Published:Updated:

`மீண்டு வாங்க Men in Blue!' - தொடர் வெற்றிகள் டு `தொடர்' தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை?

ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் ( Anjum Naveed )

போட்டிகளின் முடிவுகள்தான் ஒரு வீரரின் செயல்பாடு சிறப்பானதா இல்லையா என்று இப்போது நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் ஒரு கேப்டனின் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும் இருக்கிறது. இது எவ்வளவு தவறான அணுகுமுறை!

`மீண்டு வாங்க Men in Blue!' - தொடர் வெற்றிகள் டு `தொடர்' தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை?

போட்டிகளின் முடிவுகள்தான் ஒரு வீரரின் செயல்பாடு சிறப்பானதா இல்லையா என்று இப்போது நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் ஒரு கேப்டனின் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும் இருக்கிறது. இது எவ்வளவு தவறான அணுகுமுறை!

Published:Updated:
ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் ( Anjum Naveed )
இலங்கை அணியிடம் தோற்று யாரும் எதிர்பாராத விதமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோற்கும் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது ரோஹித்தின் அணி. அதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. என்னதான் பிரச்னை, இது இந்திய அணியை எந்த வகையில் பாதிக்கும்?!

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ஆன பிறகு, அவர் தலைமையில் தொடர் வெற்றிகளை மட்டுமே சந்தித்து வந்தது இந்திய அணி. உலகக் கோப்பை விரைவில் வரும் நிலையில், இந்திய அணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றே அனைவரும் கருதினர். பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து போன்ற அணுகுமுறையை இந்திய டி20 அணியும் கடைப்பிடித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி மிரட்டியது.

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
Anjum Naveed

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லும் என்று பலரும் கணித்தார்கள். இந்த அணியில் யார் இடம் பிடிக்கவேண்டும் எனப் பல விமர்சகர்களும் பல மாதங்களாக ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர், உலகக் கோப்பைக்கான ஒரு மாதிரியாகக் கருதப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே தொடரைச் சிறப்பாகத்தான் தொடங்கியது இந்தியா. பாகிஸ்தான் அணிக்கெதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது. இருந்தாலும் அந்தப் போட்டியில் இந்திய அணியின் அணுகுமுறை விமர்சிக்கப்பட்டது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்ய, கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டியதால்தான் இந்தியா நல்ல ஸ்கோரை எட்டியது. அதுபோக ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் இந்திய பௌலர்களை எளிதாக எதிர்கொண்டதும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இப்போது இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து தோற்றிருப்பது பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. முதலில் இந்தப் போட்டிகளில் என்னென்ன பிரச்னைகள் வந்தன?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர்பிளேவிலேயே இந்திய அணி 62 ரன்கள் எடுத்து அசத்தியது. ஆனால் அந்தத் தொடக்கத்தை அவர்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் சேர்க்கவே இல்லை. விராட் கோலியும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் தடுமாறினார். அதனால் கடைசியில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

அடுத்து பந்துவீச்சிலும் ஒரு சொதப்பல். ஆசிஃப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தது பாகிஸ்தானின் வெற்றியை எளிமையாக்கியது. இருந்தாலும் அனைவரும் அர்ஷ்தீப் பற்றியே விவாதித்ததால் அந்தப் போட்டியில் புவியின் ஓவர் பெரிதாகப் பேசப்படவில்லை.

ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங்
ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங்
Anjum Naveed

இலங்கை அணிக்கெதிரான போட்டியிலும் கிட்டத்தட்ட இவை எல்லாமே மீண்டும் அரங்கேறின. ரோஹித் ஷர்மா மட்டும் சிறப்பாக ஆட, மற்ற அனைவருமே சொதப்பினார்கள். அதனால் இந்தியா 173 ரன்கள்தான் எடுத்தது. இலங்கை வெற்றி பெற 2 ஓவர்களுக்கு 21 ரன்கள் தேவை என்றபோது இம்முறையும் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார் புவனேஷ்வர் குமார். என்ன, 5 ரன்கள் குறைவாக 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இப்போது இந்திய அணி மீது அளவு கடந்த விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ரோஹித் ஷர்மா, புவி, கே.எல்.ராகுல், கோலி எனப் பலரும் விமர்சனத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். கோலி பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல ரன்ரேட் வைத்திருக்கவில்லை, ராகுல் சரியான தொடக்கம் கொடுக்கவில்லை, புவி சரியாக ஆட்டத்தை முடிக்கவில்லை, ரோஹித் ஒரு கேப்டனாக பல முடிவுகளைச் சரியாக எடுக்கவில்லை, களத்தில் அவர் நடந்துகொண்ட விதம் சரியில்லை என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வீரர்களின் செயல்பாடுகளை நாமும் அலசி அவர்கள் சரியாக ஆடினார்களா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதற்குப் பதிலாக இந்த விமர்சனங்களைச் சற்று அலசுவோம். முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் டாப் ஆர்டர் அளவு கடந்த விமர்சனங்களுக்கு ஆளானது. ரோஹித், ராகுல் இருவரும் தடுமாறினார்கள். ராகுல் காயத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதைப் பற்றிக்கூட யோசிக்காமல் அவர் டி20 கிரிக்கெட்டே ஆடக்கூடாது என்கிற ரீதியில் பலரும் சாடினார்கள். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் அடங்கிய மிடில் ஆர்டர்தான் இந்திய அணியைக் காப்பாற்ற வேண்டும் என்று புலம்பினார்கள். ஆனால் அடுத்த இரண்டே போட்டிகளில் அது மாறிப்போனது.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களின்போது புவனேஷ்வர் குமார் பெரிதாகக் கொண்டாடப்பட்டார். அவர் வயதே ஆகாத மார்க்கண்டேயர், கொண்டாடப்படாத மேட்ச் வின்னர் என்றெல்லாம் பாராட்டித் தள்ளினார்கள். பாகிஸ்தான் அணிக்கெதிரான இந்த ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது, அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகம் ஆனபோது விளையாடியதை நினைவு கூர்ந்து நாஸ்டால்ஜியாவில் திளைத்திருந்தார்கள். அதுவும் வெறும் 3 போட்டிகளுக்குள்ளாகவே மாறியிருக்கிறது!

தீபக் ஹூடா
தீபக் ஹூடா
Anjum Naveed

ஒரு வீரரின் செயல்பாடு எல்லா போட்டிகளிலும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை. சில போட்டிகளில் தோல்விக்கும் அந்தச் செயல்பாடுகள் காரணமாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டை ஆரோக்கியமான முறையில் விமர்சிப்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக அவர்கள் அவ்வளவுதான் என்று கூறுவது சரியான விஷயம் இல்லையே! விராட் கோலிக்கு அவகாசம் தேவைப்படும் எனில் புவனேஷ்வர் குமாருக்கும் அதைக் கொடுக்கலாம்தானே?!

அதேபோல் ரோஹித்தின் கேப்டன்சியும் இப்போது விமர்சிக்கப்படுகிறது. தீபக் ஹூடாவை லோயர் மிடில் ஆர்டரில் ஆட வைத்தது, அவர் அணியில் இருக்கும்போதும் ஓவர் கொடுக்காதது, அஷ்வினை எடுக்காதது எனப் பல விஷயங்களுக்காக ரோஹித் இப்போது விமர்சிக்கப்படுகிறார்.

ஹாங்காங் அணிக்கெதிரான போட்டிக்குப் பிறகு, ரோஹித்தின் பாடி லாங்குவேஜ் சரியில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ் கூறியிருந்தார். அதற்கு, "ரோஹித் மிகச் சிறந்த கேப்டன். அவருக்கு எப்படி வெற்றி பெறவேண்டும் என்று தெரியும்" என்று ரோஹித் புகழ் பாடினார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால், இன்று இரண்டு போட்டிகளுக்குள்ளாகவே ரோஹித் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்!
போட்டிகளின் முடிவுகள்தான் ஒரு வீரரின் செயல்பாடு சிறப்பானதா இல்லையா என்று இப்போது நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் ஒரு கேப்டனின் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும் இருக்கிறது. இது எவ்வளவு தவறான அணுகுமுறை!

சரி, இந்திய அணி தவறே செய்யவில்லையா என்றால், அப்படியும் சொல்லிவிடவில்லை. இந்திய அணி சில தவறுகள் செய்திருக்கிறது. தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் டாப் 4 பொசிஷன்களில் விளையாடுபவர்கள். அவர்களை இந்திய அணி 5 - 7 பொசிஷன்களில் விளையாட வைத்திருக்கிறது. லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கை வெளியே அமர வைத்தது. இந்த முடிவுகள் நிச்சயம் இந்திய அணிக்குப் பிரச்னைகளாக அமைந்தன. இது கோலி - சாஸ்திரி காலத்தில் இந்திய அணியைப் பெரிதும் பாதித்த விஷயம். இதை ரோஹித் - டிராவிட் கூட்டணியும் செய்து கொண்டிருப்பது நிச்சயம் ஏமாற்றம் தரக்கூடியதுதான்.

இந்திய அணி | Men in Blue
இந்திய அணி | Men in Blue
Anjum Naveed

ஆனால் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். இதுவரை ரோஹித் தலைமையில் பெரிய தவறுகள் ஏதும் நிகழவில்லை. ஒரு முறை நடந்ததற்கே இந்திய ரசிகர்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள். இந்திய அணியால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க முடியாது. அதேபோல் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடமும் தோற்க நேரிடும். எதிரணி மிகச் சிறப்பாக ஆடும்போது அது எந்த அணியாக இருந்தாலும் தோல்வி நேரக்கூடும். அதைப் புரிந்துகொள்வதும் அவசியம். வெறும் முடிவுகளை வைத்து ஒரு அணியின் செயல்பாட்டை விமர்சிப்பது சரியான போக்கு அல்ல! வெற்றியை மட்டுமே மதிப்பீடாக வைத்துக் கைதட்டும் ரசிகர்கள், கள யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு விமர்சித்தல் நலம். ஏனென்றால், ஒரு டி20 போட்டியின் முடிவில் வெற்றி பெறும் அணி என்பது அந்தக் குறிப்பிட்ட மூன்று மணிநேரத்துக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அணி மட்டுமே!

இந்திய அணியும், கேப்டன் ரோஹித்தும் ஆசியக்கோப்பைத் தோல்வியிலிருந்து மீண்டுவந்து, அடுத்தடுத்த போட்டிகளில் ஜொலித்து, வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையிலும் சாதிப்பார்கள் என்று நம்புவோம்.

மீண்டு வாங்க Men in Blue!