவும் இந்தியா வெற்றிபெறப்போகிறது என நாடே கொண்டாட்டத்தில் இருந்தபோது கெய்ன்ஸ் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக்கொண்டேயிருந்தார்.
ரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா?! அண்டர் ஆர்ம்ஸ் - 14

90'ஸ் ரசிகர்களால் நிச்சயம் இந்த இறுதிப்போட்டியை மறந்திருக்கமுடியாது. அப்போது நம்பர் 1 அம்பயராக இருந்த டேவிட் ஷெப்பர்டும், ஸ்டீவ் பக்னாரும்தான் இந்தப்போட்டிக்கு அம்பயர்களாக இருந்தார்கள். இந்தியாதான் முதல் பேட்டிங். கங்குலியும், சச்சினும் செம பார்ட்னர்ஷிப்பில் இறங்க இந்தியா கிட்டத்தட்ட ஓவருக்கு 6 ரன்கள் என ரன்ரேட்டில் எகிறிக்கொண்டிருந்தது. எப்படியும் 300-க்கு மேல் இந்தியாவின் ஸ்கோர் போகும் என எதிர்பார்த்த நிலையில்தான் சச்சின் 69 ரன்களில் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 141. ஆனால், அடுத்த 120 ரன்கள் அடிப்பதற்குள் இந்தியா 5 விக்கெட்டுகளை இழக்க, கங்குலி சென்சுரி அடித்தும் இந்தியா 265 ரன் டார்கெட்டைத்தான் செட் செய்தது. நைரோபி பிட்சில் இது டிஃபெண்ட் செய்யக்கூடிய நல்ல ஸ்கோர்தான் என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையோடு பட்டாசுகளைக் கொளுத்தத் தயராக இருந்தார்கள்.

நியூஸிலாந்தின் நம்பிக்கைகளான நாதன் ஆஸ்லே, கேப்டன் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங், க்ரெய்க் மேக்மில்லன் என ஸ்டார்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆக 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூஸிலாந்து. அப்போதுதான் கிறிஸ் ஹாரிஸுடன் பார்ட்னர்ஷிப்போட்டார் கிறிஸ் கெய்ன்ஸ்.

கிறிஸ் கெய்ன்ஸும், கிறிஸ் ஹாரிஸும் விக்கெட் விழாமல் விளையாடிக்கொண்டிருந்தாலும், மிகவும் மெதுவாக ஆடியதால் ரன்ரேட் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. 200 ரன்களை 42 ஒவரில்தான் தொட்டது நியூஸிலாந்து. ஆனால், அடுத்த 50 ரன்களை 35 பந்துகளில் அடித்துவிட்டார்கள். கிறிஸ் கெய்ன்ஸ் கும்ளேவின் பந்துகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலை. வெங்கடேஷ் பிரசாத்தான் பெளலர். ஆடம் பரோரோவின் பேட்டின் எட்ஜில் பந்துபட்டு பவுண்டரியாக அந்த ஓவரிலேயே 8 ரன்கள் அடித்துவிட்டது நியூஸிலாந்து. கிறிஸ் கெய்ன்ஸ் 110 பந்துகளில் சென்சுரி அடித்தார். கடைசி ஓவரில் அகர்கருக்குப் பெரிதாக வேலை இல்லை. 3 ரன்களை அசால்ட்டாக அடித்துவிட்டு முதல் ஐசிசி கோப்பையை வென்றது நியூஸிலாந்து. இன்றுவரை நியூஸிலாந்திடம் இருக்கும் ஒரே ஐசிசி கோப்பை இந்த சாம்பியன்ஸ் டிராஃபி மட்டுமே. கோப்பையை வென்றுதந்தவர் கிறிஸ் கெய்ன்ஸ்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் அடுத்து, 3000 ரன்களுக்கு மேல் அடித்த வெகு சில ஆல்ரவுண்டர்களில் கெய்ன்ஸும் ஒருவர். நியூஸிலாந்துக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3320 ரன்கள் அடித்திருக்கிறார். 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4950 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 201 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். இவர் மட்டும் அடிக்கடி காயம் அடையாமல் தொடர்ந்து விளையாடியிருந்தால் பல சாதனைகள் இவர் வசமாகியிருக்கும்.

Chris Cairns
Chris Cairns
ICC

பல முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும் 2001-2002-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விபி சிரீஸ் கிறிஸ் கெய்ன்ஸின் கரியரில் முக்கியமானது. தொடர் முழுக்கவே அரை சதங்கள் அடிப்பதும், விக்கெட்டுகள் எடுப்பதுமாக இருந்தார். முதல்முறையாக ஆஸ்திரேலியாவையே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளுக்குள் நுழைய விடாமல் செய்தது நியூஸிலாந்து.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் சாம்பியான்ஸ் டிராஃபி போலவே இன்னொரு இன்னிங்ஸ் ஆடினார் கிறிஸ் கெய்ன்ஸ். தென்னாப்பிரிக்கா 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கிறிஸ் கெய்ன்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 242 ரன் டார்கெட்டை அடிக்கும் முயற்சியில் இறங்கிய நியூஸிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 98 ரன்களுக்கு 5 விக்கெட்கள் அவுட். மீண்டும் கிறிஸ் ஹாரிஸுடன் பார்ட்னர்ஷிப்போட்டு நியூஸிலாந்தை மீட்டெடுத்தார் கெய்ன்ஸ். இந்த பார்ட்னர்ஷிப்பில் ஹாரிஸ் அடித்தது வெறும் 24 ரன்கள்தான்.

Vivian Richards
Vivian Richards

ஷான் பொல்லாக், ஜேக்யூஸ் காலிஸ், மக்காயா நிட்னி என தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பெளலர்களை எல்லாம் அடித்து ஆடினார் கெய்ன்ஸ். காலிஸ் பந்துகள் எல்லாம் சிக்ஸருக்குப் பறந்தன. கெய்ன்ஸ் 98 ரன்களில் இருக்கும்போது நியூஸிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் அடிக்கவேண்டும். பவுண்டரி அடித்து 99 பந்துகளில் 102 ரன்களோடு நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் நின்றார் கெய்ன்ஸ்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற சாதனை 2004 வரை விவியன் ரிச்சர்ஸிடம்தான் இருந்தது. 84 சிக்ஸர்கள் அடித்திருந்தார் ரிச்சர்ட்ஸ். இந்தச் சாதனையை 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட்டில், ஆண்ட்ரு ஃபிளின்டாஃபின் பந்துவீச்சில் 85வது சிக்ஸரை அடித்து முறியடித்தார் கெய்ன்ஸ்.

அதேபோல் 100வது போட்டியில் 100 ரன்கள் அடித்த உலகின் ஒருசில வீரர்களில் கிறிஸ் கெய்ன்ஸும் ஒருவர். அந்த சதமும் இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டதுதான். 1999-ல் நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட அத்தொடரில் இந்தியா 2-1 என லீடிங்கில் இருந்தது. ஒருபோட்டி மழையால் பாதியிலேயே நின்றதால் 5வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் நிலை. சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக அப்போட்டியில் விளையாடவில்லை. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வழக்கம்போல மூன்றாவது டவுன் வீரரக வந்து 75 பந்துகளில் சென்சுரி அடித்தார் கெய்ன்ஸ். 115 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து நியூஸிலாந்தின் ஸ்கோரை 300 ரன்களுக்கு கொண்டுபோய்விட்டார். இந்தியா இந்தப் போட்டியில் தோற்க சீரிஸை 2-2 என டிரா செய்தது நியூஸிலாந்து.

Newzealand Cricket Team
Newzealand Cricket Team
ICC

கேப்டன்களுடன் பஞ்சாயத்து, அடிக்கடி அணியின் ஒழுக்கவிதிகளை மீறுவது, திருமண உறவு முறிவுகள் என காயங்களோடு சேர்ந்து பிரச்னைக்குரிய வீரராகவும் இருந்தார் கெய்ன்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்பாக ஸீ டிவியின் சுபாஷ் சந்திரா நடத்திய இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் சண்டிகர் அணிக்காக விளையாடினார். இந்தப் போட்டிகளின்போது இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபாட்டார் என இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையில் குற்றமற்றவர் என வெளியே வந்தாலும் கெய்ன்ஸின் மீதான இமேஜ் உயரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கராஜில் பேருந்துகளைத் துடைக்கும் வேலையெல்லாம் பார்க்கிறார் என இவரைப் பற்றி செய்திகள் வந்தன. இந்தியாவில் பிறந்திருந்தால் இந்நேரம் பல கோடிகளுக்கு அதிபதியாய் இருந்திருப்பார். 90-களில் ஃபினிஷர்கள் இல்லாமல் தவித்த இந்திய அணிக்கு செம சிறப்பான ஃபினிஷர் கிடைத்திருப்பார்.

அடுத்த கட்டுரைக்கு