Published:Updated:

அம்பேத்கர் வாழ்த்திய கிரிக்கெட் வீரர்... யார் இந்த பல்வாங்க்கர் பலூ?

அம்பேத்கர், பல்வாங்க்கர் பலூ

14 ஆட்டங்களில் 75 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து வீரர்களைத் திரும்பி பார்க்க வைத்தார். இந்தத் தொடருக்கு பிறகு இங்கிலாந்து சார்பாக அவர்களது அணிக்கு ஆட வாய்ப்பு வந்தும் பலூ அதை மறுத்துவிட்டார்.

அம்பேத்கர் வாழ்த்திய கிரிக்கெட் வீரர்... யார் இந்த பல்வாங்க்கர் பலூ?

14 ஆட்டங்களில் 75 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து வீரர்களைத் திரும்பி பார்க்க வைத்தார். இந்தத் தொடருக்கு பிறகு இங்கிலாந்து சார்பாக அவர்களது அணிக்கு ஆட வாய்ப்பு வந்தும் பலூ அதை மறுத்துவிட்டார்.

Published:Updated:
அம்பேத்கர், பல்வாங்க்கர் பலூ
"முதலில் இவர்கள் கைகளில் பந்தைக் கொடுங்கள். உலகின் வேகமான பந்துவீச்சாளர்களாக இவர்கள் மாறுவார்கள்". சில நாட்களுக்கு முன்பு அமிதாப் நடித்து வெளியான 'ஜூண்ட்' திரைப்படத்தின் டிரெய்லரில் வந்த வசனம் இது. இன்று வரை இந்திய சமூகத்தில் புறக்கணிக்கப்படும் பல தலித் சமூக மக்கள் குறித்து பேசப்பட்ட வசனம். காலங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலை மாறி, ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதை வலிமையாக ஒரு காட்சியில் கூறியிருக்கிறார் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்.

உயர் சாதியினரின் விளையாட்டாகவே இன்று வரை இருக்கும் கிரிக்கெட்டில் தலித் சமூக வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காரணம் பல தேவையற்ற அடுக்குகளைக் கொண்ட இந்திய சமூகத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே குதிரைக் கொம்புதான். அப்படி வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு நூற்றாண்டு முன்பே இந்திய சமூகத்திற்குக் காட்டிச் சென்றவர் பல்வாங்க்கர் பலூ.

பல்வாங்க்கர் பலூ
பல்வாங்க்கர் பலூ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்வாங்க்கர் பலூ - கர்நாடகாவில் உள்ள தார்வாட் மாகாணத்தில் பிறந்தவர். குடும்ப சூழல் சீக்கிரமே அவரை பூனா நகரத்திற்கு அழைத்துச் சென்றது. அவரது தந்தை ராணுவத்தில் துப்பாக்கியைத் துடைத்து வைக்கும் பணியில் இருந்தார். தானாவது மற்றவர் மதிக்கும் தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த பலூ, கிரிக்கெட் மீது தனது கவனத்தை திருப்பினார். ஆனால் கிரிக்கெட் அப்போது உயர் சாதி பணக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மட்டுமே உரியதாக இருந்தது. இருந்தாலும் பூனாவில் ஆங்கிலேயர்கள் விளையாடும் மைதானத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பலூ. மாதம் மூன்று ரூபாய் சம்பளத்திற்கு மைதானத்தை பராமரிக்கும் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அங்கு விளையாட வந்த இங்கிலாந்து வீரர்கள் இவரது திறமையைக் கண்டு Net bowler-ஆக இவரை சேர்த்துக் கொண்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்து, முஸ்லிம், பார்சீஸ் - தற்போது போல மாநில அளவில் அணிகள் இல்லாமல் மதத்தின் அடிப்படையில்தான் அப்போது இந்திய உள்ளூர் அணிகள் இருந்தன. இவர்களின் தலையாய பொறுப்பு ஆங்கிலேயர் ஆடும் அணியை வீழ்த்துவதுதான். பல முயற்சிகள் செய்தும் அது முடியாததால் பல்வாங்க்கர் பலூவை அணியில் சேர்க்கலாம் என்று ஒரு கருத்து எழுந்தது. ஆனாலும் அவர் தலித் சமூகம் என்ற வாதம் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், மேலும் மேலும் ஆங்கிலேய அணியுடன் தோற்பது மானப் பிரச்னை ஆனதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு பலூ இந்து அணியில் மாதம் நான்கு ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தமானார்.

பல்வாங்க்கர் பலூ
பல்வாங்க்கர் பலூ

1896ல் ப்ளேக் நோய் பரவியதும் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் தனிமைப்படுத்தச் சொன்னது அரசு. கீழ்நிலை சாதி ஆட்களுடன் ஒரே அறையில் தனிமைப்பட்டு இருப்பதை விட சாவது மேல் என பல பூனா நகர உயர்சாதியினர் கூறிய காலம் அது. இவ்வளவு மோசமான சாதிய கட்டமைப்பில் கிடந்தவர்கள் பலூவை ஏற்றுக்கொள்வார்களா என்ன? பலூ மற்றவர்களுடன் இணைந்து உணவு உண்ண அனுமதிக்கப்படவில்லை. தனியாக அவருக்கென ஒரு மேசை இருக்கும். கை கழுவும் போது கூட இவருக்கு பொதுக் குழாய் பயன்படுத்த அனுமதி கிடையாது. சக தலித் ஆள் ஒருவர்தான் இவருக்கு கை கழுவ தண்ணீர் தருவார். தனியாக இவருக்கு டீ வழங்க ஒரு கப் இருக்கும். வேறு யாரும் அதில் பாணம் செய்யமாட்டார்கள்.

இந்தப் புறக்கணிப்புகள் தந்த வலியை எல்லாம் களத்தில் காட்ட ஆரம்பித்தார் பலூ. அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணிகள் தள்ளாடின. 1905 முதல் 1912 வரை வரிசையாக இந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரிசையாக இந்து அணியுடன் தோற்ற இங்கிலாந்து அணி தங்களது நாட்டுக்கு இந்து அணியை ஆட அழைத்தது. அந்நாட்டு சூழல் பழக்கம் இல்லாததால் 14 ஆட்டங்களில் 10 ஆட்டங்களில் தோல்வியுற்றது இந்து அணி. இந்தியாவை ஓரளவு தலைநிமிர வைத்தது பலூ மட்டும்தான். 14 ஆட்டங்களில் 75 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து வீரர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தத் தொடருக்கு பிறகு இங்கிலாந்து சார்பாக அவர்களது அணிக்கு ஆட வாய்ப்பு வந்தும் பலூ அதை மறுத்துவிட்டார்.

பல்வாங்க்கர் பலூ
பல்வாங்க்கர் பலூ

1911-ல் தொடரை முடித்து இந்தியா திரும்பியதும் திலகர் இவருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்தினார். 20 வயதான இளம் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் பலூவை வாழ்த்திப் பேசினார். அந்த இளைஞர்தான் பின்னாளில் இந்தியாவுக்கு அரசியலமைப்பு சட்டம் தந்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். பலூ குறித்து பல்வேறு இடங்களில் அம்பேத்கர் புகழ்ந்தார். தலித் சமூக மக்கள் மத்தியில் பலூ மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற வீரர் ஆனார்.

பின்னாட்களில் பூனா ஒப்பந்தம் சிக்கலில் அம்பேத்கருக்கும் பலூவுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அம்பேத்கர் பலூவை தனக்கும் தன் சமுதாய மக்களுக்கும் மிகப்பெரிய ஹீரோ என்றே கூறியுள்ளார்.

பம்பாயில் உயர் சாதி ஆட்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட முதல் ஆள் பலூதான். இதன் பின் பலூவின் சகோதரர்களும் அணியில் சேர்க்கப்பட்டனர். 1910 முதல் 1920 வரை ஒவ்வொரு ஆண்டும் பலூவை கேப்டன் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட அதைத் தவிர்த்துக் கொண்டே வந்தனர் உயர் சாதி ஆட்டக்காரர்கள். பாய் என்னும் வீரர் 1913ல் கேப்டன் ஆக்கப்பட்டதும் பலூதான் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் என்று வெளிப்படையாகக் கூறினார். 1920ல் டியோதர் என்னும் ஒரு உயர்சாதி கேப்டன் வந்ததும் பலூவும் அவரது சகோதரர் வித்தலும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இது பெருத்த பிரச்சனையாக மாற பலூ துணைக் கேப்டனாக ஆக்கப்பட்டார்.

அப்போதுதான் இந்திய கிரிக்கெட்டில் ஒரு மகத்தான சம்பவம் அரங்கேறியது. கேப்டன் தியோதர் காயம் காரணமாக ஒரு போட்டியில் விளையாடாததால் பாய் என்னும் வீரர் கேப்டன் ஆக்கப்பட்டார். பாய் வேண்டுமென்றே ஆட்டத்தின் முக்கால்வாசி நேரம் வெளியேறி கேப்டன் பொறுப்பை பலூவிடம் கொடுத்தார். எந்த பலூவுடன் அமர்ந்து உணவு உண்ண உயர்சாதியினர் சங்கடப்பட்டார்களோ அதே பலூவின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆடினர். மூன்று ஆண்டுகள் கழித்து 1923ல் பலூவின் சகோதரர் வித்தல் இந்து அணியின் கேப்டன் ஆனார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவர் இறுதிப் போட்டியில் வென்று கொடுக்க மொத்த இந்து அணியும் வித்தலை தங்களது தோளில் தூக்கிச் சென்றது வரலாறு.

கிரிக்கெட், அரசியல் என இரண்டிலும் தலித் மக்களின் எழுச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய பல்வாங்க்கர் பலூ 1955ம் ஆண்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜய் மெர்சண்ட் போன்ற மிகப்பெரிய வீரர்களுக்குக் குருவாகத் திகழ்ந்தார் பலூ. இதுவரை நான்கு தலித் வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்காக டெஸ்ட் ஆடியிருக்கிறார்கள். விரைவில் சாதிய தடுப்புகளை உடைத்தெறிந்து விளையாட்டை ஏற்றத்தாழ்வு இல்லாமல் மாற்றுவதுதான் பலூவுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism