ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தாய்லாந்தில் மூன்று மாத ஓய்வுக்காகச் சென்றிருந்தவர் தன்னுடைய வில்லாவில் எந்தவித அசைவும் இல்லாமல் இறந்திருக்கிறார். மாரடைப்பாக இருக்கக் கூடும் என்று அவரது நிர்வாகம் சிறிய குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
"ஷேன் அவரது வில்லாவில் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்தார். மருத்துவப் பணியாளர்களின் முயற்சிகளினாலும் அவரை மீட்க முடியவில்லை. அவருடைய குடும்பம் இந்த நேரத்தில் பிரைவசியை எதிர்பார்க்கிறது. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வழங்கப்படும்" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

708 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வார்னே, தாய்லாந்து Koh Samui பகுதியில் உள்ள அவரது வில்லாவில் தன் மூன்று நண்பர்களுடன் தங்கியிருந்தார். வார்னேவின் நெருங்கிய நண்பரும் உதவியாளருமான ஆண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) அவரை மீட்கச் செய்த முயற்சிகள் வீணாகின. இதே ஆண்ட்ரூதான், ஷேன் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருந்தவர்.
ஷேன் வார்னேவின் மேனேஜர் ஜேம்ஸ் எர்ஸ்கின் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஷேன் மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதுதான் அவரது விடுமுறையின் தொடக்கம். ஒரு நாள் இரவுக்கு முன்புதான் அவர்கள் சென்றார்கள். வழக்கமாக 5 மணிக்கு மது அருந்த வெளியே செல்வார்கள். 5.15க்கு ஆண்ட்ரூ கதவைத் தட்டுகிறார். ஷேன் எப்போதும் நேரத்தைக் கடைபிடிப்பவர், 'வா லேட் ஆகப் போகிறது' என்று எப்போதும் சொல்லக் கூடியவர், பின்னர்தான் ஏதோ தவறாகியிருப்பதை ஆண்ட்ரூ உணர்ந்துள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவர் அவசர உதவி கொடுக்க முயன்றும் பலனில்லை. அதற்கு பின் சீக்கிரமே அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவிக்கிறார்.
முதலுதவி குழு ஒன்றும் விரைந்து வந்து அவசர உதவி (CPR) அளித்திருக்கின்றது. 10 - 20 நிமிடங்கள் அவர்களும் போராடியிருக்கிறார்கள். ஆனால், ஷேன் வார்னேவைக் காப்பாற்ற முடியவில்லை.

வார்னே உடல் அங்கிருக்கும் லோக்கல் மருத்துவமனையில் நடக்கும் பிரேத பரிசோனைக்குப் பிறகு அவரது நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. "எப்போதைக்குமான சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஷேன் ஒருவர்" என ஆஸ்திரேலிய அரசு தன் இரங்கலைத் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அரசு மரியாதையுடன் ஷேன் வார்னேவின் இறுதி மரியாதை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.