சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தற்போது நேரம் சரியில்லை எனத் தெரிகிறது. உலகக்கோப்பை தொடர் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் வர்ணனை செய்யும் அவர் தோனியின் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி மோசமாக விளையாடுவதாகவும் கூறினார். ரவீந்திர ஜடேஜா சிறுமைப்படுத்தும் விதமாகப் பேசியிருந்தார். நான் அந்தத் துண்டு வீரரின் ரசிகன் இல்லை. 50 ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், அவர் இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், அவர் நல்ல பந்துவீச்சாளர். ஒரு நாள் கிரிக்கெட்டில் நடந்த சில விஷயங்களை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது எனப் பேசினார்.

சஞ்சய் மஞ்சரேக்கருக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. சிலர், `மஞ்சரேக்கர் வர்ணனை செய்ய வந்தாலே நாங்கள் டிவியை மியூட் செய்துவிடுகிறோம். வர்ணனை இல்லாமல்தான் போட்டியைக் காண்கிறோம்' எனச் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி எப்போதும் தன் மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக ரியாக்ஷன் காட்டமாட்டார். தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக நடந்துகொள்வார். தோனி மூத்த வீரர். இதுபோன்ற விவகாரங்களை அவர் அமைதியாக எதிர்கொள்வார்.

ஜடேஜா இளம்வீரர். அவரிடம் அவ்வளவு பொறுமையை எதிர்பார்க்க முடியுமா... மஞ்சரேக்கரை ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார். ``நீங்கள் விளையாடியதைவிட இரண்டு மடங்கு போட்டிகளில் விளையாடியுள்ளேன். இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறேன். முதலில் சாதனையாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீண் பிதற்றல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.